பொங்கல் தின சிறப்பு சிறுகதை.
'களம் புதிது' தனிச்சுற்று இதழில் 1996- ஏப்ரல் மாதத்தில் வந்த சிறு கதை. வாசிக்க வாசிக்க கதை கனமாக நமது நெஞ்சில் படிந்து விடுகிறது. உழைத்த மனிதர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டனர் என்பதை மிக மிக எதார்த்தமாக மண் மனத்துடன் சொல்லி உள்ளார் இரெத்தின புகழேந்தி. களம் புதிது ஆசிரியர் குழுவின் தலைமை பொறுப்பும் இவர்தான். இக் கதை விருத்தாசலம் பகுதியில் நடைப்பெறுவதாக இருந்தாலும், இதில் கையாண்ட வட்டார வழக்கு சொற்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதிகளில் பேசப்படுபவைதான்.
வட்டார வழக்குச் சொல்லில் வளைந்து நெளிந்து செல்லும் கதாசிரியர், கதையின் முடிவில் சாதி பெயரை கொண்டு திட்டுவது ஏனோ...மனதை நெருடுகிறது....!
நன்றி!
புகைப்படங்கள்: வைலெட் ஐஸ்.
|
"ஏ... முத்தம்மா சனி மூலையில போயி அற, மொதல்ல மலப்பில்லாத மளமளன்னு ஆவும் அறப்பு"
சர்ரக்...கெழக்கத்தி அருவா நாலு மொதல ஒரே அறப்பா அறுத்தது.
சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...
சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...
"என்னடா மாப்ள, இம்மாங் கஷ்டப்பட்டு கடசீல பொகையான் அடிக்க உட்டுட்ட"
"ஏன்யா அந்த வவுத்தரிச்சல கெளப்புற. பயிறுதான் வெளுத்து போயி இருக்கேன்னு ஒரு மூட்ட ஊரியாவ கொண்டாந்து போட்டு புட்டான். நல்லா பச்ச பசேர்னு வந்தது. திட்டு திட்டா அடிச்சி கெடாவிட்டது"
ரெண்டாவது வாட்டி போடும்போது, ஊரியா கொஞ்சனா காட்டனும்"
"புதுசா புட்டமுட்டானாம் அவன் பூ....செல்லரிச்சுதாம்..." முணுமுணுத்தாள் முத்தம்மா. இதைக் கேட்டதும் உம் என்று ஆனது குள்ளனின் முகம்.
"பொகையான் அடிச்சாலே ஒப்புடி ஆவாது. இதுல கொல்ல வாரம், தண்ணிவாரம் குடுத்து ஒனக்கு என்னா மீற போவுது."
"இதெல்லாம் கணக்கு பண்ணி பாத்துட்டுதான் அவாளு குத்தவைக்கு உட்டது. சும்மாகிம்மா உடுல."
"குள்ள பய பெரியாண்ட நெலத்த கெரையம் வாங்குனவனாட்டம் பள்ளம் மேடு திருத்தறது என்ன, எருவு அடிக்கறது என்னா..."
ஆளுக்கு ஒன்றை சொல்லி குள்ளனின் வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.
0000
"நன்னானே நானே னன்னே
நானனன்னே நன்னா னனே...
கோத்தா கொடி பவழம்
கோருவைக்கே நப்பவழம்
கோப்பாரு இல்லாமலே- நான்
கொடி பழம் சிந்துறனே (நன்னானே....)"
முத்தம்ம பாட நடவு சனங்கள் பின் பாட்டுப் பாட வடக்கு வேளி முழுக்க எதிரொலித்தது. பாட்டுக்குத் தாளம் போடுவது போல ச்சளக்...ச்சளக்...ச்சளக்... பயிரை சேற்றில் நட்டனர். சொந்த நடவு என்பதால் நெருக்கி நட்டனர். தார்க்குச்சியை குத்தியது போல குத்திட்டு நின்றது பயிர்.
