செவ்வாய், மார்ச் 22, 2016

கள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை



                    ள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வந்த இலங்கை வவுனியா காந்திகுளத்தைச் சேர்ந்த த.மோகன்தாஸ் (22), வேலை கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா ஆகியன தன்னிடம் இல்லை என தெரிவித்த அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் கள்ளப்படகு மூலம் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்தது தவிர மோகன்தாஸ் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்போ, குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணமோ அவரிடம் இல்லை என போலீஸார் இலங்கை துணை தூதரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

இதையடுத்து, மோகன்தாஸ் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து, இலங்கை அனுப்புவதற்கு முயற்சிகளை இலங்கை துணை தூதரகமும், சென்னை காவல்துறையும் மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக அவருக்கு தாற்காலிகமாக பாஸ்போர்ட் வழங்குதற்கு இலங்கை துணை தூதரகம் சம்மதித்துள்ளது என்றும் ஒரிரு நாள்களில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் அவர் வேப்பேரி காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளி, மார்ச் 18, 2016

இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.





த.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம்

             புதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.
இலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
()()()()()
"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'
தமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-
போருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
வேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.
பால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை?. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.
பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.
18/03/2016.

புதன், மார்ச் 16, 2016

யோனியில் உறைந்திருக்கும் சாதி?.





                ந்த கொடூர கொலையை வாட்ஸ்ப்பில் பார்க்கும் போது மனம் பதபதைக்கிறது. மனித நிலை கடந்த மிருக நிலையில் வீசும் அரிவாள், சதைகளை பிளந்து அந்த இளம் ஜோடியின் வாழ்க்கையை வெட்டி வீழ்த்துகிறது.
கொலையாளிகளின் வெறி கூச்சல், கணவனின் மரண ஓலம், சுற்றி ஆயிரம் பேர் இருந்தும் உதவிக்கு வராத மனிதர்கள் என்று உயிரற்ற கணவனின் உடலின் அருகில் அவள் சிலைபோல் நிற்கிறாள். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன் நிகழ்வு அவளிடமிருந்து அகலுமா...?. அதை நினைக்கும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பாளே அந்த அப்பாவி பெண். அவளுக்கு இ(அ)ந்த சமூகம் என்ன செய்துவிட போகிறது?.

காதலிப்பது குற்றம் என்றால் இந்த உலகத்தில் எல்லோருமே குற்றவாளிகள்தான். மகள் காதலிப்பது பிடிக்கவில்லையா...?. ஊர் பொது பஞ்சாயத்தில் வைத்து பேசி முடிவெடுங்கள். இல்லை இரு குடும்ப பெரியவர்கள் பேசி முடிவெடுங்கள். இரு தரப்பும் காவல் துறை முன்னணியில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். சம்மந்தப்பட்டவர்கள் தங்களது ஆசை மகனோ/மகளோ என்கின்ற போது இத்தகைய அணுகுமுறைகள் நிச்சயம் உயிர் பலிகளை தடுக்கும்.

"இதெல்லாம் நடக்கிற காரியமா...?" என்று நீங்கள் கேட்கலாம்?. முன்னேறிய நாகரிக சாதி என்றால் இதைக் கேட்கும், முட்டாப் பய சாதி என்றால், சாதிக்காக முண்டா தட்டும்.
கற்பனையில் இருக்கும் 'சாதி' என்ற பீ பெருமைக்காக மண் தின்னும் இந்த மடையர்களை எப்படி நல்வழிப் படுத்துவது?.

கொலைக்கு பின்னர் கோர்ட்டு கேஸு என்று அலையும், அந்த கொலைகாரக் குடும்பத்தை, சொந்த சாதியினரே வெறுத்தொதுக்குவார்கள் என்பது நாம் அறியாத உண்மை.

