சனி, ஜனவரி 14, 2012

மதம் மாறினால் பொங்கல் கொண்டாடக் கூடாதா....?




  ' மதம் மாறினால் மனமுமா மாறவேண்டும்...?'




     கிருஸ்த்துவாக மதம் மாறிய எனது நன்பர்  வீட்டிற்கு சென்றிருந்தேன். பொங்கல் பற்றி பேச்சு வந்தபோது, 'நாங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவதில்லை' என்றார்.  கேட்டால் கிருத்துவ மதத்தில் பொங்கல் கொண்டாடுவது பற்றி இல்லை' என்றார்.

மூளையை மதத்திற்கு அடகு வைத்தவரை ஒரு அரை விடலாம் போல் இருந்தது. அன்னிய மதமான கிருத்துவத்தில் தமிழரின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும்....? என்று கூட அவர் சிந்திக்கவில்லை!.

கேரளாவில் மலையாள மொழி பேசும் அனைத்து  மதத்தினரும் அனைத்து சாதியினரும் 'ஓணம்'  பண்டிகையை கொண்டாடுகின்றனர்.   அங்கு மத பாகுபாட்டை யாரும் பாரம்பரிய பெருவிழாவில் காட்டுவதில்லை. கிருத்தவர்களும், முகமதியர்களும் அவரவர் முறைப்படி 'ஓணம்' கொண்டாடுகின்றனர்.  ஆனால் இங்கு....? 

ஏற்கனவே சாதியால் மதத்தால் நெல்லிக் கனியாக சிதறிக் கிடக்கும் தமிழர்கள், தங்களது பாரம்பரியமான மரபு சார்ந்த 'தமிழர் திருநாளை' மதத்தின் அடிப்படையில் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?. 

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த 'ஆதி தமிழன்' தன்னை பலவகையிலும் காத்து வாழவைத்த  இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறான். மனிதருடன் மனிதர் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கும் இயற்கையுடன் தொடர்பாடலை நீடிப்பதற்கும், தமிழர் பயிர்வளப் பண்பாட்டிலே 'பொங்கல்' என்ற குறீயிடு தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சூரியன் இன்றி இவ் உலகம் இயங்காது என்பதை புரிந்துவைத்த தமிழன், முதல் நாளில் (பெரும் பொங்கல்)  அதற்கு நன்றி சொல்கிறான். தனக்காக உழைத்து தன்னையும் குடும்பதினரையும் வாழவைக்கும் 'ஆவினங்களுக்கு' ஒரு நாள்  (மாட்டு பொங்கல்),  தங்களது குலத் தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவே மூன்றாம் நாள் (கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல்) கொண்டாடுகிறான்.

தமிழர்களின் பூர்வீகத் தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறப்பார்ந்த நிலையிலே பொங்கல் தோற்றம் பெற்றது என்று கூடச் சொல்லாம். உழும் கலப்பையின் உருவாக்கம், சில்லின் சுழற்சியைப் பயன்படுத்தி  மண் பாண்டங்களை உருவாக்குதல், எருதின் பலத்தை ஆற்றலாகப் பயன்படுத்தி உற்பத்தியை பெறுக்குதல் என்று 'பொங்கல்' தமிழனின் தொழிற் நுட்பத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.  அதனாலயே பொங்கல் ஒரு 'Thanks Giving'  பண்டிகையாகவும் பார்க்கப்படவேண்டும்.

இப்படி இயற்கைக்கு  நன்றி தெரிவிக்கும் விழாவாகவே 'பொங்கல்' கொண்டாடப்பட... இதில் எங்கிருந்து வந்தது மதமும் சாதியும்?  தமிழை தாய் மொழியாக கொண்ட எவரும் அவரவர் மதத்தின வழக்கப்படி பொங்கல் கொண்டாலாமே....? இதில் ஏன் தயக்கமும் வெட்கமும்?! 

அனைத்து மதத்தினரும் சாதியினரும் தமிழராய் இணைந்து கொண்டாடும் பொங்கல் பெரு நாளே  தமிழர் திருநாள்  என்பதை ஏன் இந்த மதம் மாறிய தமிழர்கள் மறந்துவிட்டார்கள்....?


















