வெள்ளி, ஜூலை 08, 2022

இசைஞானி இளையாராஜாவோடு ஒரு மஹா சந்திப்பு !

           

'எனது  வாழ்நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன், ஒன்று  தலைவர் கலைஞர்,மற்றொருவர்  இசைஞானி இளையராஜா'

படத்தில் இளையராஜாவோடு நான்
முகநூல் மீள் பதிவு !
 
        மார்க்கெட்டிங்  வேலையில் இலக்குகளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்  நமக்கு, மிக அரிதாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளொன்று அமையும்!   

அப்படியான நாளாக நேற்றைய  முன் தினம் இசை மாமேதை, இசைஞானி  இளையராஜா  அவர்களை  அலுவல் நிமித்தமாக  சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. 

ஊடகத்தில் பணி புரிபவர்கள் பிரபலங்களை கண்டால் பெரிதும்  அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.  ஏன் பிரஸ் மீட்டில் கூட கை தட்ட மாட்டார்கள்.  அப்படியான  மரபு இங்கு  கடைபிடிக்கப்படுகிறது. 

இதெல்லாம் செய்தியாளர்களுக்கு மட்டும் என்றில்லை,  என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கும் இது பால பாடம். 

நிற்க. 

எனது  வாழ் நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன்.  ஒன்று  தலைவர் கலைஞர்,
மற்றொருவர்  இசைஞானி இளையராஜா. 

தலைவர்  கலைஞரோடு அப்படியான  வாய்ப்பு  அமையவில்லை.  முயற்சி செய்திருந்தால் புகைப்படம்  எடுத்திருக்கலாமோ என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.   
காலம் கடந்து விட்டது.

இசைஞானி அவர்களை சந்திக்க வேண்டும்  என்ற எனது கனவில்... காலம் என்னை கை விடவில்லை.  கையை பிடித்து  அவரிடமே அழைத்து  போய் விட்டது. 

அப்போதுதான்  தியானம் முடித்து  வந்து அமர்ந்திருந்தார். அன்றலர்ந்த மலர் போன்றும், கரு நீல கண்ணன் போன்றும், மயக்கும் இசையால் எம்மை உட்கொண்ட மாயக்காரன் போன்றும் அமர்ந்திருந்தார்.

 
எத்தனை எத்தனை  ராகங்கள், எத்தனை எத்தனை  வசீகரப் பாடல்கள்,  எத்தகைய இடரிலும், ஒற்றை நொடியில் நம்மை அக் காலகட்டத்திலிருந்து மீட்டெடுக்கும்  வல்லாதிக்க இசையல்லவா ராக தேவனின்  இசை!

அவ்விசை; நம்மை உயிர்ப்புடன்  இயக்கும் விசை !  

சந்திப்பு முடிந்த தருணத்தில்,  அவரோடு புகைப்படம்  எடுத்துக் கொண்டோம். அன்று உலக புத்தக  தினம் என்பதால் எனது #மறுதாம்பு  கவிதை தொகுப்பை கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். 

முடிவில்லா  இரவுகளிலும், நெடுந்தூரப் பயணங்களிலும் நம்மோடுதானே  இம் மனிதர் இசையாய்  இணைந்து பயணித்திருப்பார்?! 

பிரமிப்பும்  ஆச்சரியமும் கட்டித் தழுவ, அப்படியே  சொக்கிப் போய்.... பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளியே  இருந்த டீ கடையில் லைட்ஸ் ஒன்றை வாங்கி மிதப்பாய் உள்ளிழுக்க... அருகிலிருந்த  மரத்திலிருந்து மிளகு சைஸ் மஞ்சள்  பூக்கள்  என் மீது ஆசிர்வாதமாய் பூச் சொறிந்தன. 
 
-

#இளையராஜா

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.
மிக்க நன்றி அய்யா!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...