சங்கர்-கவுசல்யா திருமண கோலத்தில்


காதல் போய், காதல் கணவன் உயிர் போய், மகள் காலம் முழுவதும் கண்ணீர் சிந்துவதற்கு, கொளரவம் பார்க்காமல் பேசி முடிவெடுப்பது நல்லதுதானே....?. அதைவிடுத்து காதல் பிரச்சனைக்கு காதலனை அல்லது காதலியை கொல்வது ஒன்றுதான் தீர்வு என்று நினைப்பது எத்தனை கொடூரம்?.



மகளின் காதலை அழித்து, அவளின் காதலனை கொடூரமாய் கொன்று, குடும்பமே கொலை பழி சுமந்து, வாழ்க்கை முழுவதும் துயரம் தரித்து... அப்படி என்ன வாழ்க்கையை....., அந்த பெண்ணுக்கு அந்த பெற்றோர்கள் தந்துவிடப் போகிறார்கள்?

புதன், மார்ச் 02, 2016

குவைத்தில் மாபெரும் வீடு மற்றும் வீட்டு மனை கண்காட்சி!.


  


       ந்திய பத்திரிகை உலகில் முன்னணி நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி மற்றும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம்  இணைந்து நடத்தும் சர்வதேச ரியல் எஸ்டேட் கண்காட்சி குவைத்தில் நடைபெறுகிறது.  இவ்வீட்டு மனை கண்காட்சியை VGN டெவலெப்பர்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

இம் மாதம் (மார்ச்) வரும் 4 & 5ம் தேதிகளில் குவைத் சால்மியாவில் ஹோட்டல் ஹாலிடே இன், ஹல்தானா அரங்கில்  இக் கண்காட்சி நடைபெறுகிறது. ( ‘India Realty Show’ in Hotel Holiday Inn, Salmiya Kuwait on 4th & 5th of March ’16) இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புராஜெட்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. இக் கண்காட்சியில் தமிழ் நாடு, கேரளா, ஹைதராபாத், பெங்களூர் முதற்கொண்டு, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்  கலந்துக் கொள்கின்றன.

இந்தியாவின் பிரதான நகரங்களில்,  மக்கள் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வீட்டு மனை, அடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள் (வில்லாக்கள்) வாங்கக் கூடிய வாய்ப்பினை இக் கண்காட்சி வழங்குகிறது.

இக் கண்காட்சியில் உடனடி வீட்டுக் கடன் வசதியையும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம் வழங்கிறது.  குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு  ஒரு அரிய வாய்ப்பு .

அன்போடு அழைக்கிறோம், அனைவரும் வருக!.

செவ்வாய், ஜனவரி 12, 2016

நாளை தொடங்குகிறது சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா!,


         ந்த முறையாவது பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நிறைய பதிப்பகத்தார் நினைத்துக் கொண்டு இருந்தனர். இந்த பொங்கலுக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காமல் போய்விட்டது. 

வழக்கமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) இந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோய்விட்டது. வெள்ளத்தால் தி நகரில் உள்ள பெரும்பான்மையான பதிப்பகங்கள் பாதிப்படைந்துள்ளன. அதனால் சென்னை புத்தகக் காட்சியை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துவிட்டது பபாசி. 

இன்னிலையில் நாளை தொடங்குகிறது 'சென்னை பொங்கல் புத்தகக் திருவிழா'. சென்னை நகரின் மையத்தில் ராயபேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி வரும் ஜனவரி 24ம் தேதி வரை இப் புத்தக் காட்சி நடைபெறுகிறது.  தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெருகின்றன. துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெருகிறது.

கடந்த 38 வருடங்களாக பொங்கலை முன்னிட்டு சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பான்மையான பதிப்பகத்தார் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லமுடிவதில்லை.   இந்த வருடமாவது பொங்கலை ஊரில் மனுச மக்களோடு கொண்டாடலாம் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாம்,  கண்ணை துடைத்துக் கொண்டு  புத்தகத்தை அடுக்கத் தொடங்கிவிட்டனர். 

