வெள்ளி, டிசம்பர் 30, 2011
திங்கள், டிசம்பர் 26, 2011
குடும்பத்தினர் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவது பாதுகாப்பானதா....?
"விமான பயணத்தின்போது நானும் எனது மனைவியும் சேர்ந்து பயணம் செய்வதில்லை. நான் ஒரு நாள் முன்னதாகவோ... அல்லது அடுத்தடுத்த... விமானத்திலேயோ பயணம் செய்வோம். எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து எங்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் கூட, ஒருவர் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றலாமே... என்பதால்தான்" என்றார் இந்தி நடிகர் அமிதாப்பச்சன்.
இந்தியாவின் புகழ் வாய்ந்த நடிகர் இப்படி சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 'என்ன அமிதாப்பச்சன் இப்படி முன்னெச்சரிக்கை முத்தண்ணாவக இருக்கிறாரே..? ' என்று நாம் கிண்டல் செய்யலாம்.!. ரெண்டு பேர் சேர்ந்து போனா என்ன உடனே செத்தாப்போயிடுவாங்க என்று கூட கேட்கலாம்?.
ஆனால், சென்னை பழவேற்காட்டில் நடந்த துயரச் சம்பவம், அவர் சொன்னது சரிதானோ என்று நினைக்கத் தோன்றியது.
![]() |
21 பேரும் ஒரே இடத்தில் |
முதலில் இது சாதாரண மற்றுமொரு விபத்து என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நேரம் செல்ல செல்லத்தான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது. இறந்தது அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்ற போது.... தமிழகமே உறைந்து போனது!.
கிருஸ்துமஸ் (ஞாயிறு) அன்று சென்னை பழவேற்காட்டில் நடந்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்சிக்குள்ளாக்கியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22
பேர் நீரில் முழுகி இறந்துள்ளனர். சுந்தர பாண்டியன் அவரது மனைவி ஜெயஜோதி, அவரது ஒரு மகள், 4 மகன்கள் , அவர்களது மனைவிகள்
மற்றும் மகன் மற்றும் மகளின் குழந்தைகள் என்று மொத்த குடும்பமே பலி ஆகியிருக்கிறார்கள்.
பொதுவாக இந்த துயரச் சம்பவங்கள் விடுமுறை நாள்களில்தான் அதிகம் நடைபெறுகிறது.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் குடும்பத்தினர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அந்தக் கொண்டாட்டம் பாதுகாப்பானதா என்பதுதான் கேள்விக்குறி.
ஒரே குடும்பத்தில் அதுவும் 22 பேர் இறப்பதென்பது கனவிலும் நடந்திராத ஒன்று.
பழவேற்காடு சம்பவத்தில் அந்த குடும்பத்தினர் பாதுகாப்பு விஷயத்தில் கொஞ்சம் கூட அக்கறைக் கொள்ளவில்லை
பழவேற்காடு சம்பவத்தில் அந்த குடும்பத்தினர் பாதுகாப்பு விஷயத்தில் கொஞ்சம் கூட அக்கறைக் கொள்ளவில்லை
என்பது நன்றாகவேத்தெரிகிறது. முன்னெச்சரிக்கை இல்லாவர்களால், இன்று அனைவரும் தங்களது உயிரை இழந்ததோடு மட்டுமல்லாமல்,
மூன்று சிறுவர்களையும் அனாதைகளாக தவிக்க விட்டுள்ளனர்.
ஏதோ...மொத்தக் குடும்பமும் தரையில் பிரயாணம் பண்ணுவதுபோல் பிரயாணம் செய்துள்ளனர். தரை வேறு தண்ணிர் வேறு என்பதை அவர்கள் அறியவில்லை கொஞ்சம் கூட உணரவில்லை. ஒரு சிறு தவறு பெரும் விபத்தினை தோற்றுவித்துள்ளது.
தேவை முன்னெச்சரிக்கை !
திருமணம், காதுகுத்தி, குடும்ப நிகழ்ச்சிகள், துக்க காரியம் போன்றவற்றிக்கு செல்லும்போது வேனிலோ அல்லது லாரியிலோ புளிமூட்டை போல் திணித்துக் கொண்டு செல்கின்றனர். ஒரு வளைவில் திரும்பும்போது, வண்டி மொத்தமாய் கவிழ்ந்து பெரும் உயிர் பலி ஆகின்றது.
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர், சென்னைக்கு அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் டிராக்டரில் திருமணத்திற்கு சென்றவர்களை பெட்ரோல் டேங்கர் லாரி மோதி அனைவரும் எரிந்து சாம்பலாயினர், என்பது நினைவிருக்கலாம்.