" நீங்கள்ளாம் இம்மாம் கத்திருக்கிங்க புள்ள....ம்...எங்க கொல்லன்னா சாச்சி போட்டு எட்ட எட்ட நடுறது. சொந்த நடுவுன்னதும் அஞ்சி வெரலும் சேத்துல போவுத!" சத்தம் போட்டான் அந்த வழியா வந்த கொடுமனூராங்க மகன்.
"ஒங்களுக்கு மட்டும் என்னா வேற கையாலயா நட்டோம். பாக்கிறதுக்குதான் அதேமேரி தெரியும். கடசீல ஒங்களுக்குதான் நெல்லா வெளையும்."
"ஆமாம்...ஆமாம்...கவுடு வச்சி வேல செஞ்சிங்கன்னா எல்லாங் கட்டாந்தரையாத்தான் போவும்..."
"இங்க ரெண்டு முடி நாத்து எடுத்துகிட்டு வா மாமோய்...."
"கையால ஆவாத கலவட....என்னாடி இன்னும் பின்னாலயே கெடக்குற?" கிண்டலடித்தப்படி நாற்று முடிகளைக் கொண்டு போனான் குள்ளன். அவனை உள்ளே வைத்து வெளியில் நடவு நட்டுவிட்டனர். இப்படி நட்டுவிட்டால் காசு கொடுத்து விட்டுத்தான் வெளியில் வரவேண்டும். கையில் காசு இல்லையென்றாலும் எது அவனிடம் இருக்கிறதோ அதை பிடிங்கிக் கொள்வார்கள். பிறகு காசு கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
"என்னா சொன்ன...கலவடையாமில்ல...." சிரித்துக் கொண்டே குள்ளனின் பின் பக்கக் கோவணத்தை அவிழ்த்து விட்டாள் கருப்பாயி.
பொத்துக் கொண்டு பீரிட்டு அடித்தது சிரிப்பொலி, தொங்கிய கோவணத்தை முன் பக்கம் கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டு "ச்சீ...கையில காசு இல்ல ...ஊட்ட வந்து தரன் உடுங்களன் மானங்கெட்ட கழுதை வோள..." முண்டாசை அவிழ்த்துக் கொடுத்தான் ஏசியபடி.
"ஊட்ட வந்து ஏமாத்தி புட்ட அங்க சுத்தமா அவுத்து உட்டுடுவன்"
இவர்களின் சேட்டைகளுக்கு எரிச்சலடைபவன் போல காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் குள்ளனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆண்டைகளுக்கு கிடைத்த அனுபவம் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
நிலம் குத்தகைக்கு விடுவது தெரிந்து பெரியாண்டை வீட்டின் முன் கூனி குறுகி நின்றான் குள்ளன்.
"தெக்குத் தெருவானுவோளுக்கு வேலைக்கு போறவன், குத்துவைக்கு உடுறாங்கன்னதும் கொழஞ்சிகிட்டு வந்து நிக்கிறதப்பாரு. சும்மாவா சொன்னாங்க கள்ளன நம்புனாலும் குள்ளன நம்பக் கூடாதுன்னு..." பெரியாண்டையின் பேச்சு ஊசியாய் தைத்தது குள்ளனுக்கு.
"இல்லிங்க... " தயங்கி, பயந்து, நடுங்கி, பவ்யமாய், வாய்பொத்தி, தலை சொரிந்து, கூனியபடி சொன்னான்.
இந்த ஒணக்க ஓட்டு போடும் போது மட்டும் இருக்கட்டும். மாத்தி கீத்தி போட்டிங்கன்னு தெரிஞ்சிது...." கர்ச்சித்தார்.
"எம் மூனு புள்ள மேல சத்தியமா நம்பள தவற மாத்தமில்லிங்க...உண்ட ஊட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டாங்க இந்த குள்ளன். "
நல்ல பேச கத்துகிட்டிங்கடா ...சரி...சரி...அந்த மோட்டு ஓரத்து கொல்லையை நட்டுக்க. "
"ஏரு...கெராக்கியா இருக்குங்க....நம்ப வண்டி..."
"வண்டியா...ரேட் தெரியுமில்ல...? நானூத்தி இருவத்தஞ்சி "
ஆண்ட நீங்க பார்த்து சொன்னா சரிதான்...."