அடுத்த இரண்டு வாரங்கள் சென்னை ராயப்பட்டை விழா கோலம் பூண போகிறது.  ரொம்ப வருஷத்திற்கு பிறகு சென்னை மவுண்ட் ரோடு பக்கம் சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவது குறிபிடத்தக்கது. 









ஞாயிறு, ஜனவரி 10, 2016

தமிழில் 'இனிஷியல்' ஆசிரியர்களுக்கு உத்திரவு!.



 

   சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது தமிழக பள்ளி கல்வித் துறை. இதுகாறும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடியிருக்கிறது. தமிழில் நமது பெயரை எழுதும் போது, நமது இனிஷியலை ஆங்கிலத்தில் எழுதுவோம் இத் தவறு பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை தொடங்கி வைத்தவர்கள் பள்ளிகல்வி தொடக்க  ஆசிரியர்கள்தான். அவர்கள் அன்று செய்த தவறு இன்றும் பல தலைமுறை தாண்டி, தவறு என்று தெரியாமலேயே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழ ஆர்வலர்கள் இது தொடர்பாக பல முறை குரல் கொடுத்தும் தற்போதுதான் தமிழக கல்வி துறை தனது தவறை சரி செய்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாணைகள், உத்திரவுகள் அனைத்தும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என, தமிழக அரசு  உத்திரவிட்டது. அதேபோல், கல்வி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தமிழில் கையெழுத்து போட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்  துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால் தமிழில் பெயரை எழுதும் போது, ஆங்கிலத்தில் தங்களது இன்னிஷியலை எழுதுகின்றனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த குணமால் என்பவர் பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம் அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும் அதையும் தமிழில் எழுதவும் உத்திரவிட்டுள்ளது.  இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். 

இனி இத் தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!. 

இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை 07/01.2013 ல் தினமணியில் வெளிவந்துள்ளது. 

புதன், டிசம்பர் 02, 2015

சென்னை வரலாற்றில் முதன் முறையாக பத்திரிகைகள் முடக்கம்!.



கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த பெரு மழை சென்னையை வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது. 

துண்டிக்கப்பட்ட சாலைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இதனால் பத்திரிகைகள் வெளி வெருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தி இந்து நாளிதழின் அச்சகம் சென்னை புற நகரான மறைமலை நகரில் இயங்கி வருகிறது. அச்சகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகைகள் அச்சிடுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதோடு இ இந்து நாளிதழின் அச்சக ஊழியர்கள் அண்ணா சாலை அலுவலகத்திலிருந்து மறைமலை நகருக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். நேற்று நகரமே ஸ்தப்பித்ததால் இந்து நாளிதழின் பேருந்துகள் குறித்த நேரத்தில் மறைமலை நகருக்கு செல்ல முடியவில்லை. அதனால் பத்திரிகையை பிரிண்டு செய்ய முடியாத் இக்கட்டான நிலை ஏற்பட்டது. "நாளை தி இந்து ஆங்கிலம மற்றும் இந்து தமிழ இரண்டும் வெளிவராது" என்று நேற்று இரவே அறிவித்துவிட்டார்கள். தி இந்துவின் வரலாற்றில் இது முக்கியமான செய்தியாகும்!.

சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கள் பகுதியில் இயங்கி வரும் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில பத்திரிகையும் வெளி வரவில்லை. அதன் அச்சுக் கூடத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பத்திரிகை வெளிவரவில்லை.

அதேபோல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் இன்று நிறைய இடங்களில் வெளிவரவில்லை. பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் இன் நாளிதழின் அச்சுக் கூடத்திலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட நாளிதழ்களை நகரின் பல பகுதிக்கு எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி, தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமலர் நாளிதழ்கள் விநியோகம் சீராக நடைபெற்று இருக்கிறது. அம்பத்தூர் அண்ணா நகர், மத்திய சென்னை, வட சென்னை போன்ற பகுதிகளில் சீரான விநியோம் நடைபெற்றது. அம்பத்தூர் வாசிகள் தினமணி அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து பத்திரிகைகளை வாங்கி சென்றனர்.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பத்திரிகைகள் வெளிவெருவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினந்தந்தி, தினகரன் நாளிகழ்களில் விநியோகத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எத்தகைய இயற்கை இடற்பாடுகள் ஏற்பட்டாலும் பத்திரிகைள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த பெரு மழை அதை தவிடுபொடியாக்கி வரலாறு படைத்துவிட்டது.

