.
"True Leaders don't create followers.... they create more leaders!" என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொருந்தும். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு தமிழக முதல் அமைச்சர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் தலைமை செயளாலர் ஷீலா பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன்,விசாலாச்சி நெடுஞ்சேழியன், அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,செந்தில் பாலாஜி என்று ஏகப்பட்ட பெயர்கள் பட்டியல் இடப்பட்டது. ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பெயரை பரிந்துரைத்துவந்தனர்.
கைது நடவடிக்கைக்குப் பிறகு, ஜெயலலிதாவை இவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. யார் அடுத்த முதல்வர் என்று தெரியாமல் ஆளுக்காள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தனர். பிறகு எப்படியோ மருந்து சீட்டின் பின்புறம் ஜெ OP என்று எழுத....பிரச்சனை தீர்ந்து ஓபி முதல்வரானார். செகண்ட் லைன் இல்லாததே இந்த கடைசி நேர தடுமாற்றத்திற்கு காரணம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
செகண்ட் லைன்.கட்சியோ, இயக்கமோ, போராளிகள் குழுவோ, இராணுவமோ, தனியார் நிறுவனங்களோ, ஊடகங்களோ எதுவாயிருந்தாலும் 'செகண்ட் லைன்' என்பது இன்றியமையாதது. நிறுவனங்கள் தங்கு தடையின்றி நடைபெற செகண்ட் லைன் என்பது தவிற்கமுடியாத ஒன்று. முடிவெடுக்கும் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருந்து முடிவெடுப்பவரே செகண்ட் லைன் என்பார்கள். ஒரு நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ் நிலையில் நிறுவனத்திற்கு வரமுடியாமல் போக நேர்ந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரே முடிவெடுப்பார். இன்னும் புரியும்படி கூறுவதென்றால் கணவன் ஃபஸ்ட் லைன், மனைவி செகண்டு லைன். இந்த இரண்டு லைனும் இருந்தால்தால் குடும்பம் குடும்பமாக இருக்கும். இது அரசியலுக்கும் பொருந்தும்.
அதிமுகவை பொருத்தவரை இங்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எந்த இடத்திலும் யாரும் நிலையாக இருந்ததில்லை. இன்று உச்சத்தில் இருப்பவன் அடுத்த நாளே மண்ணை கவ்வலாம். நிலையாமை என்பது ஜெயா அமைச்சரவையை பொருத்தவரை நிலையானது!.
ஆளாளுக்கு போராட்டம். ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை மகிழ்விப்பதற்காக கட்சியின் உயர் மட்ட அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை தங்கள் இஷ்ட்டதிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க ஆளும் இல்லை வழி நடத்த தலைமையும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜியார் சமாதியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'ஆள் இல்லாத மாட்டு வண்டி ஆத்தா மேல ஏறிச்சாம்' என்பது போல இருக்கிறது அதிமுகவினரின் செயல்பாடு.
தீர்ப்பு நாளான கடந்த 27ம் தேதி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்றுத் துணி எதுவும் இன்றி, வெறுங் கையோடுதான் ஜெயலலிதா வந்திருந்தார். இந்த வழக்கில் வழக்கம் போல் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் விதைத்து இருந்தனர். கர்னாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை என்பதையோ, வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையோ அவரிடும் சொல்லத் துணிந்த இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்பதுதான் உண்மை. "அம்மா ஒன்றும் ஆகாதும்மா" என்று குருட்டுத்தனமாக கூறுபவர்கள் தான் அவரிடம் இருந்தார்கள். அவர்களே இத்தகைய துயரத்தை ஜெயலாலிதாவிற்கு பரிசாக தந்திருக்கின்றனர்.
ஆட்சி செய்வதில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வேறுபாடு?. அதிமுக ஆட்சியில் அதிகார மையம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும். ஜெவைத் தவிர வேறு யாரும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. முக்கிய முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்துக் கிடக்க வேண்டும். ஆனால், திமுகவில் அதிகாரம் மையம் பரவலாக்கப்பட்டு இருக்கும். இந்த பரவலாக்கம் அரசு எந்திரம் விரைவாக நடைபெற உதவியாக இருக்கும்.
தனியார் பஸ் உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேடர்கள், வணிகர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், தோழமை கட்சிகள், இந்திய வாழ் ஈழத்தமிழர்கள் அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள், சினிமா துறையினர் போன்றவர்கள் மூலம் தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி.... குடி மக்களின் அன்றாட வாழ்வில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சட்ட போராட்டமே விடுதலைக்கான வழி என்பது புரியாமல், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இப்படி தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் என்பதை இன்று வரை அதிமுகவின் புதிய தலைமை உணரவில்லை.
சட்ட போராட்டத்தை முன் மொழிந்து தொடர.... ஒரு சரியான தலைமை இல்லாமல் தவிக்கிறது அதிமுக?.
-------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக