ஞாயிறு, அக்டோபர் 05, 2014

செகண்ட் லைன் இல்லாத அதிமுக!


.
            "True Leaders don't create followers.... they create more leaders!" என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொருந்தும்.  சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு தமிழக முதல் அமைச்சர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் தலைமை செயளாலர் ஷீலா பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன்,விசாலாச்சி நெடுஞ்சேழியன், அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,செந்தில் பாலாஜி என்று ஏகப்பட்ட பெயர்கள் பட்டியல் இடப்பட்டது. ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பெயரை பரிந்துரைத்துவந்தனர்.

கைது நடவடிக்கைக்குப் பிறகு, ஜெயலலிதாவை இவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. யார் அடுத்த முதல்வர் என்று தெரியாமல் ஆளுக்காள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தனர். பிறகு எப்படியோ மருந்து சீட்டின் பின்புறம் ஜெ OP என்று எழுத....பிரச்சனை தீர்ந்து ஓபி முதல்வரானார். செகண்ட் லைன் இல்லாததே இந்த கடைசி நேர தடுமாற்றத்திற்கு காரணம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

செகண்ட் லைன்.கட்சியோ, இயக்கமோ, போராளிகள் குழுவோ, இராணுவமோ, தனியார் நிறுவனங்களோ, ஊடகங்களோ எதுவாயிருந்தாலும் 'செகண்ட் லைன்'  என்பது இன்றியமையாதது. நிறுவனங்கள் தங்கு தடையின்றி நடைபெற செகண்ட் லைன் என்பது தவிற்கமுடியாத ஒன்று.  முடிவெடுக்கும் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருந்து முடிவெடுப்பவரே செகண்ட் லைன் என்பார்கள். ஒரு நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ் நிலையில் நிறுவனத்திற்கு வரமுடியாமல் போக நேர்ந்தால்   அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரே முடிவெடுப்பார். இன்னும் புரியும்படி கூறுவதென்றால் கணவன் ஃபஸ்ட் லைன், மனைவி செகண்டு லைன். இந்த இரண்டு லைனும் இருந்தால்தால் குடும்பம் குடும்பமாக இருக்கும். இது அரசியலுக்கும் பொருந்தும்.

அதிமுகவை பொருத்தவரை இங்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இரண்டாம், மூன்றாம், நான்காம்  என்று எந்த இடத்திலும் யாரும் நிலையாக இருந்ததில்லை. இன்று உச்சத்தில் இருப்பவன் அடுத்த நாளே மண்ணை கவ்வலாம். நிலையாமை என்பது ஜெயா அமைச்சரவையை பொருத்தவரை நிலையானது!.

ஆளாளுக்கு போராட்டம். ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை மகிழ்விப்பதற்காக கட்சியின் உயர் மட்ட அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை தங்கள் இஷ்ட்டதிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க ஆளும் இல்லை வழி நடத்த தலைமையும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜியார் சமாதியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'ஆள் இல்லாத மாட்டு வண்டி ஆத்தா மேல ஏறிச்சாம்' என்பது போல இருக்கிறது அதிமுகவினரின் செயல்பாடு.

தீர்ப்பு நாளான கடந்த 27ம் தேதி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்றுத் துணி எதுவும் இன்றி, வெறுங் கையோடுதான் ஜெயலலிதா வந்திருந்தார்.  இந்த வழக்கில் வழக்கம் போல் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் விதைத்து இருந்தனர். கர்னாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை என்பதையோ, வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையோ அவரிடும் சொல்லத் துணிந்த இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்பதுதான் உண்மை. "அம்மா ஒன்றும் ஆகாதும்மா" என்று குருட்டுத்தனமாக கூறுபவர்கள் தான் அவரிடம் இருந்தார்கள். அவர்களே இத்தகைய  துயரத்தை ஜெயலாலிதாவிற்கு பரிசாக தந்திருக்கின்றனர்.