நம்மில் பெருவாரியான மக்கள் பிரயாணத்தின் போது பாதுகாப்பைப் பற்றித் துளியும் கவலைப்படுவதில்லை. எந்த வண்டியில் எந்த அளவிற்கு ஏற்ற முடியுமோ அந்த அளவிற்குதான் ஆட்களை ஏற்ற வேண்டும். கொள்ளலவைத் தாண்டி ஏற்றும்போதுதான் அது விபத்தில் முடிந்துவிடுகிறது.
குடும்பத்தினர் கூடும்போது கவனிக்கவேண்டியவை.....
- கூடுமானவரை குடும்பத்தினர் எல்லோரும் ஒரே வண்டியில் பிரயாணம் செய்வதை தவிர்த்திடுங்கள்.
- சுற்றலா போகும் இடத்தில் படகு பயணம் என்றால் 'லைப் ஜாக்கெட்' பயன்படுத்துங்கள்.
- அப்படியே படகு பயணம் என்றால் எல்லோரும் ஒரே படகில் ஏற வேண்டாம். குழுவாக பிரிந்துக் கொண்டு பயணம் செய்யலாம்.
- சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபாத்தான பயணம் மேற்கொள்ளவேண்டாம்.
- முக்கியமாக நமக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்று நினைக்க வேண்டாம்.
வியாழன், டிசம்பர் 22, 2011
சென்னை புத்தகக் காட்சி விளம்பர தூதுவராக நடிகர் சூர்யா!
![]() |
சூர்யா |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சென்னையில் தொடங்க இருக்கும், 35வது சென்னை புத்தகக் காட்சிக்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22/12/2011) மதியம் சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, புத்தக அரங்க ஒதுக்கீடு நிகழ்ச்சியில் பப்பாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) இத் தகவலை தெரிவித்தார். 20 வினாடிகள் வரும் இந்த விளம்பரத்தில், சூர்யா... மக்களிடையே புத்தக வாசிப்பின் மகத்துவத்துவத்தை அறிவுறுத்தும்வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது...
சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு விருது!
"பொதுவாக மாடர்ன் ரைட்டர்ஸ்க்குதான் புத்தகக் காட்சியின் போது விருதுகள், பாராட்டுகள் வழங்கப்படுகிறது என்றும், சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர்கள் சென்னை புத்தகக் காட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உள்ளது. அதனால், அதை துடைக்கும் வகையில், இந்த வருடம் சீரியஸ் ரைட்டர்ஸ்க்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த வருட கலை நிகழ்ச்சியில் மாற்று நிறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதோடு, புத்தகத் துறையில் 30 வருடங்கள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும். புத்தகக் காட்சி அரங்கிற்குள் LCD டிவிக்கள் வைத்து குறந்த கட்டணத்தில், பதிப்பாளர்களுக்கு விளம்பரம் செய்துத் தரப்படும்." என்றார்.
எழுத்தாளர்களுடன் நேரடி உறையாடல்.
![]() |
எழுத்தாளர் ஞானி |
அடுத்து பேசிய எழுத்தாளர் ஞானி "இந்த முறை வாசகர்கள் எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்கும் பொறுட்டு, தினந்தோறும் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நடத்தப்படும். இதில் மொத்தம் 18 எழுத்தாளர்கள் பங்கேர்ப்பார்கள். எந்தந்த எழுத்தாளர்கள், வாசகர்களை சந்திப்பார்கள் என்பதை பின்னர் முடிவு செய்வோம். இந்த முயற்சியில் நான், பாரதி புத்தகலாயம் நாகராஜன், மற்றும் கிழக்கு பதிப்பகம் பத்திரி சேஷாத்ரி ஆகியோர் ஈடுப்பட்டுள்ளோம் " என்றார்.
முடிக்கும் போது...."இந்த முயற்சி எல்லாம் என்னுடையது அல்ல, இது முழுக்க முழுக்க பப்பாசியினுடையது" என்றார்... தப்பிக்கும் நோக்கில். தேர்வில் விடுப்பட்ட எழுத்தாளர்கள் தம் மீது கோபப்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகக் கூட இருக்கலாம்.
எப்போதும் பேண்ட் ஜிப்பாவில் வரும் ஞானி, இன்று வேஷ்டி ஜிப்பாவில் வந்திருந்தார். அதற்கே ஒரு ஷொட்டு கொடுக்கலாம்.
நன்றி: சூர்யா புகைப்படம் சவுத் ட்ரீம்ஸ்.
செவ்வாய், டிசம்பர் 20, 2011
தூங்காதே பெண்ணே தூங்காதே...!
விளம்பரம் ஏக பொருத்தம் !