0000
"அடியோட அறங்கப்பா... வைக்கலாவுது நாலு தெர ஆவுட்டும்"
"வைக்க மட்டும் எங்கேருந்து ஆவும்ங்குற...கூளாந்தான் ஆவும்".
"வீசும் ஒன்ரை மூட்டையாவது தேறுமா...அநியாயமா இருக்க...." முத்தம்மாவின் வாயை கிண்டினாள் மூக்காயி.
" இந்த குள்ள பயதாண்டி பயிறுக்கு தீம்பா இருந்துட்டான். கொண்டாடி குட்டிச் சாத்தின்னு தாலிய வாங்கிகிட்டு போயி வச்சில்ல ஊரியா வாங்கிகிட்டு வந்து போடுறான். ஆனமுட்டும் சொல்லி பாத்தண்டி ஆயி....கேக்க மாட்டன்னுட்டானே. ஒரே முட்டா அடிச்சி கொட்டிக்கலாம்னு ஆச....அதான் ஒன்னுமில்லாம பூடுச்சி..."
இந்த ஊரியா வாங்க பட்டபாடு குள்ளனுக்குத்தான் தெரியும். குறுக்கு ரோட்டுல ஒரு கடையிலியும் இல்லன்னுட்டானுவோ விருத்தாலத்து ஒடயான் கடையில கேட்டா செட்டியாரு கடையில் இருக்குங்குறான், செட்டிய கேட்டா ஒடையார் கடையில இருக்குங்குறான்.
"அஞ்சாறு பேரு சேந்துகிட்டு கடகாரங்கிட்ட சண்டைக்கு போயிட்டாங்க. வேற வழி இல்லாம டோக்கன குடுத்து ஊரியா வாங்க வந்தவங்கள வரிசையில நிக்க வச்சிட்டான். உள்ள போறவங்கள்ட்ட பொட்டாஷ் வாங்குனாதான் ஊரியா தருவேங்குறான். அதுவும் மூட்ட எரனூத்தி இருவத்தஞ்சி ரூவாயாம். பில் சீட்டும் குடுக்கல".
" நூத்தி எழுவது ருவா வித்தப்பயே ரெண்டு மூட்ட வாங்கியிருக்கலாம். என்னா பண்றது....கையிலியா வச்சிருக்கோம்....பிச்ச எடுக்குமாம் பெருமாளு அத புடிங்கி திங்குமாம் அனுமாருன்னு.... நூறு அம்பதுன்னு பொருக்கி பொணச்சில்ல வாங்குறதா இருக்கு".
...ம்.... இந்த பயிர கண்ணால பாக்க எம்மாஞ் சிருப்பா சிரிச்சேன்.
அண்ட வெட்டும்போது கால வெட்டிக்கிட்டு காயத்தோடயே தழ கழிச்சி தூக்க முடியாம தூக்கிகிட்டுவந்து காலாலயே மிரிச்சி காயத்துல சேரு பூந்து பொட சச்சி லோக்கல்ல போயி கெடந்து காயத்த ஆத்திகிட்டு வந்தா கள மண்டிபோயி அத அரிச்சன்.
அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா,,,மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா எ
அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா....மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா நெருப்ப வச்சாபல எரியும். நாத்தம் வேற கொடல புடுங்கும். ரெண்டு நாள் சென்னு போய் பாத்தா சுருட்டிக்கிட்டு இருக்குற சோலையில புழுவு நெளியுது. என்னாய்யா மருந்து குடுத்தன்னு கடகாரன கேட்டா முழுங்கி (மூங்கிள்) மெலாரால சேலைய கிழிச்சிட்டு அடிக்குனுங்குறான். இனிமே....புழுவ புடிச்சி மருத்துல போட்டாதான் சாவும்னு சொன்னாலும் சொல்லுவான்.
0000
கட்டு தூக்கும்போது காத்தாட்டம் லெக்காதான் இருந்தது. செத்த நாழியில களத்துக்கு போயி சேந்தது. கெடாவடி ஒதரும் போதே கூளான் பறந்தது.
