சனி, பிப்ரவரி 22, 2014

கணையாழி உயரிய விருதுகள் அறிவிப்பு!


                            விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. 


           தமிழ் இலக்கிய உலகில் தவிற்க முடியத அடையாளம் 'கணையாழி'.  முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக  துணைவேந்தர்  ம.இராசேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியால், கணையாழி மீண்டும் வெளிவந்து இலக்கிய ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

இலக்கிய கர்த்தாக்களுக்கான கணையாழியின் உயரிய விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.  சிறுகதைக்கான 'ஜெயகாந்தன் விருது' எஸ்.டி.ஏ. ஜோதிக்கும், கவிதைக்கான 'ஆண்டாள் விருது' கவிஞர் மலர்மகளுக்கும், கட்டுரைக்கான 'கா.சிவத்தம்பி விருது' முனைவர் பழ.அதியமானுக்கும் வழங்கப்படுகிறது.  சாகித்ய அகாதமி விருதுப் பெற்ற ஜோ.டி. குரூஸூக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

இவ் விழாவில் நல்லி குப்புசாமி, நீதியரசர் கே.சந்துரு, கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமன்பிரகாஷ், எஸ்.கே.பி கல்வி நிருவனங்களின் தலைவர் கு.கருணாநிதி போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை 22/02/2014) மாலை 5 மணிக்கு சென்னை முத்தமிழ் பேரவை அரங்கில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம், (சத்யா ஸ்டூடியோ எதிரில்) நடைபெறுகிறது.

அனைவரும் வருக!

செவ்வாய், பிப்ரவரி 11, 2014

'பிஜேபியால் பைத்தியம் பிடித்து நிற்கும் வைத்தியராமன் தெருவாசிகள்!'




                                            அதிரிபுதிரி அரசியல் ரிப்போர்ட்!                                 
             


                         தினம் ஒரு பிரஸ் மீட், தினம் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை என்று பரப்பரப்பு முகம் காட்டி வருகிறது தமிழக பா.ஜ.க.  முந்தையை தேர்தலில் பற்றிப்படர ஒரு கொழு கொம்பு இல்லாமல் அல்லாடிய பாஜக, இம் முறை  மோடியை சுற்றி படர்ந்திருக்கிறது.  குஜராத்தைவைத்து மோடிமஸ்தான் வேலை செய்து, தனக்கான தனி இமேஜை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி, டீ ஆத்துவதை விட்டுவிட்டு இந்தியாவை நீள அகலத்தில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கொண்டு இருக்கிறார்.

சென்னை திநகர் வைத்தியராமன் தெருவில் இருக்கும் பிஜேபி தலைமை அலுவலகத்தின் வாசலில் வைத்துதான் ஊடகங்களுக்கு  பேட்டி தட்டுகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். ஒரு பக்கம் எல். கணேசன் மைக் பிடிக்க, மறுபக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுக்க, வாசலில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டிக் கொடுக்க தயாராக காத்திருக்க... என்று அந்த ஏரியாவே அதிரிபுதிரியாகி கதிகலங்கி நிற்கிறது. 

தெருவின் திரும்பிய திசையெல்லாம் பத்திரிகையாளர்களும் டிவிக்காரர்களும் நிரம்பி வழிகின்றனர்.
ஒரு டிவி பேட்டி முடித்தால், மற்றோரு டிவி பேட்டியை தொடங்குகிறது.  தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று டம்பிங் பட வரிசைபோன்று ரகத்திற்கு ஒன்றாய் பேட்டி கொடுக்கின்றனர்.

இதற்கு முந்தைய எபிசோடில் பிஜேபிக்காக வரட்டு வரட்டுன்னு கத்திகிட்டு இருந்த தமிழறிவு மணியன், தற்போது தனது டெசிபலைக் குறைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய போய் விட்டார்.  விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடாமல் இருக்க என்னன்னவோ செய்து பார்த்தார்.  தனது வேட்டியை அவுத்து,   கேப்டன் போகும் பாதையெங்கும் திமுக என்ற எழுத்து அவரது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளக் கூட முயன்றார்.  என்ன பிரயோசனம்.....கேப்டன் போடுவது கரன்ஸி கணக்கு என்று தமிழறிவு மணியன் என்ற தவளைக்குப் புரியவில்லை.  திமுகாவிற்கு எதிராக தினம் தினம் கொடுத்த பேட்டியும் வீணாகிவிட்டது.