![]() |
No Comments! |
இன்றைய தினமணியில் (20/12/2011) முதல்பக்கத்தில் சசிகலா நீக்கம் பற்றிய செய்தியும், அதற்கு கீழே...'லலிதா ஜூவல்லரி' விளம்பரமும் வெளியாகியிருக்கிறது. மேலே உள்ள செய்திக்கு கீழே உள்ள விளம்பரம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது.
இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.
இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.
திங்கள், டிசம்பர் 19, 2011
ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலா அதிமுவில் இருந்து நீக்கம்.
சசிகலா உட்பட அவரது குடுத்தினர் எல்லோரும் அதிமுகவிலிருந்து நீக்கம்.

சசிகலாவை அவர் கட்சியிலிருந்துதான் வெளியேற்றி உள்ளார் போயஸ் கார்டனலிருந்து அல்ல என்பது குறிபிடத்தக்கது. கொஞ்ச நாளாய் புகைந்துக் கொண்டு இருந்த ஒரு விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சனி, டிசம்பர் 17, 2011
இந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்!. பகுதி 2
பார்சிக்களின் வரலாறும் - வாழ்க்கையும் !
முந்தைய பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும்....
இந்தியாவில் பார்சிக்கள்.
பொழுது புலர்ந்தது. கடற்கரையில் ஆரவாரம் கேட்டு உள்ளூர் மக்கள் கடற்கரைக்கு திரண்டனர். வெள்ளை வெள்ளேரென்று ஒரு சிறு கூட்டம் சிறு சிறு படகுகளில் வந்து இறங்கியிருந்தது. வந்தவர்கள் மிக அழகான தோற்றம் கொண்டவர்களாக இருந்தனர். நல்ல உயரமும், அகன்ற தோள்களும், எடுப்பான நாசியும் பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றத்தில் இருந்தனர்.
வந்தவர்கள் யார் என்ன என்று வினவிய உள்ளூர் மக்கள், உடனே மன்னனுக்கு தகவல் தெரிவித்தனர். மன்னன் அந்தக் கூட்டத்தின் தலைவனை அழைத்துவரச் சொன்னான்.
" யார் நீங்கள் எதற்கு வந்திருக்கின்றீர்கள்?" என்றான் மன்னன்.
வந்தவர்கள் யார் என்ன என்று வினவிய உள்ளூர் மக்கள், உடனே மன்னனுக்கு தகவல் தெரிவித்தனர். மன்னன் அந்தக் கூட்டத்தின் தலைவனை அழைத்துவரச் சொன்னான்.
" யார் நீங்கள் எதற்கு வந்திருக்கின்றீர்கள்?" என்றான் மன்னன்.
![]() |
பெர்ஷியன்ஸ் |
"மன்னா...நாங்கள் பெர்ஷியா (ஈரான்) தேசத்தவர். எங்கள் நாட்டில் எங்களை மதம் மாறச் சொன்னதாலும், தொடர்ந்து எங்களுக்கு இன்னல் செய்து, எங்கள் இனத்தாரை அங்கிருந்த அன்னிய அரசு அழித்ததாலும், நாங்கள் அடைக்கலம் தேடி வந்திருக்கின்றோம். அடிப்படையில் நாங்கள் வியாபாரிகள். எங்களது குலத் தொழிலே வியாபாரம் செய்வதுதான். எங்களுக்கு இங்கு இருக்க இடமும், வியாபாரம் செய்யவும் அனுமதித்தால் நாங்கள் பிழைத்துக் கொள்வோம்" என்றான்.
அதற்கு மன்னன். " நீங்களோ வேற்று தேசத்தவர், அதோடு வேற்று மதத்தையும் சேர்ந்தவர்கள். மொழியும் வேறு, உங்களை இங்கு தங்க அனுமதித்தால் அது எனது மக்களை பாதிக்கும். நாங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் உங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். நீங்கள் இங்கு தங்க அனுமதிக்க முடியாது " என்றான் மன்னன்.
" மன்னா எங்களுக்கு சிறிது காலம் கொடுங்கள், நாங்கள் உங்கள் மொழியை கற்றுக் கொள்கிறோம். உங்கள் மக்களோடு இணைந்து வாழ்கின்றோம். அவர்களுக்கு எப்போதும் தீங்க செய்ய மாட்டோம்." என்றான் அந்தக் கூட்டத்தின் தலைவன், மன்னனைப் பார்த்து....மன்னா கொஞ்சம் பாலும் சக்கரையும் கொடுங்கள்" என்றான்.
பாலும் சக்கரையும் வந்தது.