இது 02/12/2015 புதன் கிழமை கள நிலவரம்.

‪#‎chennaiRains‬ ‪#‎Dinamani‬ ‪#‎Thenewindianexpress‬ ‪#‎TOI‬ ‪#‎dailythanthi‬ ‪#‎thehindu‬ ‪#‎dinakaran‬ ‪#‎DC‬ ‪#‎chennaimemories‬
‪#‎சென்னைபெருமழை‬

திங்கள், நவம்பர் 16, 2015

இது லா.ச.ரா நூற்றாண்டு!.


                ந்த நூற்றாண்டின் சொல்லாடல் மிக்க எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு இது.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916 - அக்டோபர் 30ம் தேதி தமிழ் நாட்டில், லால்குடியில் பிறந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளர்.  

தினமணி கதிரில் நான் எழுதிய  கட்டுரை!.
தனது 17வது வயதில் இருந்து எழுத தொடங்கிவிட்ட லா.ச.ரா தமிழின் தவிற்க முடியாத தனித்துவமிக்க எழுத்தாளர். தனது கவித்துவமான எழுத்து நடையில், புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தனது எழுத்தில் வாரி இறைத்தார். புரிந்தவன் புத்திசாலி, புரியாதவன் அபாயக்கசாலி என்ற பேதத்தின் அடிப்படையில் அவரது எழுத்துகள் துலாக்கோலில் அளவிட முடியாதவையாக இருந்தன.

1989ல் 'சிந்தா நதி' கட்டுரை தொகுப்பிற்காக லா.ச.ராவிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.  தினமணி கதிரில் வாரம் இரண்டு பக்கங்கள் எழுத சொன்ன போது முதலில் மறுத்த லா.ச.ரா பின்னர் ஒப்புக்கொண்டு எழுத தொடங்கினார். சிந்தா நதி 48 வாரங்கள்  தினமணி கதிரில் அலைகடலென புரண்டு மோதியது.  அதன் பிரவாகத்தில் காடுகள், மலைகள், நகரங்கள், மனிதர்கள், உணர்வுகள்,  என்று  பூமிக்கு மேல் உள்ள அனைத்தையும் இழுத்து சென்றது. இன்றளவும் இணையதள எழுத்துகளுக்கு 'சிந்தா நதி'யே முன் நதி, மூத்த நதி!.  கட்டுரையை கதை போலவும், கதையை கட்டுரை போலவும் சொல்லும் உத்தியை அவர் சிந்தா நதி முழுவதும் படரவிட்டிருந்தார். அதன் படிமங்களே இன்றும் ஆழமாய் படிந்துக் கிடக்கிறது. எல்லாம் அவரிடத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்ற!. லா.ச.ராவின் எழுத்துகள் புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தரவல்லவை!

சிந்தா நதியில் 'சொல்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

'பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து? அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஓவியங்கள் பயக்கும் மயக்கும். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்...

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!...

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நட்சத்திரங்கள் போன்று மின்னும் எழுத்துகள் நம்மை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. அவை கைகளுக்குள் தட்டுப்படாதவரைக்கும்தானே அவை நட்சத்திரங்கள்?!.

ரசிக்கத்தக்க அளவீடுகளில் அவரது பாணி எழுத்துகள் பிரிதொருவர் தொடராவண்ணமே இருக்கின்றன.