தாளு அடிக்க பெரியாண்ட டிரக்கு வந்தது டயர் வண்டியோட. பின்னாலயே தலையில துண்ட போட்டுகிட்டு பெரியாண்டயும் வந்துட்டாரு.
புளிய மரத்தடியில் நின்னுகிட்டு
"ஓரம் பாரம் கெடக்குற தாள அள்ளி உள்ள போடுங்கடா"
... ... ... ... ...
"வண்டிய நிறுத்திட்டு, நடுல முட்டா கெடக்கு பாரு...நெறவி உடு"
... ... ... ...
"ம்....போதும் நிறுத்து. ஒதறிட்டு அப்புறம் அடிக்கலாம்."
... .... ... ... ...
"நெல்லா அடிகாண ஒதறு"
"என்னடா குள்ள பயல வைக்கலாம் கூழ் கூழா பொயிட்டது...?"
.... .... ..... ....
சும்மா ரெண்டு சுத்து சுத்து போதும்"
.... .... ..... ....
நெல்லா வைக்கல நெல்லு இல்லாம சிலுக்க ஒதறு"
.... .... ..... ....
போர கெழக்கால போடு காத்த மறைக்காம, ஒருத்தம் போருல நில்லு"
... .... ..... ....
"நெல்ல ரெண்டு முட்டாக்கிக்க"
.... .... ..... ....
"பாதி நெல்ல தெக்க தள்ளு, பாதிய வடக்க முட்டாக்கு. பிரி வச்சி தள்ளு"
.... .... ..... ....
.... .... ..... ....
"வெளக்க மாத்த எடுத்து கூட்டம்புள்ள. வேடிக்க பாத்துகிட்டு நிக்குற....?"
.... .... ..... ....
இன்னமுட்டும் அடி அடின்னு அடிச்சது. இப்ப காத்தயே காணும்"
.... .... ..... ....
"மூட்டம் போடுங்க....ஏய் கருக்கால அள்ளி போடுறா...ம் ....இப்ப அள்ளிபோடு கூளான. பத்தவையி"
.... .... ..... ....
"போரையான உட சொல்லு, அவந்தான் வாட்டபிலி நெல்லா உடுவான் மேல காத்துதான் அடிக்குது.....உடு..."
.... .... ..... ....
மொறத்தால விசுறு, நெல்லா...கூளான் போறாபல விசுறு"
.... .... ..... ....
"இந்தா குள்ளம் பொண்டாட்டி...சாக்க எடுத்து தலையில போட்டுகிட்டு கட்டிய தள்ளு"
.... .... ..... ....
"உடு....உடு....உடு...கிடுகிடுன்னு அள்ளி உடு...."
.... .... ..... ....
"மிம்மாரிய கழிச்சி உடு"
.... .... ..... ....
"நெல்லா ஒட்ட கழி...."
.... .... ..... ....
"ம்...கருன வையி"
.... .... ..... ....
"அந்த அரவா, காவா நெல்ல அள்ளி தனியா கொட்டு"
.... .... ..... ....
"காத்து அடிக்குது பாரு வாரி உடு...வாரி உடு...."
.... .... ..... ....
என்னடா....குள்ளா...இருவது மூட்டையாவது தேறுமா....?"
"பொகையான் அடிச்சிட்டுதுங்க பெரியாண்ட...."
"யூரியாவ திட்ட மட்டமா போடுனும்...மின்னபின்ன செத்திருந்தால்ல சுடுகாட்டுக்கு வழி தெரியும்"
.... .... ..... ....
"இன்னும் ஒரு தரம் மிம்மாரிய கழிங்கடா...."
.... .... ..... ....
"சுருண வச்சதோட கழிச்சிங்கள...?"
.... .... ..... ....
"தா...சாணி கெடக்கு பாரு புள்ளியாரு புடிச்சி ஒரு அருவம் பில்ல சொருவு....சனி மூலையில வையி"
.... .... ..... ....