பாலில் சக்கரையை போட்டு கரைத்த அந்த தலைவன், பாலை மன்னனிடம் நீட்டி அருந்தச் சொன்னான். "மன்னா...இனி நாங்கள் இப்படி இருப்போம். உங்களொடு கலந்து இருப்போம்" என்றான்.அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன், அவர்களுக்கு தங்க இடமும், அவர்கள் கோயில் கட்டிக் குடியேற நிலமும், வியாபரம் செய்யவும் அனுமதித் தந்தான்.
பார்சிக்கள் இந்தியாவில் குடியேறியதைப் பற்றி இப்படி ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.
ஆனால், உண்மையில் அப்படி அல்ல....
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சாஞ்சன் என்ற தீவில்தான், பார்சிக்கள் முதன்முதலில் குடியேறினார்கள்.
![]() |
கடவுளர்கள் |
(தற்போது குஜராத்) அந்தப் பகுதியை ஜாதி ராணா என்ற அரசன் ஆண்டுவந்தான். பார்சிக்களை யாரும் தங்க தட்டில் வைத்து அழைக்கவில்லை. குடியேறியது முதல் அவர்கள் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வந்தனர். பார்சிக்கள் இந்தியாவில் காலடி வைத்ததுப் பற்றிய ஒரு பாடல் சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது. கிபி 1600ம் வருடம் பார்சிக்களின் மதகுரு பொஹ்மன் கைகோபாத் இதை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.
குஜராத் 'சாஞ்சனில்' குடியேறிய பார்சிக்கள் 10ம் நூற்றாண்டில் குஜராத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரவியிருந்தனர். அங்க்லேஷ்வர், பரூச், கம்பத், நவ்சாரி, சூரத், வாங்கனெர் மற்றும் வாரியவ் போன்ற நகரங்களில் பிற்பாடு இடம்பெயர்ந்தார்கள்.
1290 வாக்கில் குடியேறிய இடத்தின் பெயரை வைத்தே அவர்கள் 5 மத பிரிவுகளாக (குழுக்களாக) பிரிந்தனர். பகாரியஸ் (நவ்சாரி), பரூச்சா, கோதாவரா (சூரத்), , கம்பட்டா, சாஞ்சனாஸ் என்று வழிபாடு முறைகளின் வேறுபாட்டின் மூலம் அழைக்கப்பட்டனர். (About the year 1290 the Parsis were under 5 different groups of priests based on the geographical location in Gujarat. These priestly groups were: The Bhagarias (Navsari), Bharucha, Godavra (Surat), Khambatta and Sanjanas )
போர்புரிந்த பார்சிக்கள்.
பார்சிக்களை இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 11ம் நூற்றாண்டில் ராஜபுதானத்து அரசு அவர்கள் மீது விதித்த அதிகப்படியான வரியை கட்டாமல் அரசை எதிர்த்தனர். சிறிது காலம் கழித்து ராஜபுதானத்து அரசு, வரி வசூலிக்க அனுப்பிய படைகளோடு சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தனர்.
![]() |
பார்சி வழிப்பாட்டுத்தளம். |
பார்சிக்களில் ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் தீரமுடன் இருந்துள்ளனர். ராஜபுதானத்துப் படைகளை ஒரு பெண் தனியாக நின்று எதிர்த்திருக்கிறாள். அவளின் நினைவாக வருடம் தோறும் சூரத் நகரில் விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகரித்தது. 1400ல் ஹிந்துக்களின் நகரான சஞ்சன் நகரை முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள். வடக்கு குஜராத்தை ஆண்டு வந்த ஹிந்து மன்னன் பார்சிக்களின் துணையை நாடினான். அவர்கள் இந்து அரசனுக்கு 1400 பார்சிக்களைத் தந்து உதவி புரிந்தார்கள்.
மூஸ்லீம்கள் மீண்டும் பெரும் படையைத் திரட்டி சஞ்சன் நகரை துவசம் செய்தனர். அதற்குள் பார்சிக்கள் தங்களது புனித 'தீ' யை கைப்பற்றி, அருகில் உள்ள பெக்ரூட் என்ற மலையில் பத்திரப்படுத்திக் கொண்டனர். .
பார்சிக்கள் இந்தியா வந்ததன் நோக்கமே...தங்களது மதத்தைக் காப்பற்றிக் கொள்ளத்தான். ஆனால் நடந்தது வேறு.....?
மறக்க முடியாத சில மார்கழி நினைவுகள்....!
இன்று தொடங்கி பொங்கல் வரை மார்கழி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விடியற்காலையிலேயே விழித்தெழும் மக்கள் வீடு வாசல் பெறுக்கி, வாசலில் மா கோலம் போட்டு 'மார்கழியை' வரவேற்கத் தொடங்கிவிடுவர். அடிப்படையில் குளிர் நிறைந்த பனிக் காலத்தில் தொடங்கும் மார்கழி மாதம், ஒரு இதமான தட்பவெப்ப நிலையிலேயே இருக்கும்.
