ஞாயிறு, ஜனவரி 12, 2014

பள்ளியில் போதிப்போம்!.


       உலக அளவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.  பராமரிப்பு இல்லாத சாலைகள், சாலை விதிகளைப் பற்றிய அடிப்படை அறிவின்மை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்ட முறைகள் என்று என்னற்ற குறைபாடுகளை கூறலாம்.

மக்கள்தொகை பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கிறது.  

இதில் தமிழகத்தின் நிலைதான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

2003ஆம் ஆண்டு நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின் 2012ல் அதிகபட்சமாக 68,000 விபத்துக்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்கள் நடைபெறுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக தமிழகத்தில் சாலை விபத்து மூலம் 44 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றில் சென்னையில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் இந்திய பெரு நகரங்களில் சென்னை முதலிடத்திலும் (9663), தில்லி இரண்டாவது இடத்திலும் (5865), பெங்களூரு மூன்றாவது இடத்திலும்(5508) உள்ளன.

பொறுமையின்மைதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். சாலையை கண்ட இடத்தில் கடப்பது, முன் எச்சரிக்கை இன்றி வாகனத்தை நிறுத்துவது,  வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது, முறையான சமிக்ஞை தெரிவிக்காமல், வாகனத்தை திருப்புவது, சாலைகளில் சாலை விதிகளைப் பற்றிய குறியீடு இல்லாமை,  அதிக ஒலி எழுப்பி இதர வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அலறவிடுவது, தேவையற்ற யூ திருப்பங்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கும் அல்லது மூடும் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்குவது, வாகனங்களின் முன் உள்ள விளக்குகளில் ஒளி மறைப்பான் இல்லாமல் இயக்குவது, வாகனங்களின் பின்புறத்தில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருப்பது, செப்பனிடப்படாத சாலைகள்,  இடது புறத்தில் முந்திச் செல்லுவது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும்  வீடுகள் உள்ள சிறிய தெருக்களில் எத்தகைய வேகத்தில் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாதது,   வேகத்தடை பற்றிய அறிவிப்பு இல்லாமை, வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு, அதிவேகம், வண்டி ஓட்டும் போது கை பேசியை பயன்படுத்துவது, சாலையை கடக்கும் போது கை பேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது என்று விபத்திற்கான காரணங்களை பெரும் பட்டியலே போடலாம்.

தமிழகத்தில் சாலையில் விபத்து நடந்த இடம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு, அங்கு விபத்து நடைபெற்ற சுவடே இல்லாமல் செய்து விடுகின்றனர்.  இது மிகவும் தவறானது, விபத்து நடந்த இடத்தில்,  ஒரு அறிவிப்பு பலகையை குறைந்தது ஒரு மாதத்திற்காகவாவது வைக்க வேண்டும். அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும், விபத்து பற்றிய அச்சமும் ஏற்படும்.

சாலை விபத்துகள் பற்றிய விழிப்புணர்வே சாலை விபத்துகளை தடுக்க ஒரு முக்கிய காரணியாக அமையும். இதற்கான ஒரே தீர்வு, சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம் தொடங்கிவிட வேண்டும். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, சாலை பாதுகாப்பில் சட்ட முறைகள், வாகன பராமரிப்பு, பாதுகாப்பான வேகம், சாலைகளை பயன்படுத்தும் முறை, பயணிகளின் பாதுகாப்பு,  முதலுதவி, மனித உயிர்களின் முக்கியத்துவம் என்று நாம் பாடத் திட்டத்தில் சேர்க்க நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.
இத்தகைய பாடத்திட்டங்களை நாம், ஆறு அல்லது ஏழாம் வகுப்பிலேயே தொடங்க வேண்டும். வாரத்தில் இரண்டு வகுப்புகளையாவது இதற்கென நாம் ஒதுக்க வேண்டும். இதில் தேர்வுகளையும் வைக்கவேண்டும். இந்த வகுப்புகளைத் தாண்டி வரும் மாணவர்கள்தானே பிற்காலத்தில் வாகன ஓட்டிகளாவும், வாகனங்களை பயன்படுத்துபவராகவும் வருகின்றனர்.
நற்சிந்தனை, நல்லொழுக்கம், உறவின் மேன்மை, உயிரின் உன்னதம் போன்றவற்றை நாம் கல்வியின் மூலமாகத்தான் மாணவச் சமுதாயத்திடம் விதைக்க முடியும்.

இந்த விதைகளே விருட்சமாக வளர்ந்து, விபத்தில்லாத ஒரு உலகை படைக்க உதவும். நொடியில் முடியும் மனித வாழ்க்கையை நீடித்து இருக்க,  இத்தகைய முயற்சிகள் பலன் தரும். சாலை விதிகளை பள்ளிகளில் போதித்தால் மட்டுமே, விபத்தில்லாத  நாளைய உலகை நாம் படைக்க முடியும்.

First Published : 07 January 2014 01:17 AM IST
தினமணியில் வந்த எனது கட்டுரை.

7 கருத்துகள்:

ram சொன்னது…

Saalai vibathukkal thadukappad vendum enbathil, irandu karuthu irukka mudiyaathu. Namathu naatil vithikalukkum sattangalukkum panjam illai. AAnaal vithikalai makkal kadaipidippathilai. kadaipidikkathavarkali thatti ketka enforcement illai. Saalaiyil sariyaana arivippukal illathathum, saalaikal sariyaaka thittamidappadaamal amaikkappaduvathaalum vibathukal athikamaaka erppadukindrana.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

Unknown சொன்னது…

நல்ல பதிவு...
அதிகம் பாதிக்கப் படுவது சாமான்ய மக்கள்தான்... குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையெல்லாம் நான்குவழிச் சாலையாக மாறியபின், சாலையோரக் கிராம மக்கள், அந்தச் சாலையைக் கடக்க படும் பாடு சொல்லி மாளாது. வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் வசதிகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய திட்டங்கள், அரசியல் வியாதிகளால் சாமான்யர்களுக்கு இழைக்கப்படும் அநீதியே தவிர வேறொன்றுமில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதலில் பெற்றோர்கள் உணர வைக்க வேண்டும்... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு ஐயா.
மாணவர்களிடம் இச்செய்திகளைக் கொண்டுபோய் சேர்த்து விழிப்புணர்வினைஊட்ட வேண்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

வவ்வால் சொன்னது…

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா சொன்னது…

வாகன ஓட்டிகளுக்காகவே சாலைகள் அமைக்கப்படுவது இங்கு மட்டுமே நிகழமுடியும். நடக்கின்றவர்கள், சாலையைக் கடக்க முடியாமல் அனாதைகளாகத் திகைத்து நிற்கும் காட்சியை அன்றாடம் பார்க்கின்றோம். லஞ்சம் வாங்காத போலிஸ் இருந்தால் மட்டுமே நடக்கின்றவனின் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலை நிலவுகிறது.இது கவுரவமானதல்ல.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...