தமிழறிவு மணியன் சொல்வதை கேட்க இவர் என்ன மச்சான் சதீசா.....?.

மோடியோடு மேடை ஏறுவேன் என்று சொன்ன நம்ம வைகோ, வாழ்த்து தந்தி மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு  தாயகத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். பிற்பாடு கூட இருந்தவர்கள் எடுத்துச் சொல்லப் போக....ரெண்டாம் சாமத்துக்கு மோடியை, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சந்தித்திருக்கிறார் வைகோ.  அன்றைய தினம்  (மோடி வருவதற்கு முன்)  இரவு எட்டரை மணிக்கு கிளம்பிய ஒரு வதந்தி வைகோவை மேடை ஏறாமல் செய்துவிட்டது என்கிறார்கள் வைத்தியராமன் தெருவாசிகள்.


எட்டரை மணிக்கு கடையை (?) மூடிவிட்டு தலைவர்கள் காரில் ஏறி பறக்க இருந்த அந்த செகண்டில், எங்கிருந்தோ பறந்துவந்த ஊடகக்காரர்கள்  "உங்களுக்கும் திமுகவுக்கும் கூட்டணியாமே....?" என்ற வெடியை கொளுத்திப் போட, அது பொன்னார் முகத்தில் சரமாரியாக வெடித்தது.  வைகோவை மேடை ஏறாமல் செய்தது.

"உங்களுக்கு யாருங்க சொன்னா.....யாருங்க சொன்னா.....?" என்று பொன்னார் கோபத்தில் கத்த, "இங்கதாங்க தெரு முக்ல பேசிக்கிட்டாங்க...." என்று ரிப் போட்டர்கள் பொத்தாம் பொதுவாய்  பதிலளிக்க,   பொன்னார் மறுபடியும் மைக் பிடித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.  அன்றைய இரவு மூடிய கடையை மறுபடியும் திறக்கும்படியாகிவிட்டது. 

 பிளாஷ் லைட் வெளிச்சம் பீய்ச்சு அடிக்க.....சீரியல் பார்த்துக் கொண்டு இருந்த வைத்தியராமன் தெருவாசிகள் சிலபல நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியஸ் மூடுக்கு வந்தார்கள். ஒரு கட்சி இருந்தாலே இப்படி இருக்க, அதே தெருவில் இன்னோரு   கட்சியும் இருக்கிறது.

அது சிபிஐ!.  சிபிஐயில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்கள் காம்ரேட்டுகள் என்பதால் கட்சி அலுவலகத்தில் அவ்வளவாக இருப்பதில்லை.  களப்பணியாற்ற சென்றுவிடுகின்றன்ர்.  செவப்பு கலர் உண்டு, அம்மா  தரும் தொகுதி உண்டு என்று காம்ரேட்டுகள் கம்முன்னு கிடந்து ரெண்டு மூனு வருஷமாச்சி. 

ஜெ எதுக்கு காம்ரேட்டுகளுக்கு ஒகே சொன்னார்ன்னு தெரிஞ்சா, எதுத்தாப்பல இருக்குறவுங்க மூக்கு மேல கை வைப்பிங்க.  தான் ஜெயிச்சு டெல்லிக்கு போனா.... கூட மாட கொரல் எழுப்ப ஆளு வேண்டாமா....?.. சைடு சப்போட்டுக்கு எப்படியும் இருபது முப்பது கம்யூனிஸ்ட்டு தேருவாய்ங்க!. 

தான் ஒரு சாமானியன் என்று கதை அளந்த மோடி எஸ்ஆர்எம்  பலகலைக்கழகத்திற்கு தனி விமானத்தில் வந்து போயிருகிறார். பூஷ்வாக்களின் நாயகன் என்ற முகமூடிதான் மோடிக்கு சரியாக பொருந்துகிறது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து இருக்கிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். 

தாங்கள் கூட்டணி வைக்கும் அளவிற்கு பச்சமுத்துவின் IJK ஒன்றும் பெரிய கட்சியல்ல என்ற முணுமுணுப்பு  பாஜகாவில் இப்போதே தோன்றிவிட்டது.

இரண்டு தவணையில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜக இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை, என்பது நிதர்சனம். தனக்கு கிடைக்க இருக்கும் ஒரு வாய்ப்பை பறிகொடுக்கவே பாஜக இம்முறையும் முயலுகிறது.  பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால், ஏதோ.... இப்பவே மோடி பிரதமாராகிவிட்டார் என்ற கனவில் மிதப்பதாகவேப்படுகிறது.