வெயில் கூட கொஞ்சம் *ஒனக்கையா இருக்கும்.
கோயில்களில் ரேடியோ செட் கட்டப்பட்டு இரு வேளையும் எல்.ஆர் ஈஸ்வரி "மாரியாத்தா எங்கள் மாரியாத்தா...." என்று பாட.... . கூடவே டி.எம்.சொளந்தரராஜன் 'சந்தனமும் ஜவ்வாதும் ' என்று பாடிக்கொண்டு இருப்பார்.
அதுவரை புளியங் கொட்டை வியாபரம் செய்துவந்த ஏவாரி, " கோலமாவே....கலர் கலர் கோலமாவே" என்று சைக்கிளில் கோல மாவு அட்டையைக் கட்டிக் கொண்டு தெரு தெருவாய் சுற்றுவான்.
காலையில் பொம்மணாட்டி தொல்லையால முன்னாடியே எழுந்திடும், வீட்டு பெரிசுகள் அப்படியே ஒரு நட நடந்து கடத்தெருவில சூடா ஒரு டீயை குடிச்சுட்டு, ஒரு சுருட்டப் பத்த வச்சிக்கிட்டு ஊர் நாயம் உலக நாயம் பேச ஆரம்பிச்சிடுவாங்க.
கோலம் போடும் அம்மாவுக்கு ஒத்தாசை பண்றேன்னு....பக்கத்திலேயே கோட்டுவா ஓடுன...வாயோடு ஒக்காந்திருக்கும் வாண்டுகள். அந்தம்மாவும் பக்கத்தூட்டு வாசல பார்த்துக்கிட்டே , அவுங்க கோலம் பெரிசா நம்ம கோலம் பெரிசான்னுட்டு பார்த்துப் பார்த்து கோலம் போடும்.
வண்ணம் தீட்டி போட்ட கோலத்தில் நடுவில் வைக்க பறங்கிப் பூ தேடி கொல்லை கொல்லையாய் சுற்றி வரும் ஒரு கூட்டம். பெரும்பாலும் இந்த மாதங்களில் எல்லோர் வீட்டிலும் பறங்கி செடி போட்டு இருப்பார்கள். அதனால் பறங்கிப் பூ கிடைப்பது அப்படி ஒன்றும் கஷ்டமாக இருக்காது.
எங்கள் ஊரில் வைணைவர்கள் இல்லை என்பதால், இங்கு அந்த பஜனை எல்லாம் கிடையாது. ஊரைச் சுற்றி சிவன் கோயில்களே அதிகம். ஓதுவார்கள் விடியற்காலையில் சங்கு ஊதிக்கொண்டு மணி அடித்துக் கொண்டு, தேவாரம் திருவாசகம் பாடிக் கொண்டு செல்வார்கள். எங்கள் ஊரில் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு விரதம் இருந்து கன்னிப் பொங்கல் அன்று விரதம் முடிப்பார்கள்.
கோயில்களில் காலை மாலை இரு வேளையும் சிறப்பு வழிபாடு இருப்பதால், கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மார்கழி ஒன்றாம் தேதியிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நாள் 'மண்டகப்படி' உண்டு. அவரவர் வசதிப்படி அம்மனுக்கு பூஜைகள் செய்து பொங்கலிட்டு வழிபடுவார்கள். எங்கள் வீட்டு 'மண்டகப்படி' கன்னிப்பொங்கல் அன்று வரும்.
மார்கழி பனி நிறைந்த காலம் என்பதால், கிராமங்களில் எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாது. அந்த அளவிற்கு பனி அடர்த்தியாக இருக்கும். அப்போதுதான் பயிர் பச்சைப் பிடித்து கொஞ்சமாய் சூல் கொள்ள ஆரம்பிக்கும். மார்கழி மாத நடுவில் சூல் கொண்ட கதிரிலிருந்து பால்கட்டிய நெற்கதிரின் வாடை வரும். மார்கழி முடிவு அல்லது தை மாதத் தொடக்கத்தில் அறுவடைத் தொடங்கிவிடும்.
ஊரெங்கும் பச்சைப் பட்டு விரித்ததுபோல, வயல் வெளியெங்கும் கரும்பச்சையில் பூமித்தாய் பூரித்திருப்பாள். மார்கழி பீடை மாதம் என்பதால், எந்தவித சுப காரியமும் செய்யமாட்டர்கள். ஆனால், அந்த மாதம் முழுவதும் ஆன்மீகம் ரவுண்டுக் கட்டி அடிக்கும். ஊர் முழுசும் நான்வெஜ்க்கு தடா போட்டிருக்கும்.
()()()()()()()()()()()()()()()()()()
*இதமா.
