வெள்ளி, அக்டோபர் 24, 2014

தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?!




             1997 அல்லது 1998ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் நாளிதழ்கள் தங்களது தீபாவளி மலரோடு கை நிறைய பை நிறைய பரிசுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, பைக், பிரிஜ், கிரைண்டர், கட்டில், பீரோ, பட்டுப் புடவைகள் என்று ஏகத்தும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கி, தீபாவளி மலர்களை கூவி கூவி விற்பார்கள். சந்தையில் தினகரன், தினமலர், தினபூமி என்று பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி மலரை விற்பனை செய்வார்கள். இதில் தினபூமியின் கையே ஓங்கி இருந்தது.

தீபாவளி மலர்களை படிக்க வாங்குகிறார்களோ இல்லையோ, இந்த பரிசுப் பொருட்களுக்காகவே வீட்டுக் வீடு ஐந்து பத்து என்று வாங்குவார்கள். ஒரு கிலோ தங்கம் இரண்டு கிலோ வெள்ளி என்று பரிசுப் பொருட்களை அறிவித்தால், பாவம் மக்கள்தான் என்ன செய்வார்கள்?!.  தங்கள் அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க தீபாவளி மலர் கூப்பனாக வாங்கி குவிப்பார்கள்.

குலுக்களில் பரிசுப் பொருட்கள் மட்டும் இல்லாமல், தீபாவளி மலர் புத்தகத்தோடு சோப்பு, ஷாம்பு, டால்கம் பவுடர், விபூதி பாக்கெட், பத்தி பாக்கெட், சாம்பிரானி பாக்கெட், பிஸ்கட், சாக்லெட், காபித்தூள் என்று பை நிறைய பரிசுப் பொருட்களோடு தீபாவளி மலர் உங்கள் வீடு தேடி வரும்.

இதில் ஆர்வம் முத்தி போய் ஒரு வார இதழ் அரிசி மூட்டை தருகிறோம்  என்றேல்லாம் அறிவித்தது. பின்னர் விஜயன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கொன்றில், இத்தகைய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்தது நீதி மன்றம்.

""வாங்கி விட்டீர்களா தீபாவளி மலர்" என்று தீபாவளி மலருக்காக முழ நீளத்திற்கு டிவியில் விளம்பரங்கள் வரும். 50,60வது ஸ்பான்ஸர் பெயர்களை வாசித்து முடிக்கவே பொழுது போய்விடும். டிவியில் வரும் தினபூமி தீபாவளி மலர் விளம்பரத்திற்கு அனுராதா மேடம்தான் வாய்ஸ் தருவார். தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருக்கும் ராகவேந்திரா ஸ்டூடியோவில்தான் அனைத்துவிதமான ஒலிப்பதிவுகள் நடைபெறும்.  கேசட்டுகளை டிவி சேனல்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது.

அப்போது நான் தினபூமி பத்திரிகையில் இருந்தேன். நண்பன் ராஜசேகரனும் இருந்தான். இருவரும் அட்வர்டைசிங் ரெப்ரசண்டேட்டிவாக  வேலையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தோம். நாங்கள் சேர்ந்து சுற்றிய நாட்களை மறக்க முடியாது.  இப்போ மாப்ள குமுதத்தில் இருக்கிறான், நான் இண்டியன் எக்ஸ்பிரஸில் இருக்கிறேன்.

ஒவ்வொரு விளம்பர பிரதிநிதிக்கும் டார்கெட் உண்டு.  பரிசுப் பொருட்களை நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது பொருட்களை வாங்கி இந்த குலுக்களில் சேர்க்க வேண்டும். இதுதான் எங்கள் வேலை. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை டிவி மற்றும் தினபூமி பத்திரிகையில் வெளியீட வேண்டும்.

அப்படிதான் ஒரு பட்டுப் புடவைக் கடையைப் பிடித்தேன். சென்னை புரசைவாக்கத்தில் அப்போதுதான் அவர்கள் புதிதாக  அருள் ஜெயந்தி சில்க்ஸ்  (கடை பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையை திறந்து இருந்தனர். அதுநாள் வரையில் ஊர் ஊராக சென்று கண்காட்சி மூலம் விற்பனை செய்தவர்கள், ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடையை தொடங்கியிருந்தனர்.