10 கருத்துகள்:

Unknown சொன்னது…

பிறந்த மதம் இழிவுபடுத்துகிறது என குற்றம் சொல்லிவிட்டு பிறமதம் மாறிச் செல்பவர்களை அங்கு கட்டுப்பாடுகளே வரவேற்கின்றன!

புகுந்த மதத்திற்கு இழுக்கு என்று ஹோட்டலுக்கு சென்றால் கூட பொங்கல் சாப்பிட மாட்டார்களா?

Unknown சொன்னது…

நல்ல கேள்வி கேட்டது மல்ல
அதற்குரிய விளக்கமும் அருமை!
இனியாவது, இப் பதிவினைப்
படிக்கும் பிற மதத்தவர் பொங்கலைக்
கொண்டாட வேண்டும்.

புத்தாண்டு, பொங்கல்
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Robin சொன்னது…

பொங்கல் என்பது உழவர் திருநாள் அல்லது அறுவடைப் பண்டிகை. இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாளில் சூரியனுக்கு படையலிட்டு வணங்குவார்கள். மாட்டுப் பொங்கலன்று மாட்டை அலங்காரப்படுத்தி வணங்குவார்கள். கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை படைப்புகளை வணங்குவது தவறு. படைத்தவரையே வணங்கவேண்டும். எனவே பொதுவாக கொண்டாடப்படுவதில்லை. ஆனாலும் சிலர் இந்த வழிபாடுகளை தவிர்த்துவிட்டு வெறும் பொங்கல் மட்டும் செய்து கொண்டாடுவது உண்டு. சில கத்தோலிக்க ஆலயங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுவது உண்டு. இது எல்லாமே அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். பொங்கல் தமிழர் திருநாள், பொங்கல் கொண்டாடதவர்கள் எல்லாரும் துரோகிகள் என்பதுபோல எழுதுவது முட்டாள்தனமான செயல். தமிழுக்காக உங்களைவிட அதிகமாக கிறிஸ்தவர்கள் அரும்பணியாற்றியுள்ளார்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தீபாவளி- விநாயகர் சதூர்த்தி போன்றவை மதம் சார்ந்த பண்டிகை, ஆனால் தமிழர் திருநாள் அப்படி அல்ல.... இதை இரெண்டையும் அவர்கள் போட்டு குழப்பிக் கொள்வதால்தான் இந்தப் பிரச்சினையே.... !
தங்கள் வருகைக்கு நன்றி ரமேஷ்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ புலவர் சா இராமாநுசம். நன்றி அய்யா, தங்களது உயரிய கருத்துக்கு எனது பணிவான வணக்கங்கள். இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

உண்மைதான் ராபின்.
மதம் மாறிய தமிழர்கள் 'குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதால்தான் இந்தப் பதிவே....!

பொங்கல் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் அல்ல, அது தமிழர் இனம் சார்ந்தது என்பதை தாங்கள் மறந்தது ஏனோ....?

கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் கூட 'மதம்' சார்ந்தததுதான் என்பது அறிவாளியான உங்களுக்குத் தெரியாதா....?

வவ்வால் சொன்னது…

மாபா,

சரியா சொன்னிங்க. சில பிற மத பதிவர்கள் பொங்கலையும் இந்து மத பண்டிகையாவே பார்க்கிறாங்க.ஏன் பொங்கல் கொண்டாட வில்லைனு பதிவும் போட்டு இருக்காங்க, பானைக்கு பட்டை அடிச்சு, பொட்டு வைத்து வணங்கப்படுகிறதாம் எனவே அது மதப்பண்டிகை கொண்டாட முடியாதுனு சொன்னாங்க.

தை-1 இல் தமிழ் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், உழவர் திருநாள் என வேறு பலவும் இருக்கு அதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறிங்களா, என சொல்லி வந்தேன்.

2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.

தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

வவ்வால் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல...!

மதம் மாறும்போதே... மனமும் மாறிவிடுகிறார்கள்.

இவர்கள் ஓணம் கொண்டாடும் பிற மத மலையாளிகளைப் பார்த்தாவது திருந்தவேண்டும்.

உங்கள் தளம் பார்த்தேன்....தை புத்தாண்டு தொடர்பாக நிறையாக விஷயங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடுகிறேன்.
தை புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

நன்றி...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...