தாமறை கட்சிக்காரர்களே கொஞ்சம் சுய நினைவுக்கு வாங்க......  இல்லென நீங்க அபிட்டுதான்.




திங்கள், பிப்ரவரி 10, 2014

உங்கள் வீட்டு வைத்தியர்.




                  மெத்த படித்த வைத்தியர் ஒருவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு, சதாசர்வக் காலமும் உடலை பேணுவது என்பது நீங்கள் பூர்வ புண்ணியத்தில் பெரும் பாக்கியம் பெற்ற மகா ஜனமாகத்தான் இருக்க முடியும்!. அதுவும் அவர் தமிழகத்தில் புகழ் பெற்ற மருத்துவர் என்றால் கேட்கவே வேண்டாம்.  நீங்கள் பெரும் கோடீஸ்வரராகத்தான் இருக்க முடியும்.

எந்த உபாதையும் இல்லாமல் மாடியிருந்து குதிக்கலாம், லட்டு லட்டாய் ஜிலேபியை முழுங்கலாம், உங்கள் காலைத் தூக்கி பின் பக்கமாய் கழுத்தில் போட்டுக் கொண்டு உஞ்சலாடலாம், திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு உப்புசத்திற்கும் பொருமலுக்கும் ஏழு வித்தியசத்தை எண்ணிக் கூறலாம். வைத்தியர் இருக்க கடவுள் எதுக்குன்னு கூட... நீங்கள் எகத்தாளம் போடலாம். இவை எல்லாவற்றிருக்கும்  டாக்டர் தி.சே.செள.ராஜன் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற நூல் உங்களிடம் இருக்கவேண்டும்!.

2012ம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற டாக்டர் தி.சே.செள.ராஜனின் 'நினைவு அலைகளைத்' தொடர்ந்து, டாக்டர் தி.சே.செள.ராஜனின் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற அடுத்த  படைப்பினை வெளியீட்டுள்ளது சந்தியா பதிப்பகம். இன் நூலின் முதல் படைப்பு 1945ல் வெளி வந்திருக்கிறது. முதல் பதிப்பில் ராஜாஜியின்  முன்னுரையோடு இன் நூல் வெளிவந்திருக்கிறது. கிட்டதட்ட 69 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறார் இந்த வீட்டு வைத்தியர்'.

உதாரணாமாக.... இருதயம் பற்றிக் கூறும் போது, இருதயம் குவிந்த வடிவமுள்ளது. அதன் நுனி இடது மார்புக் கூட்டுகுச் சமீபத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தடவை இருதயம் துடிக்கும்போதும் அதன் நுனி, மார்புக்கூட்டில் வந்து முட்டுகிறது. அதற்கு இருதய முட்டுதல் (Heart Impulse)  என்று பெயர்.  இடது புறம் ஐந்தாவது ஆறாவது விலா எலும்புகளுக்கு மத்தியில் இது காணப்படும். காதைவைத்து பார்த்தாலும் அல்லது இருதய சோதினியை (Stethoscope) வைத்துப் பாத்தாலும் இரண்டு சத்தமும் கேட்கும்.  இந்த சத்தம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுவில் சற்று ஓய்வுடன் இருக்கும். முதலில் கேட்கும் நீண்ட சத்தம் ஏற்றறைச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இரண்டாவது சத்தம் முக்கூற்று ஒரு வழி அடைப்பு முட்டி கொள்ளவதனால் உண்டாகிறது,  என்பது போன்ற மருத்துவ நுணுக்கங்களை நாம் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார் டாக்டர் ராஜன்.

நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருடம் கூடவே இருக்குந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இன் நூலை எழுதினார் என்று தனது முன்னுரையில் கூறுகிறார் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். அந்தக் காலத்து நடையில் எந்த உருத்தலும் இல்லாமல் இந்த காலத்தில் படிப்பது என்பதே சிறந்ததொரு தருணம்தான்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்'   என்ற சராசரி மருத்துவ ஆலோசனையிலிருந்து ஒரு மாறுபட்ட கோணத்தில் எல்லோருக்கும் புரியும்படி வெளிவந்திருக்கிறது. அடிப்படை மருத்துவம், சுகாதாரம், வீடும் அதன் சுற்றுபுரம், பட்டினி என்று 25 அத்தியாங்களில் 563 பக்கங்களில் நம்மை காக்கும் ஒரு கடவுளாக அவதாரமெடுத்து வந்திருக்கிறது இன் நூல். வெறும் மருத்துவ குறிப்புகள் என்று ஜல்லி அடிக்கும் மனோ நிலையிருந்து விலகி, நம் அருகில் அமர்ந்து...இன்னும் ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு... நமது நோய் பற்றி விளக்கம் கூறும் கருணை மிகுந்த மருத்துவரை போன்று நம்முடன் உரையாடுகின்றது  இன் நூல்.

