"ஊருக்கு உழைக்கக் கூடியவர்கள் உங்கள் ஊரிலும் இருப்பார்கள், அவர்களுக்கு வாக்களியுங்கள். அவர்களை தேர்ந்தெடுங்கள். !"
இதோ நெருங்கிவிட்டது உள்ளாட்சி தேர்தல். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இருந்த கெடுபிடி அவ்வளவாக இந்த தேர்தலில் இல்லை. திரும்பிய திசையெல்லாம் விழாக்கோலம் பூண்டு, மைக், ஸ்பீக்கர் கட்டி, வித விதமான பிளக்ஸ் அடித்து, சுவரெங்கும் போஸ்டர் ஒட்டி ஊரையே உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் வேட்பாளர்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 17ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதியும் நடைபெறுகிறது.
என்றும் இல்லாத புதுமையாய், இன்று எல்லா அரசியல் கட்சிகளும் 'தண்ணிரில் நனைந்த நாய், உடலை உதறிக் கொள்ளுமே' அப்படி உதறிக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன. இனி யாரொடும் யாருக்கும் கூட்டு இல்லை, 'தனித்தே நிற்போம். தனித்தன்மை காப்போம்' என்று வெற்று சவடால் விட்டு மூலைக்கு ஒருவராய் ஆட்டோவிலும், குட்டி யனையிலும் புழுதிப்பறக்க அலைந்துக் கொண்டு இருக்கின்றனர்.
பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக பரப்பரப்போடு இருக்கிறது இந்த தேர்தல். தடுக்கி விழுந்தால் வேட்பாளர்கள் மீதுதான் விழவேண்டும். அந்த அளவிற்கு இருக்கிறது வேட்பாளர்கள் எண்ணிக்கை. சுமார் 4.11 லட்சம் பேர் களத்தில் இருக்கின்றனர். இதில் இன்னோரு கூத்து... சில இடங்களில் மாமியார் மருமகள் போட்டி, மாப்பிள்ளை மச்சான் போட்டி, மாமனார் மருமகன் போட்டி என்று தேர்தல் களம் நன்றாகவே கிறுக்குப் பிடித்துக் கிடக்கிறது.
இதனால் யாருக்கு வாக்களிப்பது, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது. எந்த கூட்டணிக்கு (?) வாக்களிப்பது என வாக்காள பெருமக்கள் மிகவும் குழம்பிப் போய் கிடக்கின்றனர்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று குழம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க நகர நிர்மானம், வார்டு, கிராமம் மற்றும் பஞ்சாயத்துகள் பராமரிப்பு என்பதால், இங்கு நாம் ஓட்டளிக்கவேண்டியது கட்சியைப் பார்த்தல்ல, பணபலத்தை பார்த்தல்ல. நாம் பார்க்கவேண்டியது தனிமனிதனை மட்டுமே.
ஊருக்கு உழைக்கக் கூடியவன் உங்கள் ஊரிலும் இருப்பான். அவனுக்கு வாக்களியுங்கள் அவனை தேர்ந்தெடுங்கள்.
பணம், சாதி, வசதிபடைத்தவன், ஆளுங்கட்சி, எதிர்கட்சி, உறவுக்காரன், பிடித்தவன் பிடிக்காதவன் என்று வழக்கம்போல் மனதை அலையவிடாமல் சுய சிந்தனை உள்ள, பொது நலனில் அக்கரைக் கொண்டு ஊருக்கு உழைக்கக் கூடிய மனிதனைதான் நாம் தேடவேண்டும். பணபலமின்றி கால் செருப்பு தேயத் தேய எல்லா ஊரிலும் ஒருவன் ஊருக்காக உழைத்துக் கொண்டு இருப்பான்.
யாருக்கேனும் எதாவது என்றால், எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து அவன் எழுதும் கடிதம் அந்த மாவட்ட ஆட்சியரையே
அந்த ஊருக்கு வரவழைத்துவிடும். தாலுகா ஆபிஸ், வட்டார அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் , காவல்துறை என்று சகல இடத்திற்கும் புகுந்து புறப்பட்டு வரக்கூடிய ஆளாக அந்த ஆள் இருப்பார்.
அடிப்படை சட்ட அறிவும் அத்தகைய மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கும். அவர்களைத்தான் நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களுக்குத்தான் தமது ஊரைப் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்கும். எங்கே என்ன உதவி தேவைப்படும் என்று அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்பார்கள்.
பணபலமின்றி ஆள்பலமின்றி ஊருக்காக இயங்கும் அவர்களுக்கு அதிகாரபலம் கிடைத்தால் நிச்சயம் இன்னும் ஊக்கமாக செயல்படுவார்கள். எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலில் அத்தகைய மனிதர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவோம்.
4 கருத்துகள்:
ஊருக்கு(ள்) உழைப்பவர்களுக்கு வாக்களிக்கவா சொல்கிறீர்கள்?
அதாவது...தன் நலன் கருதாமல் பொது நலன் காணுபவர்களுக்கு!
// வெட்டி பெருமைக்கு நின்று... தான் தேடிய செத்துகளை காக்கவும், மேலும் சொத்து சேர்க்கவும் நினைக்கும் நிஜ அரசியல்வாதிகளை இத் தேர்தலில் புறந்தள்ளுவோம். //
aamaam.. vaalththukkal
"நன்றி சரவணன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சந்திப்பு. வாழ்த்துக்கள்."
கருத்துரையிடுக