வெள்ளி, டிசம்பர் 16, 2011
சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் மிகப் பெரிய புத்தகக்காட்சியாக வளர்ந்துவரும் சென்னை புத்தகக் காட்சி அடுத்தமாதம் (ஜனவரி) 5ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது.
35வது புத்தகக் காட்சி ஜனவரி மாதம் 5ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதிவரை நடைபெறுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையை உள்ளிட்டே அந்த நாட்களில் வருடம் தோறும் இக் காட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்ட ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) அவர்களின் தலைமையிலான பபாசி நிர்வாகிகள் குழு, முழு மூச்சுடன் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது!.
கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், இந்த முறை கண்காட்சியில் இடம் பெறுகின்றன. புத்தகக் காட்சியில் இடம் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்தவன்னமே இருக்கின்றது. அதேபோன்று புத்தகக் காட்சியில் இடம் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவில் உயர்ந்துதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
35வது புத்தகக் காட்சி ஜனவரி மாதம் 5ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதிவரை நடைபெறுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையை உள்ளிட்டே அந்த நாட்களில் வருடம் தோறும் இக் காட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்ட ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) அவர்களின் தலைமையிலான பபாசி நிர்வாகிகள் குழு, முழு மூச்சுடன் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது!.
கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், இந்த முறை கண்காட்சியில் இடம் பெறுகின்றன. புத்தகக் காட்சியில் இடம் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்தவன்னமே இருக்கின்றது. அதேபோன்று புத்தகக் காட்சியில் இடம் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவில் உயர்ந்துதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பல்வேறு இலக்கிய உரைகள், புத்தக வெளியீடுகள், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை பாட்டு மன்றம் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இம் முறை சென்னை சங்கமம் நடத்தப்படுமா...? என்று தெரியாத நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!
ஞாயிறு, டிசம்பர் 11, 2011
இந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்!.
பார்சிக்களின் வரலாறும் - வாழ்க்கையும் !
![]() |
பார்சிக்களின் வழிபாடு |
நவீன இந்தியாவில் பார்சிக்களின் பங்களிப்பு மகத்தானது. சுதந்திரதிற்குப் பிறகான வர்த்தக விரிவாக்கத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பார்சிக்கள். மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிகை கொண்ட பார்சிக்கள், ஜவுளி, எஃகு, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்களது பங்களிப்பை இந்தியாவிற்காக இதய சுத்தியுடன் ஆற்றியுள்ளனர். அவர்கள் பங்களிப்பின்றி இந்திய வர்த்தக உலகம் முழுமை அடைவதில்லை!.
அடிப்படையில் வியாபாரிகளான பார்சிக்கள், தங்களது உயர்வான வியாபார அனுகுமுறையால் இந்திய வர்த்தக உலகை எப்போதும் காப்பாற்றி வருகின்றனர். இந்தியாவின் வர்த்தக தலைநகராக மும்பையை மாற்றியது பார்சிக்கள்தான்.
1951ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.12 லட்சம் பார்சிக்கள் இருந்துள்ளனர். 2001ம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அதுவே 70 ஆயிரமாக குறைந்துவிட்டது. வர்த்தகத்தை பெறுக்கத் தெரிந்த பார்சிக்களுக்கு, தங்களது வர்க்கத்தை பெறுக்கத் தெரிந்திருக்கவில்லை? என்பது ஆச்சரியமான விஷயம்தான்!.
யார் இந்த பார்சிக்கள்? அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் இயல்பாக எழும்? அவர்கள் இந்தியாவிற்காக என்ன செய்துவிட்டார்கள்....? என்ற கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடும்?.
யார் இந்த பார்சிக்கள்? அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் இயல்பாக எழும்? அவர்கள் இந்தியாவிற்காக என்ன செய்துவிட்டார்கள்....? என்ற கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடும்?.
பார்சிக்களின் வியாபார சாம்ராஜ்ஜியத்திற்கு "டாடா" ஒரு சோறு' பதம்!.
டாடாவிற்கு புதிய தலைவர்.
![]() |
'சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி |
இந்தியாவில் முக்கால்வாசி இந்தியர்கள், தினந்தோறும் எப்படியாயினும் இந்த வார்த்தையை உச்சரிக்காமலேயோ, அல்லது பயன்படுத்தாமலேயோ இருக்க மாட்டார்கள். நகரம் முதற்கொண்டு சிறு கிராமம் வரை டாடாவின் ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது ஒரு இந்தியன் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பான். உப்பு, ரசாயனம், ஜவுளி, நிதி, உருக்கத் துறை, மோட்டார் வாகனத் தயாரிப்பு, தகவல் தொழிற்நுட்பம், மின் உற்பத்தி என பல்வேறு வர்த்தக நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் 143 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 379,675 கோடி (83 பில்லியன் டாலர்) வர்த்தகம் கொண்ட டாடா சாம்ராஜ்ஜியத்திற்கு 'சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி' புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 43 வயது கொண்ட சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் 6வது தலைவராவர். இளம் வயதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இவரே...!