-தோழன் மபா.

(11/1/2014 அன்று தினமணி 'சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில்' நான் எழுதிய புத்தக விமர்சனம்.)

சனி, ஜனவரி 25, 2014

அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்!





           கும்பகோணம் தஞ்சை சாலையில் இருக்கும் அய்யம்பேட்டையில் இருக்கிறது 'இத்தாலியன் பேக்கரி'.  தஞ்சை போகும் வழியில் எதேச்சையாக காரை நிறுத்தி பப்ஸ் வாங்க... "வேற என்ன இருக்கு என்றேன்?".
"எங்க கடை ஸ்பெஷல் 'டீ காபி பிஸ்கட்'  இருக்கு ட்ரை பண்ணி பாருங்க சார் " என்றார் அந்தக் கடையில் இருந்தவர்.

நீட்டு நீட்டாய் இருந்த  பிஸ்கட்டை கொடுத்தார்.

வித்தியாசமான முறையில் மூன்று கைவிரல் சைசில், வரி வரியாக  மொறு மொறு சுவையுடன் இருந்தது  பிஸ்கட். 1957ல் அய்யாச்சாமியால் தொடங்கப்பட்ட இத்தாலியன் பேக்கரியை,  தற்போது மூன்றாவது தலைமுறை நடத்தி வருகிறது.  "எங்களது தாத்தாதான் இந்த பிஸ்கட்டை கண்டுபிடித்தார். இந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு இந்த பிஸ்கட்டை பற்றித் தெரியும்" என்றார் கடையில் இருந்த பேரன்.

அய்யம்பேட்டை 'டீ காபி பிஸ்கட்டை' இவர்கள் மொத்தமாய் செய்து விற்பதில்லை. அன்னனைக்கு செய்துதான் விற்கிறார்கள். 'இது எப்படி தெரியும்' என்று கேட்கிறீர்களா...? 
 
இரவு பத்தரை மணிக்கு திரும்பி வரும்போது கடை திறந்து இருந்தது.  காரை நிறுத்தி பிஸ்கட் கேட்கும் போதுதான் அவர் சொன்னார்  "சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்போமே சார்" என்று.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கர கர மொறு மொறு கிரவுன்ச் !'அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்' அறிமுகப்படுத்தப்படவேண்டிய ஒன்று!.

அந்தப் பக்கம் போனால் வாங்கி சாப்பிட்டுப்பாருங்க!.
கால் கிலோ ரூ.40/-

புதன், ஜனவரி 22, 2014

புத்தகக் காட்சியில் இளைத்துப் போகும் பர்ஸூகள்!




                    என்னை போன்ற கிராமத்து ஆசாமிகள், பொங்கல் கொண்டாட கிராமத்துக்கு வண்டி கட்டிவிடுவதால்,  புத்தகக் காட்சிக்கு பந்தி முடியும் நேரத்தில்தான் உள்ளே நுழைய முடிகிறது. ஒரு வாரம் முழுவதும் பொங்கல் விடுமுறையை கிராமத்திலேயே கழிப்பதால், சென்னை புத்தகக் காட்சியின் முக்கிய நிகழ்வுகளை நிறையவே தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.

பபாசியோடு தினமணிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரங்கத்திலிருந்து ஆர்ச் வரை, (தினமணிக்காக)  முடிவுசெய்துவிட்டு  சரியாக புத்தகக் காட்சியின் உச்சத்தில் கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட செல்வது என்பது சற்று வேதனையான ஒன்றுதான்.

பொங்கல் விடுமுறையை உத்தேசித்தே  சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படுவதால், நமக்கு பொங்கலுக்கும் ஆசை புத்தகத்திற்கும் ஆசையாகிவிடுகிறது?!.  தமிழ் புத்தகம் வாசிப்பவர்கள்தான் தை பொங்கலை கொண்டாட கிராமத்திற்கு போகிறார்கள் என்பது எனது அவதானிப்பு. (வேற தேதிக்கு மாத்தப்படாதா.....?)