"என் எழுத்துகள் புரியவில்லை என்கிறார்கள். 'புரிந்தது புரியாதது இவை இரண்டுமே தற்காலிக நிலைகள். இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரிகிறது. இல்லாவிட்டால் நாளைமறுநாள். அட, கடைசிவரை புரியாவிட்டால்தான் என்ன ? இருந்து விட்டுப் போகட்டுமே எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்து விடுகிறதா என்ன?' புரிவதைக்காட்டிலும் வாசகன் உணரக்கூடியது, உணர வேண்டியது விஷயத்தில் தாக்குதல் அந்த முதல் பாதிப்பு Impression, Impact ரத்தத்துடன் கலந்து உள்ளத்தில் ரஸாயணம் நிகழ்வது.

நான் ஜனரஞ்சகமான எழுத்தளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு அப்படியே, அதனாலயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும் படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு மூன்று பேர் சொல்லிவிட்டார்கள் எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?".

லா.ச.ராவின் எழுத்துகள் ஆத்ம சுத்திகரிப்பை செய்யக் கூடிய மந்திரத்தை பெற்று இருக்கிறது. கதைகளின் தோதான இடங்களில் அதை அவர் படைத்துவிடுகிறார். தனது முதல் கதையான ஜனனியில் இவ்வாறு எழுதுகிறார் "தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு. கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூட பயப்படுகிறது."

மானுடத்தின் மீதான விடுதலையை இதைவிட எளிதான புரிதலில் யாரும் சொல்லிவிட முடியாது. அகப்பட்டுக்கொண்ட எலி போன்ற அவஸ்த்தையை பெற்ற பிறகே விடுதலைக்கான வாசலை அடைகிறோம். ஆனால் அந்த கதவு ஏற்கனவே திருந்துதான் இருக்கிறது என்பதை உணராமலேயே காலம் நம்மை கடத்திவிடுகிறது.

லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினார். பாபுஜி (Babuji) என்ற கதை Short Story என்ற பத்திரிகையில்  1934ல் வெளிவந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு மதம் பிடிப்பது பற்றிய கதை அது!. அதைத் தொடர்ந்து அவரை தமிழ் முழுவதுமாய் சுவிகரித்துக் கொண்டது.  அவரை பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக் கொள்வதுமில்லை. பல சிறுகதைகள் அவரது அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன் நினைவை பழக்கிக்கொண்டவர் . அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார் என்று நினைவு கூறுகிறார் லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி.

நன்றி தினமணி கதிர். 
15.11.2015.

 ()()()()()

இனி லா.ச.ரா நூற்றாண்டு விழா தொகுப்பு...

விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா உரையாற்றுகிறார்.
அருகில் இடமிருந்து: லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி, கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன், விமர்சகர் முருகேச பாண்டியன்.  (Pix courtesy: Charuonline.com)


        ழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், அண்மையில்  நடைபெற்றது.  டிஸ்கவரி புத்தக நிலையம் இன் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்து நடத்தியது. பத்திரிகைகள் அல்லது பெரிய அமைப்புகள் செய்ய பணியை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருப்பது பாராட்டுக்குறியது. 


நூற்றாண்டு விழாவில் லா.ச.ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை லா.சா.ராவின் புதல்வர் சப்தரிஷி வெளியீட லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி லா.ச.ரா  பெற்றுக் கொண்டார்.  383 பக்கங்களை கொண்ட நேர்த்தியான இத் தொகுப்பு புதிய வாசகர்களை தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது.  டிஸ்கவரி தனக்கான புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

"லா.ச.ராவை வாசிக்குபோதெல்லாம் புத்தகத்தின் பக்கங்களில் அடிக் கோடிட்டு குறித்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தளவிற்கு வாசகனின்று விட்டு விலகாத எழுத்து அவருடையது' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது சிறப்புரையில்.

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார்.  அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விமர்சகர் முருகேச பாண்டியன் மற்றும் பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் லா.ச.ராவைப் பற்றி  நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சிகளை கவிஞர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார். லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவினை கணையாழி, டிஸ்கவரி புக் பேலஸ், ஆம்பல், யாவரும் டாட் காம் ஆகியன ஒருங்கிணைந்து நடத்தின.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...