சனி, டிசம்பர் 17, 2011

மறக்க முடியாத சில மார்கழி நினைவுகள்....!





                ன்று தொடங்கி பொங்கல் வரை மார்கழி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விடியற்காலையிலேயே விழித்தெழும் மக்கள் வீடு வாசல் பெறுக்கி, வாசலில் மா கோலம் போட்டு 'மார்கழியை'  வரவேற்கத் தொடங்கிவிடுவர்.  அடிப்படையில் குளிர் நிறைந்த பனிக் காலத்தில் தொடங்கும் மார்கழி மாதம், ஒரு இதமான தட்பவெப்ப நிலையிலேயே இருக்கும். 

வெயில் கூட கொஞ்சம் *ஒனக்கையா இருக்கும்.


கோயில்களில் ரேடியோ செட் கட்டப்பட்டு இரு வேளையும் எல்.ஆர் ஈஸ்வரி "மாரியாத்தா எங்கள் மாரியாத்தா...."  என்று பாட.... .  கூடவே டி.எம்.சொளந்தரராஜன் 'சந்தனமும் ஜவ்வாதும் ' என்று பாடிக்கொண்டு இருப்பார்.

அதுவரை புளியங் கொட்டை வியாபரம் செய்துவந்த ஏவாரி, " கோலமாவே....கலர் கலர் கோலமாவே" என்று சைக்கிளில் கோல மாவு அட்டையைக் கட்டிக் கொண்டு தெரு தெருவாய் சுற்றுவான்.
    
   
காலையில் பொம்மணாட்டி  தொல்லையால முன்னாடியே எழுந்திடும், வீட்டு பெரிசுகள் அப்படியே ஒரு நட நடந்து கடத்தெருவில சூடா ஒரு டீயை குடிச்சுட்டு,  ஒரு சுருட்டப் பத்த வச்சிக்கிட்டு ஊர் நாயம் உலக நாயம் பேச ஆரம்பிச்சிடுவாங்க.

கோலம் போடும் அம்மாவுக்கு ஒத்தாசை பண்றேன்னு....பக்கத்திலேயே கோட்டுவா ஓடுன...வாயோடு ஒக்காந்திருக்கும் வாண்டுகள். அந்தம்மாவும் பக்கத்தூட்டு வாசல பார்த்துக்கிட்டே , அவுங்க கோலம் பெரிசா நம்ம கோலம் பெரிசான்னுட்டு  பார்த்துப் பார்த்து கோலம் போடும்.
      
வண்ணம் தீட்டி போட்ட கோலத்தில் நடுவில் வைக்க பறங்கிப் பூ தேடி கொல்லை கொல்லையாய் சுற்றி வரும் ஒரு கூட்டம்.  பெரும்பாலும் இந்த மாதங்களில் எல்லோர் வீட்டிலும் பறங்கி செடி போட்டு இருப்பார்கள். அதனால் பறங்கிப் பூ கிடைப்பது அப்படி ஒன்றும் கஷ்டமாக இருக்காது.


எங்கள் ஊரில் வைணைவர்கள் இல்லை என்பதால், இங்கு அந்த பஜனை எல்லாம் கிடையாது.  ஊரைச் சுற்றி சிவன் கோயில்களே அதிகம்.   ஓதுவார்கள் விடியற்காலையில் சங்கு ஊதிக்கொண்டு மணி அடித்துக் கொண்டு, தேவாரம் திருவாசகம் பாடிக் கொண்டு செல்வார்கள். எங்கள் ஊரில் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு விரதம் இருந்து கன்னிப் பொங்கல் அன்று விரதம் முடிப்பார்கள்.

கோயில்களில் காலை மாலை இரு வேளையும் சிறப்பு வழிபாடு இருப்பதால், கோயிலில் கூட்டம் அதிகமாக  இருக்கும்.

மார்கழி ஒன்றாம் தேதியிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நாள் 'மண்டகப்படி' உண்டு. அவரவர் வசதிப்படி அம்மனுக்கு பூஜைகள் செய்து பொங்கலிட்டு வழிபடுவார்கள்.  எங்கள் வீட்டு 'மண்டகப்படி' கன்னிப்பொங்கல் அன்று வரும்.


மார்கழி பனி நிறைந்த காலம் என்பதால், கிராமங்களில் எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாது. அந்த அளவிற்கு பனி அடர்த்தியாக இருக்கும். அப்போதுதான் பயிர் பச்சைப் பிடித்து கொஞ்சமாய் சூல் கொள்ள ஆரம்பிக்கும். மார்கழி மாத நடுவில் சூல் கொண்ட கதிரிலிருந்து பால்கட்டிய நெற்கதிரின் வாடை வரும்.  மார்கழி முடிவு அல்லது தை மாதத் தொடக்கத்தில் அறுவடைத் தொடங்கிவிடும்.
  
ஊரெங்கும் பச்சைப் பட்டு விரித்ததுபோல, வயல் வெளியெங்கும் கரும்பச்சையில் பூமித்தாய் பூரித்திருப்பாள். மார்கழி பீடை மாதம் என்பதால், எந்தவித  சுப காரியமும் செய்யமாட்டர்கள்.  ஆனால், அந்த மாதம் முழுவதும் ஆன்மீகம் ரவுண்டுக் கட்டி அடிக்கும்.  ஊர் முழுசும் நான்வெஜ்க்கு தடா போட்டிருக்கும்.
()()()()()()()()()()()()()()()()()()

*இதமா.



கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...