இம் முறை புத்தகக் காட்சிக்கு உள்ளே நுழையும் போது, இரவு மணி எட்டேகால்.  சென்னையின் புற நகரிலிருந்து அதன் மையத்திற்கு பீக் அவரில் வரவேண்டும் என்றால், எத்தகைய சிரமமான செவ்வாய்கிரகப் பயணம் என்பதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.  மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு புறப்பட்ட நான் (இல்லெனா குடும்பம் கோவிச்சுக்கும்) இரண்டேகால் மணி நேரம் ஜனவாச ஊர்வலமாக பவனி வந்தே  புத்தகக் காட்சியை அடைந்தேன்.

கிடைத்த முக்கால் மணி நேரத்தில் என்ன வாங்கி விடமுடியும்?. 736 அரங்குகளை பார்த்து முடிக்கவே அர்த்த ஜாமம் ஆகிவிடும். இதில் பிடித்த அரங்குகளை உள்ளே நுழைந்து, புத்தகங்களை பார்த்து (முக்கியமாக விலையை) வாங்கவேண்டும் என்றால் விடிந்துவிடும்!.

போகட்டும்...எனது பிரஸ்தாபத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சரி......வாங்கினதை சொல்லலனா நல்லா இருக்காது?

1 'மீதமிருக்கும் வாழ்வு'.
   -என்.ஸ்ரீராம்.
   பாதரசம் வெளியீடு,சென்னை.
   பக்கம் 78.  விலை ரூ80/-

2  'விமலாதித்த மாமல்லன் கதைகள்'
  -விமலாதித்த மாமல்லன்
     உயிர்மை பதிப்பகம், சென்னை.
     பக்கம் 312. விலை ரூ180/-

3 'தப்புகிறவன் குறித்த பாடல்'
   -லிபி ஆரண்யா.
   உயிர் எழுத்து, திருச்சி.
    பக்கம் 56. விலை ரூ40/-

4 'கவிதையின் கால்தடங்கள்'
    50 கவிஞர்களின்  400 கவிதைகள்
   தொகுப்பு   செல்வராஜ், ஜெகதீசன்.
    அகநாழிகை பதிப்பகம், சென்னை.
    பக்கம் 268. விலை ரூ.230/-

5 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
    -கி.ராஜநாராயணன்.
    அகரம், (அன்னம்)  தஞ்சாவூர். .
   பக்கம் 248.  விலை ரூ150/-

6 'மார்கோ போலோ பயணக்குறிப்புகள்.'
    -தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்.
    அகல், சென்னை.
   பக்கம் 312. விலை ரூ.240/-

7  'டேவிட் ஒகில்வி' (
ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்)
    கிழக்கு பதிப்பகம். விலை ரூ.125/-


8  அந்தமான் சிறை  அல்லது இருட்டு உலகம்.
     - என்.சொக்கன்.
     கிழக்கு  பதிப்பகம். விலை ரூ.100/-
   

9 லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன். (மின்னல் கதைகள்)
   - வா. மணிகண்டன்.
     யாவரும்.காம்.  விலை ரூ.90/

10  அன்ன பட்சி  
      - தேனம்மை லெக்ஷ்மணன்
       அகநாழிகை. விலை ரூ.80/-


 11  தஞ்சாவூர் - பெரிய கோவிலின் 1001-வது ஆண்டு சிறப்பு வெளியீடு.
          -டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்.
   அன்னம், தஞ்சாவூர்.
    பக்கம் 384. விலை ரூ.400/-

12  காசி ஆனந்தன் நறுக்குகள்.

    காசி ஆனந்தன் குடில். விலை ரூ.100/-

13 சேதுக் கால்வாய் தமிழர்கால்வாய்.
      காந்தளகம்.

14 திருமுறைத் திருமணம் / சைவத் திருமண தமிழ் மந்திரங்கள்.


புத்தக விமர்சனம் பிரிதொரு நாளில்.

-தோழன் மபா.

ஞாயிறு, ஜனவரி 12, 2014

பள்ளியில் போதிப்போம்!.


       உலக அளவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.  பராமரிப்பு இல்லாத சாலைகள், சாலை விதிகளைப் பற்றிய அடிப்படை அறிவின்மை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்ட முறைகள் என்று என்னற்ற குறைபாடுகளை கூறலாம்.

மக்கள்தொகை பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கிறது.  