கடை உரிமையாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நண்பராகிவிட...தினபூமி தீபாவளி மலருக்கு 300 பட்டுப் புடவைகள் வழங்க சம்மதித்தார். கேமிராவோடு சென்று அவரது கடையை ஷூட் செய்து, "காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸ் வழங்கும் 300 பட்டுப்புடவைகள்" என்று அனுராதா மேடம் குரலில் விளம்பரமும் வரத்தொடங்கிகிவிட்டது. பரிசுப் பட்டியலில் காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸூம்  சேர்ந்துவிட்டது.

----------

தீபாவளி நெருங்கிக் கொண்டு இருந்தது.....

                  ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புரசைவாக்கம் கடைக்கு நடையாய் நடந்துக் கொண்டு இருந்தேன். எப்போது போனாலும் "ஓனர் இல்லை, வெளியூருக்கு போயிருக்கிறார். அப்புறமா வாங்க" என்ற பதிலே வந்தது.  ஆபிஸில் வேற பதில் சொல்ல முடியவில்லை. மற்ற பொருட்கள் எல்லாம் அலுவலகத்திற்கு லாரியில் வந்துக் கொண்டு இருக்க.... நம்ம பட்டுப் புடவை மட்டும் வரும் வழியே காணும். கடையில் இருந்த மேனேஜர் ராமச்சந்திரன்  "ஓனர் வந்தாதான் சார், பட்டுப் புடவைக்கு வழி; அவர் வராம நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க இரண்டு நாள் கழித்து வாங்க, அவர் வந்தா நான் உங்களுக்கு போன் பண்றேன்." என்றார். நான் போகும் போதெல்லாம் இதே பதிலையே ஸ்டீரியோ டைப்பாய் கூறிக்கொண்டு இருந்தார்.

நாட்கள் வினாடிகளாய் ஓடிக் கொண்டு இருந்தது.......இன்னும் ஓனர் சூரேஷ் வந்தபாடில்லை. இனியும் மேனேஜரை நம்பியிருந்தால் வேலைக்காது என்று நானே அவரது கடை பையன் ஒருவன் மூலம் சுரேஷின் வீட்டு அட்ரஸை கண்டுபிடித்தேன். . வடபழனி குமரன் காலனியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். மதியம் போனால் வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த கடைக்காரர் "சார், காலையில வந்தா பாக்கலாம்" என்றார்.

காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு போனால், வீட்டில் துண்டைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் சுரேஷ். சுற்றியும் தடி தடியாய் ஒரு பத்து பேர் அவரை சுற்றி உட்கார்ந்திருந்தனர். "வா.... மகேஸூ" என்று வரவேற்ற அவரது முகம் வெளிறிக் கிடந்தது. "சார்....பட்டுப்புடவை" என்று நான் ஆரம்பிக்கவும் அந்த கும்பலில் இருந்த ஒருவன் "நீ  யாரு? முதல்ல வெளியில போ..." என்று கத்த ஆரம்பித்தான். "நான் பத்திரிகையில இருந்து வர்றேன்" என்றதும். சுரேஷே முந்திக்கொண்டு "மகேஸூ நீ வெளியில வெயிட் பண்ணு என்றார்"

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் கழித்து சுரேஷே வெளியில் வந்தார். கூடவே ஒரு தடியனும் வெளியில் வந்தான். "மகேஸூ நீ போயி வளசரவக்கம் சிக்னல்ட்ட இருக்கிற சைக்கிள் கடையில போய் பட்டுப் புடவை வாங்கிக்க" என்று கூறிகொண்டே மின்னல் வேகத்தில் எனது தொடையைத் தட்டி,  ஒரு துண்டு பேப்பரை எனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.  "சீக்கிரம் போ, அங்க போனா உனக்கு புடவை கிடைக்கும். நான் முன்னாடியே சொல்லிவச்சிட்டேன்." என்றார்.  எப்படி சைக்கிள் கடையில பட்டுப்புடவை  கிடைக்கும்.   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

குழம்பிக்கொண்டே கீழயிறங்கி டிவிஸ் சேம்ப்பை ஸ்டார்ட் செய்து, இரண்டு தெரு தள்ளி நிறுத்தி பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டு காகிதத்தை பிரித்துப் பார்த்தேன். அதில் வட சென்னை அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, அவரது ஆட்கள் என்னைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். உடனே சென்று வளசரவாக்கம் ராஜாராமனிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விஷயத்தை சொல்லி என்னை காப்பாத்து' என்று கோணல் மாணலாய் எழுதி இருந்தார். அப்போதுதான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது.