கட்டுமான வியாபாரத்தில் மிக முக்கிய புள்ளியான பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்தான் இந்த சைரஸ் மிஸ்திரி. ஃபோர்பஸ் பத்திரிகையின் கூற்றுப்படி 8.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்பு கொண்ட, பார்சி சமூதாயத்தின் 'ரிச்சஸ்ட் பார்சி'யாவார். டாடா குடும்பத்தை சாராத இரண்டாவது தலைவரும் இவரே!. சைரஸ் மிஸ்திரியை நியமித்ததன் மூலம் தனது பார்சி தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது டாடா குழுமம் என்கின்றது தி நியு இந்தியன் எஃஸ்பிரஸ் நாளிதழ். டாடா குழுமத்தின் அதிகப்படியான பங்குளை கொண்ட முதலீட்டாளர் மிஸ்திரி, என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]() |
ரத்தன் டாடா |
73 வயதான ரத்தன் டாடா ஓய்வுபெற்றுவிட்டார். ரத்தன் டாடாவின் தலைமையில், உலக அளவில் மிகக் குறைந்த விலையில் நானோ காரை தயாரித்து, உலக மக்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்தது டாடா நிறுவனம். பல புதிய சாதனைகளை உலக அளவில் செய்தது டாடா குழுமம். தனிமை விரும்பியான ரத்தன் டாடா, திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன இந்தியாவின் கட்டமைப்பில் 'டாடா' என்ற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்று!. சுதந்திரத்திற்குப் பிறகான, இந்தியாவின் வளர்ச்சியில் டாடா குழுமத்தின் பங்கு மகத்தானது. 86 நாடுகளில் டாடா குழுமம் கிளை பரப்பி இருக்கிறது. உலக அளவில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் டாடா குழுமத்தில் பணிபுரிகின்றனர், என்கின்றபோதே... அதன் பிரம்மாண்டம் நமக்கு புரிந்திருக்கும்!.
பார்சிக்கள் யார்? / பார்சிக்களின் வரலாறு.
![]() |
வழிபாடு |
இந்தியாவில் பார்சிக்களின் வரலாறு 9 மற்றும் 10ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அடிப்படையில் ஈரான் நாட்டை சார்ந்த ஜொரொஸ்டியன் மதத்தை சார்ந்தவர்கள் பார்சிக்கள். அரேபியர்கள் ஈரானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, தங்களை இனரீதியாகக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.
அரேபியர்கள் ஈரானில் தங்களது மதமான இஸ்லாத்தை, பரப்பினார்கள். இஸ்லாம் மதத்தை பின்பற்றாதவர்களுக்கு 'ஜசியா' என்ற வரியை விதித்தனர். கடுமையான அந்த சட்டம் ஜொரொஸ்டியன் மதத்தை பின்பற்றி வந்த பார்சிக்களை கடுமையாக பாதித்தது. வரி கட்டாதவர்களுக்கு சாட்டை அடியும், கடுமையான சிறை தண்டனையும், அடிமையாக நாடு கடத்தவும் செய்தனர். சில நேரங்களில் மரணதண்டனையும் வழங்கப்பட்டது.
வரி கட்டாதவர்களுக்கு இந்த நிலை என்றால், வரி கட்டுபவர்களையும் கேவலமாக நடத்தினார்கள் வரி வசூல் செய்வர்கள்.
ஜொரொஸ்டியன் மத கோயில்கள் இடிக்கப்பட்டு, அங்கு மதரஸாக்கள் கட்டப்பட்டு இஸ்லாம் போதிக்கப்பட்டது. ஜொரொஸ்டியன் மத குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு, குரான் கற்றுத்தரப்பட்டது. அரேபியர்களின் நோக்கம் ஜொரொஸ்டியன்களை கொல்வதல்ல!, மாறாக அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதுதான் முக்கியமான வேலையாக இருந்தது.
![]() |
பார்சிக்களின் மதச் சின்னம் |
ஜொரொஸ்டியன் மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் அதிக ஒற்றுமைகள் காணப்பட்டன. சொர்க்கம் நரகம், ஆண்டவரின் இறுதித் தீர்ப்பு, தினமும் 5 வேளை தொழுகை (ஜொரொஸ்டியன் கீக்ஸ் - similar to the five Zoroastrian Gehs) போன்றவை இரு மதத்திற்கும் பொதுவானவையாக இருந்தன. இதனாலேயே சில ஜொரொஸ்டியன்களுக்கு மதம் மாறுவது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் பெரும்பாலான ஜொரொஸ்டியன்கள் அன்னிய மதத்தை ஏற்காமல், தங்களது மதத்தையே பின்பற்றிவந்தனர். தங்களது பிள்ளைகளுக்கு தமது மதத்தின் உயரிய கோட்பாடுகளைக் கூறி வளர்த்தனர்.