இதில் தமிழகத்தின் நிலைதான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

2003ஆம் ஆண்டு நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின் 2012ல் அதிகபட்சமாக 68,000 விபத்துக்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்கள் நடைபெறுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக தமிழகத்தில் சாலை விபத்து மூலம் 44 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றில் சென்னையில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் இந்திய பெரு நகரங்களில் சென்னை முதலிடத்திலும் (9663), தில்லி இரண்டாவது இடத்திலும் (5865), பெங்களூரு மூன்றாவது இடத்திலும்(5508) உள்ளன.

பொறுமையின்மைதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். சாலையை கண்ட இடத்தில் கடப்பது, முன் எச்சரிக்கை இன்றி வாகனத்தை நிறுத்துவது,  வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது, முறையான சமிக்ஞை தெரிவிக்காமல், வாகனத்தை திருப்புவது, சாலைகளில் சாலை விதிகளைப் பற்றிய குறியீடு இல்லாமை,  அதிக ஒலி எழுப்பி இதர வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அலறவிடுவது, தேவையற்ற யூ திருப்பங்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கும் அல்லது மூடும் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்குவது, வாகனங்களின் முன் உள்ள விளக்குகளில் ஒளி மறைப்பான் இல்லாமல் இயக்குவது, வாகனங்களின் பின்புறத்தில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருப்பது, செப்பனிடப்படாத சாலைகள்,  இடது புறத்தில் முந்திச் செல்லுவது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும்  வீடுகள் உள்ள சிறிய தெருக்களில் எத்தகைய வேகத்தில் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாதது,   வேகத்தடை பற்றிய அறிவிப்பு இல்லாமை, வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு, அதிவேகம், வண்டி ஓட்டும் போது கை பேசியை பயன்படுத்துவது, சாலையை கடக்கும் போது கை பேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது என்று விபத்திற்கான காரணங்களை பெரும் பட்டியலே போடலாம்.

தமிழகத்தில் சாலையில் விபத்து நடந்த இடம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு, அங்கு விபத்து நடைபெற்ற சுவடே இல்லாமல் செய்து விடுகின்றனர்.  இது மிகவும் தவறானது, விபத்து நடந்த இடத்தில்,  ஒரு அறிவிப்பு பலகையை குறைந்தது ஒரு மாதத்திற்காகவாவது வைக்க வேண்டும். அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும், விபத்து பற்றிய அச்சமும் ஏற்படும்.

சாலை விபத்துகள் பற்றிய விழிப்புணர்வே சாலை விபத்துகளை தடுக்க ஒரு முக்கிய காரணியாக அமையும். இதற்கான ஒரே தீர்வு, சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம் தொடங்கிவிட வேண்டும். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, சாலை பாதுகாப்பில் சட்ட முறைகள், வாகன பராமரிப்பு, பாதுகாப்பான வேகம், சாலைகளை பயன்படுத்தும் முறை, பயணிகளின் பாதுகாப்பு,  முதலுதவி, மனித உயிர்களின் முக்கியத்துவம் என்று நாம் பாடத் திட்டத்தில் சேர்க்க நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.
இத்தகைய பாடத்திட்டங்களை நாம், ஆறு அல்லது ஏழாம் வகுப்பிலேயே தொடங்க வேண்டும். வாரத்தில் இரண்டு வகுப்புகளையாவது இதற்கென நாம் ஒதுக்க வேண்டும். இதில் தேர்வுகளையும் வைக்கவேண்டும். இந்த வகுப்புகளைத் தாண்டி வரும் மாணவர்கள்தானே பிற்காலத்தில் வாகன ஓட்டிகளாவும், வாகனங்களை பயன்படுத்துபவராகவும் வருகின்றனர்.
நற்சிந்தனை, நல்லொழுக்கம், உறவின் மேன்மை, உயிரின் உன்னதம் போன்றவற்றை நாம் கல்வியின் மூலமாகத்தான் மாணவச் சமுதாயத்திடம் விதைக்க முடியும்.

இந்த விதைகளே விருட்சமாக வளர்ந்து, விபத்தில்லாத ஒரு உலகை படைக்க உதவும். நொடியில் முடியும் மனித வாழ்க்கையை நீடித்து இருக்க,  இத்தகைய முயற்சிகள் பலன் தரும். சாலை விதிகளை பள்ளிகளில் போதித்தால் மட்டுமே, விபத்தில்லாத  நாளைய உலகை நாம் படைக்க முடியும்.