ஆட்சி செய்வதில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வேறுபாடு?. அதிமுக ஆட்சியில் அதிகார மையம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும்.  ஜெவைத் தவிர வேறு யாரும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. முக்கிய முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்துக் கிடக்க வேண்டும். ஆனால், திமுகவில் அதிகாரம் மையம் பரவலாக்கப்பட்டு இருக்கும். இந்த பரவலாக்கம் அரசு எந்திரம் விரைவாக நடைபெற உதவியாக இருக்கும்.

தனியார் பஸ் உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேடர்கள், வணிகர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், தோழமை கட்சிகள், இந்திய வாழ் ஈழத்தமிழர்கள் அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள், சினிமா துறையினர் போன்றவர்கள் மூலம் தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி.... குடி மக்களின் அன்றாட வாழ்வில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சட்ட போராட்டமே விடுதலைக்கான வழி என்பது புரியாமல், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இப்படி தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் என்பதை இன்று வரை அதிமுகவின் புதிய தலைமை உணரவில்லை.

சட்ட போராட்டத்தை முன் மொழிந்து தொடர.... ஒரு சரியான தலைமை இல்லாமல் தவிக்கிறது அதிமுக?.

-------------------------

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

375வது பிறந்த நாள்!. சென்னை புகைப்படங்கள்!.



          375வது பிறந்த நாளை கொண்டாடிவிட்டது சென்னை!.  ஆண்டுகள் முன்னுறைக் கடந்தாலும் இன்னும் முதுமை தட்டவில்லை சென்னைக்கு. என்றும் இளமை, என்றென்றும் புதுமை என்பது போல், இன்றும் தனது இளமையை காத்து வருகிறது. சென்னை என்றொரு நகரம் இல்லையென்றால் நானெல்லாம் எங்கே பிழைப்பு தேடி ஓடி இருப்பேன் என்று தெரியவில்லை. 1995ல் கல்லூரி முடிந்ததும் 20 நாட்களில் சென்னைக்கு பஸ் ஏறிவிட்டேன். அன்றிலிருந்து சென்னை என்னை அன்னையைப் போல் காத்துவருகிறது.

மிக உயர்வான மனித நேயம் கொண்ட ஒரு நகரம் சென்னை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடக்கு கிழக்கு மேற்கு என்று பல திசைகளிலும் மனிதர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். மார்க்கெட்டிங் மனிதனான எனக்கு சென்னையை சுற்றுவதுதான் வேலை. நான் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

பார்த்து மகிழுங்கள்!.  வணக்கம் சென்னை!.

-தோழன் மபா.


திங்கள், ஜூலை 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்!.

TAMILSNOW என்ற இணைய தளத்தில் நண்பர் ஹரிஹரன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறேன்.





          இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது.தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது.

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாவது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார்.

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இப்படி அனைத்து பகுதியிலும் விளையாடப்பட்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை.

காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
    

தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
 
இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.
- ஹரிஹரன்

சனி, ஜூலை 26, 2014

"நோக்குமிடமெல்லாம் நீயின்றி வேறில்லை ஜெயகாந்தா(ன்)!"



எழுத்தாளர் ஜெயகாந்தன் 80தாவது பிறந்த நாள் விழா நேரடிப் பதிவு!.
   
ஜெயகாந்தன் 80-ஆவது
பிறந்த நாள் விழாவில் ஜெயகாந்தன் கதைகள் நூலை விகடன் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெறுகிறார். உடன் (இடமிருந்து) மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி,
நடிகர் சிவக்குமார், ஓவியர் மாயா, நூலை தொகுத்த வனிதா ராம் அவரது கணவரும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான லண்டன் மருத்துவர் ராம்.
  