இரு மதங்களுக்கும் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும் வழிபடும் முறைகளில் மாற்றம் இருக்கத்தான் செய்தது. ஜொரொஸ்டியன்கள் கொழுந்து விட்டு எரியும் புனித நெருப்பையே கடவுளாக வணங்கினார்கள். மெக்கா திசை நோக்கி தொழுகை நடத்தவும், மண்டியிட்டு அல்லாவை வணங்கவும் அவர்கள் தயாரில்லை. இதனாலயே கலிபாக்களின் ஆட்சியில், அவர்களுக்கு மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில், ஈரானில் இஸ்லாம் தீவிரமாகப் பரப்பப்பட்டது. புனிதர் முகமதின் வழி வந்த கலிபாக்கள் ஈரானை ஆண்டு வந்தனர். இஸ்லாம் அல்லாத அல்லது மதம் மாறாத பிற மதத்தினர் அங்கு வாழ்வது கடினம் என்ற சூழல் ஏற்பட்டது. மதம் மாறாத பிற மதத்தினருக்கு கடும் இன்னல்கள் தரப்பட்டன. மதம் மாறாதவர்கள், செத்து ஓழிய வேண்டும் அல்லது சொந்த நாட்டை விட்டு ஓட வேண்டும், அல்லது அன்னிய மதத்திற்கு மாற வேண்டும். இதுதான் ஈரானின் அப்போதைய நிலை?
இனியும் இங்கு வாழ்ந்தால் தங்களையும் தங்களது மதத்தையும் காப்பாற்ற முடியாது என்றுணர்ந்த ஜொரொஸ்டியன்கள், 10ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு அடைக்களம் தேடி புறப்பட்டனர். ஒரு குழுவாக புறப்பட்ட அவர்கள், இந்தியாவில் மேற்கு கடற்கரையோரம் ஒரு தீவில் இறங்கினார்கள்.
-தொடரும்
உலகில் சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் எது தெரியுமா....?
பிறந்த மண்ணைவிட்டு பிரிவதுதான்.
பிறந்த மண்ணைவிட்டு பிரிவதுதான்.
செவ்வாய், டிசம்பர் 06, 2011
சென்னையைச் சுற்றி நான் எடுத்த புகைப்படங்கள்....
நமக்கு சென்னையை நீள அகலத்தில் அளக்கிற வேலை!. அதாங்க... மார்கெட்டிங் ஜாப். எங்க எதப் பார்த்தாலும் உடனே....ஒரு 'கிளிக்'. அப்படி சென்னையை சுற்றி அவ்வப்போது நான் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
![]() |
'உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் சிலை' |
![]() |
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும், எம்ஜிஆர். அது முடிந்த பின்னால்.... உறங்கும் இடம் இது...! 'கல்லறையில் காதுவச்சி கேட்டா....கடிகாரம் சத்தம் கேட்குமா....?' |
![]() |
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால். இப்போது புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் மறைந்திருக்கிறது. |
![]() |
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் எடுக்கப் பட்ட படம். நந்தவனம்.... |
![]() |
வடபழனி சரவணா பவன் ஹோட்டல் வாசலில் உள்ள ஈச்ச மரம். |
![]() |
நேப்பியர் பாலத்திற்கு அருகில் உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரம். இந்த பாலத்தை நீங்கள் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். |
![]() |
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் இருக்கும், போர் வீரர்கள் நினைவுத் தூண். |
![]() |
விஜிபி தங்க கடற்கரையில் வரிசை கட்டி நிற்கும் சிலைகள். |
![]() |
நேப்பியார் பாலம். சினிமாவில் சென்னையின் அடையாளமாகக் காட்டப்படுகிறது...! |
![]() |
நேப்பியார் பாலம் லாங் ஷாட்! |
![]() |
அடையார் (ஆறு) கடலில் கலக்கும் கழி முகத்துவாரம். சென்னையில் ராஜஅண்ணாமலை புரத்தில் உள்ள ஒன்பது மாடி கட்டிடத்தில் இருந்து எடுத்தது. |
![]() |
சென்னையின் முக்கிய அடையாளம். LIC |
![]() |
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அண்ணா சொன்னது; அது படும்பாடு நீங்கள் அறிந்தது...! " |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்
ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...