First Published : 07 January 2014 01:17 AM IST
தினமணியில் வந்த எனது கட்டுரை.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

சென்னை பார்களில் பாடும் பெண்கள்!



சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கிறது அந்த ஹோட்டல்.   வியாபார நிமித்தமாக ஒரு நண்பர் என்னை அங்கு வந்து சந்திக்கும் படி கூறி இருந்தார்.  ஹோட்டலுக்கு சென்று அவரை தொடர்பு கொண்டால்.... "பாரில் இருக்கிறேன் வாங்க" என்றார்.  பார் ஹோட்டலின் தரை தளத்திற்கும் கீழே இருந்தது.

பாரில் குடிமகன்கள் சீப்பிக் கொண்டு இருக்க... ஒரு ஓரத்தில் மூன்று இளம் மங்கைகள் மைக் பிடித்து பாடிக் கொண்டு இருந்தனர். பழைய  மற்றும் புதிய பாடல்களாகப்  பாடி வந்திருந்த 'பார்'யாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு இருந்தனர்.  பொதுவாக இத்தகைகைய நடுத்தரவர்க்க பார்களில், யாரும் பாட மாட்டர்கள். சத்தத்தை அதிகம் வைத்து நமது காதைதான் செவிடாக்குவார்கள். ஆனால், இங்கு பெண்கள் பாடுவது புதிதாக இருந்தது.

ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ஹோட்டல் பார்களில் மட்டும்தான் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடைபெரும்., அல்லது யாராவது ஒருவர் இசை கருவியை மென்மையாக இசைத்து, குடிமகன்களை  உற்சாக மூட்டுவார்கள்.  கார்பெரேட் மனிதர்களின் வாழ்வியலில், இத்தகைய லைஃப் ஸ்டல் சகஜமான ஒன்று.

ஆனால், நடுத்தர வர்க்க  குடிமகன்கள் வாழ்வில் இப்படிப்பட்ட லைப்ஸ்டைல் இல்லை. பாட்டிலை திறந்து ஒரே கல்பாவா அடித்துவிட்டு, ஆபிஸில் இருக்கும் எவனைப் பற்றியாவது சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருப்பதைதான் நாம் அதிகம் பார்த்துக் இருக்கிறோம்.

சிறிய ரக ஹோட்டல்களில் இப்படி பாடகிகளை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது சற்று நெருடலாகவே இருக்கிறது. அதிலும் அந்த  மூன்று பெண்களில் இருவர் மணமானவர்.  பார் முழுவதும் ஆண்கள் குடித்துக் கொண்டு இருக்க, அந்த மூன்று பெண்களும்,  சங்கோஜத்துடன்  பாடிக் கொண்டு இருந்தது வேதனையாக இருந்தது.

பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா....???

சனி, டிசம்பர் 28, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம்!. PART 2


                    எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் எல்லாம் பத்திரிகைகளை நம்பிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைக்கு ஒன்றை அனுப்பிவிட்டு அது எப்போது வரும்? என்று காத்திருப்பார்கள். அப்படி வந்துவிட்டால் அந்தப் பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரிடமும் நான் எழுதியது  வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் காட்டுவார்கள்.
இப்போது எல்லாரும் கையும் கணினியுமாக அலைகிறார்கள். இணையதளங்கள் பெருகிவிட்டன. ஆளுக்கொரு அல்ல...  பல பிளாக்ஸ்பாட்கள் ஆரம்பித்து, நினைத்ததை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்... இவர்கள் !

முந்தைய வலைப்பதிவர்கள் அறிமுகம் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்....


தோத்தவண்டா
ஆரூர் மூனா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில்குமாருக்கு திருவாரூர்தான் சொந்த ஊர். சென்னையில் ரயில்வேயில் பணிபுரியும் இவர் சினிமா, அனுபவம் என்று கலந்துகட்டி எழுதுகிறார். சினிமா பார்ப்பதையே அனுபவப் பதிவாகப் போட்டு சினிமாவைவிட விறுவிறுப்பு ஊட்டக்கூடியவர். (www.amsenthil.com)

யாரும் அழைக்காத நானும்
என் கணினியும்...

நானும் ஒரு வாரமாக பாக்குறேன். ஒரு பய நமக்கு அழைப்புவிட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஒழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.