சரியாக வளசரவாக்கம் சிக்னல் அருகிலேயே அந்தக் கடை இருந்தது. போய் விஷயத்தை கூறியதும் பதறிவிட்டார்கள். நல்ல வேளை கடை ஓனரின் தம்பியும் அங்கிருந்தார். உடனே மூன்று டாடா சூமோக்களில் ஆட்களை நிரம்பிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். "தம்பி, நீங்க அந்தப் பக்கம் வராதீங்க. அப்படியே போரூர் பக்கம் போயிடுங்க. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு உங்களைப் பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க" என்றார் வளசை ராஜாராமன். (கடத்துனவரும் இவரும்  ஒரே கட்சி)

அப்படியே போரூர் பக்கம்  வண்டியை திருப்பி விடு...  ஜூட்....!!!

அப்ப பட்டுப்புடவை.....?
-------

               ரண்டு நாள் கழித்து இராமச்சந்திரன் போன் செய்திருந்தார். "சார், சார் உங்கள பாக்கனுமா. வடபழனி  சேலம் ஆர் ஆர் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். என்றார். போயிருந்தேன். பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டார். "என் உயிர காப்பாத்தின மகேஸூ, நீ வரல்லனா நான் மாடியிலேருந்து குதிச்சி இருப்பேன். சேலம் செட்டியார்ட்ட வாங்கின கடன் 10 லட்சத்த திருப்பித் தரமுடியல. அதான் அவரு ஆள வச்ச என்ன தூக்க பாத்தாரு. நல்ல வேளை நீ வந்த நான் தப்பிச்சேன்.  வயிறு வலிக்குதுன்னு சொல்லி பாத்ரூம்ல போயி அந்த பேப்பர்ல எழுதினேன்".

இல்லெனா இவ்வளவு நேரம் என்ன நடந்து இருக்கும்ன்னே தெரியாது. அப்புரம் ஆளுங்கள வச்சி பஞ்சாயத்துப் பேசி ஒரு வழியா பிரச்சனையை முடிச்சாச்சிப்பா.   மகேஸூ உன் கல்யாணதுக்கு நம்ம கடை பட்டு புடவைதான்" என்றார்.

"அதெல்லாம் இருக்கட்டும்ண்ணே, எனக்கு பட்டுப் புடவையை குடுங்க. தீபாவளி நெருங்கிகிட்டு இருக்கு. ஆபீஸ்ல தலை காட்ட முடியால. பிரச்சனை பெருசா ஆகும்போல இருக்கு, அதனால பேசினபடி பட்டுப்புடவையை கொடுங்க என்றேன் விடாப்பிடியாக.

"எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, பட்டுப் புடவையை ரெடி பண்ணி கொடுத்திடுறேன். ஏவாரத்தில பயங்கர நஷ்டம். தலை போற பிரச்சனை எனக்கு நிறைய இருக்கு. வர்ற வாரத்தில பட்டுப்புடவை ஒன்ட்ட இருக்கும்" என்றார்.

குறிப்பிட்ட அந்த வாரமும் வந்தது.....

 பார்த்தா கடையும் பூட்டி இருக்கு, அவரது ரூமும் பூட்டி இருக்கு. ஆளூ.... மறுபடியும் எஸ்கேப்!.

அப்ப பட்டுப்புடவை.......??????

அது ஒரு பெரிய கதை. காத்திருக்கவும்!.
-------------

4 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காத்திருக்கிறேன் நண்பரே!
சீக்கிரம் வந்து (உண்மைக்) கதையைப் பதியுங்கள்!

ரொம்பப் பெரிய ரிஸ்க்லாம் எடுத்திருக்கீங்க!
பரோபகார வேலையும் செஞ்சிருக்கீங்க!!
சமயமறிந்து துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு,
அந்தக் கடை முதலாளியைக் காப்பாற்றினீங்க... நல்ல விஷயம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//கடை உரிமையாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) //

// இரண்டு நாள் கழித்து இராமச்சந்திரன் போன் செய்திருந்தார். //

பெயர் மறுபடியும் மாற்றப்பட்டுள்ளது???

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

// கடையில் இருந்த மேனேஜர் ராமச்சந்திரன் "ஓனர் வந்தாதான் சார், பட்டுப் புடவைக்கு வழி; அவர் வராம நான் எதுவும் சொல்ல முடியாது //

இராமச்சந்திரன் கடையின் மேனேஜர்.
----------------
ரொம்ப நாளாட்சி பார்த்து....எப்படி இருக்கீங்க....?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நான் நலம்...

மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...