"பரைய எடுத்து அள"
"குள்ளன் அளக்க அளக்க ஒவ்வொரு பரைக்கும் ஒரு குத்து நெல்லை அள்ளி எண்ணிக்கைக்காக வைத்தாள் முத்தம்மா.
சாக்குகள் நிரம்ப நிரம்ப பட்டரை காலியானது. குள்ளனின் நெஞ்சில் உலக்கை போட்டு இடித்தது.
நெற்குவியல்களை எண்ணிப் பார்த்துவிட்டு "கொல்ல வாரம் எட்டு மூட்டை, தண்ணிவாரம் பத்து மூட்ட, வண்டி வாடக ரெண்டு மூட்ட சரிதான...?" என்றார்.
"ரெண்டு மூட்டயாவது உட்டு குடுங்க பெரியாண்ட. அடுத்த போவத்துல சேத்து குடுத்துடுறன்"
"என்னா மசுருக்குடா... ஒனக்கு குத்துவைக்கு உட்டதுக்கு தெண்டம....?"
"பொகையான் அடிச்சிட்டுதுங்க ....எனக்கு ஒன்னும் மீறலன்னாலும்....கூலி நெல்லாவது உட்டுகுடுங்க சாமி"
"அன்னிக்கே பேசிதாண்ட உட்டன். நீ கூலிதாங் குடு எதாவது செய்யி. நான் என்னமோ ஒன்ன ஏமாத்தி வாங்கிகிட்டு போறாபல பேசுகிறிய...ஒன்னுகிட்ட குத்துவைக்கி உட்டம் பாரு ஏம் புத்திய செருப்பால அடிக்கனும்டா"
"அய்யய்யோ....ஏங்கசாமி பெரிய வாத்தையெல்லாம் பேசுறிங்க...நீங்க நெல்லா இருப்பிங்க, நீங்களே கொண்டுகிட்டு போயி சாப்புடுங்க...."
"அடி....செருப்பால...பற தேவடியா...."
"என்ன ஏன் அடிக்கனும்....கையால ஆவாதவன்லாம் எதுக்குடா பயிறு வைக்கனும் அவன அடிங்க..."
"இந்த பறக் கழுதைகிட்ட என்னாடா பேச்சு....நெல்ல ஏத்திகிட்டு வாங்கடா"
துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெரியாண்டை.
"குள்ள சாடு மாறி...வெக்குனவ(ம்) வெளாம்பழத்த தின்னமேரி நிக்குறாம் பாரு"
....நஞ்ச தின்னவன...பொறம்போக்கு மரத்தபாத்து நாணுக்கியண்டா....த்தூ....!
0000
6 கருத்துகள்:
நல்ல கதை. நிறைய இடத்தில் உள்ளுர் மொழி புரியவில்லை.
உழைத்தவன் தலையில் துண்டைத் தான் போட்டு விட்டு போக வேண்டும் போலும். வேதனை தான்.
நன்றி தோழர் நானே மரந்துவிட்ட என் கதையை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு நன்றிகள் பல..
கிராமத்து மொழியில் கதை அருமை!
ஆனால் நீங்கள் நெருடல், முடிவில்
தேவையில்லைதான்!
புலவர் சா இராமாநுசம்
நன்றி ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.
நன்றி தோழர்....!
மதுரை, நெல்லை, கோவை வட்டார வழக்கு சொல்லைத்தான் நாம் அதிகம் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் வட்டார பேச்சு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நீங்கள் எழுதிய இந்த சிறு கதை நிச்சயம் போற்றக் கூடியது. அந்த லாவகமான வட்டார எழுத்து பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
உங்களின் எழுத்துப் பணித் தொடர எனது வாழ்த்துகள்.
@புலவர் சா இராமாநுசம்.
கருத்திட்டமைக்கும் நன்றி அய்யா...!
சரளமான வாட்டார எழுத்து நம்மை ஈர்க்கவே செய்கிறது. கதைக்கு சாதியைச் சொல்லித் திட்டுவது தேவையாக இருந்தாலும், படிக்கும்போது நெருடலைத் தரத்தான் செய்கிறது.
கருத்துரையிடுக