என்னை, நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும்படி  வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட "காதலர் தினம்' படத்தில்தான். அதிலும் கவுண்டமணி கையின் முட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக்கொண்டு இருந்த அப்பாவி (நீயாடா, வெளங்கிடும்) நான்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாகப் பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்கு பக்கம்கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாஞ்சில் மனோ
சொந்தக் கதை சோகக் கதை என்று ரகளையாய் தனது பதிவுகளை எழுதக்கூடியவர். நாஞ்சிலை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், பஹ்ரைனில் பணி. மும்பையில் வாசம் என்றிருந்தாலும் காமெடியில் கலக்கவே இவருக்கு விருப்பம். அனுபவம் சார்ந்த எழுத்துக்களையே அதிகம் எழுதக் கூடியவர். (http/nanjilmano.blogspot.in)

மலையாளி பெண்கள்  

மலையாளி ஆண்களுக்கு தமிழனைப் பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்பப் பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லியிருக்கேன். அது என் அனுபவமும்கூட. மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்குக் காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, ""தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை (தங்கம்) போல நேசிக்கிறீர்கள். வேலைக்குப் போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள். ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். அப்படியே நாங்கள் வேலைக்கு போய் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூடப் பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள்.  அந்த குணம், பண்பு, பாசம், நேசம்  கேரளாவில் குறைவு மனோ'' என்பார்கள். எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளைப் பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும் (தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்)


அரசர் குளத்தான்
அரசியலில் அதிரடி எழுத்துக்கு சொந்தக்காரர். ரஹீம் கஸாலி என்ற பெயரில் எழுதும் இவர் அறந்தாங்கி அருகில் இருக்கும் அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கலந்து கட்டி எழுதினாலும் அரசியல்தான் இவருக்கு ஃபேவரைட்.
(www.rahimgazzali.com)

சித்திரை திங்கள் முதல் தேதி மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் கலைஞர் டி.வி., மற்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி என்று எந்த மாதத்தின் முதல் தேதியையும் கண்டுகொள்ளாதது ஏன்? அதான் தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியாச்சே, அப்புறம் ஏன் இன்னும் சித்திரை கொண்டாட்டம்? ஒருவேளை சித்திரை முதல் தேதிதான் சிங்களர்களின் புத்தாண்டாம். அதைத்தான் இப்படி மறைமுகமாக கொண்டாடுகிறதோ கலைஞர் டி.வி.

இந்திய ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிட வேண்டும் என்பதைவிட, எதை வெளியிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றன.
   - மனுஷ்யபுத்திரன்.
  
நீங்ககூட அப்படித்தான் தலைவரே... டெல்லி பெண் கற்பழிப்பு, வினோதினி ஆசிட் வீச்சு என்று எல்லாவற்றிற்கும் எதிர்க்குரல் கொடுத்துவிட்டு, சன் நியூஸ் சானலை சேர்ந்த ராஜா மீது அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. அப்படி திறந்திருந்தால், சன் டி.வி. தனக்கு வாய்ப்பு கொடுக்காது என்ற பயம்தானே காரணம்.
ஒன்பது எம்.பி., பத்து எம்.பி. வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரதமர் கனவில் இருக்கும்போது 8192 எம்.பி. அதாவது எட்டு ஜிபி வச்சிருக்க நான் ஏன் பிரதமராகக் கூடாது?

கரிகாலன்
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவகரிகாலன், சமூகப் பொருளாதாரம், தலித் பொருளாதாரம், சிற்பங்கள், ஓவியங்கள், கவிதை, கதை என பதிவிட்டு வருகிறார். மாறி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபத்தான சூழலை வெளிக்கொணர்வதில் இவரது கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. (www.kalidasanj.blogspot.com)

மாற்றம்?
மெக். டொனால்டு, பீட்சா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தமது ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளவு வெற்றி கண்டுவிட்டன என்று சொல்லலாம். இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் பெரும்பான்மை மத்திய தர, வேலை பார்க்கும் வர்க்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் இட முடியாது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ. ஏற்றம், உடல் நலக் குறைவினை, மிகச் சிறிய வயதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து தெளிவு பிறக்கும்.

-நன்றி தினமணி கதிர் (15/12/2013)

 குறிப்பு: இரண்டு  வாரங்கள் கழித்து இந்த பதிவு வருவதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர் வேலை பளு மற்றும் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்பாகவே இந்த காலதாமதம்.

மீண்டும் அடுத்த வலைப்பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்!.
காத்திருங்கள்... அது நீங்களாகக் கூட  இருக்கலாம்?!.
நன்றி!

-தோழன் மபா.



ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...