           சென்னை மியூஸிக் அக்காடமிக்குள் நுழைய முடியவில்லை. வழியெங்கும் கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. கிடைத்த இடத்தில் பைக்கை நுழைத்துவிட்டு விழா அரங்கிற்குள் நுழையத் தொடங்கினால்,  வழியிலேயே எழுத்தாளர் தமிழ்மகன் நின்றுக் கொண்டு இருந்தார்.  நலம் விசாரித்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தால் அரங்கம் மக்களால் நிரம்பி இருந்தது. அப்படி ஒரு ஜனத் திரளை நான் பார்த்ததில்லை. எள் போட்டால் கீழே விழ வழியில்லை என்று சொல்வார்களே அப்படி இருந்தது விழா அரங்கு. திரும்பிய திசையெங்கும் மனிதத் தலைகள்.

தமிழ் எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தனின் எண்பதாவது பிறந்த நாள் விழா மற்றும் கதைகள் வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி சென்னை மியூசிக் அக்காடமியில் நடைபெற்றது.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கூட்டமா....? என்று நாம் மலைக்கத் தேவையே இல்லை. நேரு ஸ்டேடியத்தில் வைத்திருந்தாலும் ஸ்டேடியம் நிரம்பி வழிந்துதான் இருக்கும் என்பது உண்மை. லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம் தனது மானசீக எழுத்தாளருக்கு எடுத்த பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர்கள் முதற்கொண்டு ரசிகர்கள்வரை வந்து குவிந்துவிட்டனர்..

அரங்கில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய  வீடியோ காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டு இருந்தது. அவரைப்பற்றிய குறிப்புகள் பெரும் மலைப்பைத் தந்தன. மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்...என்று பல பரிணாமம் பெற்று இருக்கிறார்.

இது நாள்வரையில் மலையாள எழுத்துலக பிதாமகன் வைக்கம் முகமது பஷீர் மட்டுமே பல்வேறு தொழில்களை செய்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன்,  ஜெயகாந்தனும் அந்த வரிசையில் வருகிறார் என்கின்றபோது அவரது எழுத்தின் வீச்சு வரும் திசை தெரிந்தது.

---------

    தமிழ் தாய் வாழ்த்துகளுடன் விழா தொடங்க...மேடையில் இடமிருந்து வலமாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும், மொழிபெயர்ப்பாளரும், முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி இயக்குநருமான கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி, நடிகர் சிவக்குமார்,  தொழிலதிபர் நல்லி குப்புசாமிசெட்டி, விழா நாயகர் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆனந்த விகடன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியன், ஓவியர் மாயா, இவ் விழாவினை நடத்தும் லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம், அவரைத் தொடர்ந்து அவரது துணைவியார் வனிதா ராம் ஆகியோர் வரிசைக்கிரமமாக அமர்ந்து இருந்தனர்.

விழாவில் மூத்த ஓவியர் கோபுலு கலந்துக் கொள்வதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவரது மனைவி இறந்துவிட்டதால் அவர் வரமுடியாமல் போய்விட்டது. அவர் வராத குறையை நடிகர் சிவக்குமார் தீர்த்துவைத்தார். விகடனில் அவர் வரைந்த ஓவியங்கள் பற்றி சிவக்குமார் கூறியது அவர் ஒரு ஓவியக் கலைஞன் என்பதைக் காட்டியது. விகடன் தீபாவளி மலருக்கு கோபுலு வரைந்த ஓவியங்களைப் பற்றி இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்தார். கோபுலு அய்யாவை பார்த்தபோது,  "இந்த கையால படங்கள்ல நிறைய ஸ்டோக்ஸ் போட்டோன்ல்லியோ அதான் எனக்கும்  ஸ்டோக் வந்துடுத்துரா....." என்று அந்த நேரத்திலேயும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார் என்றார்.  ஜெயகாந்தனின் கதைகளில் வரும் கதாபாத்திர பெயர்களையும், கதை சுருக்கத்தையும் சுவைப் பட பேசி பெரும் கைத் தட்டலை பெற்றார்.

முன்னதாக விழாவை தொடங்கிவைத்து டாக்டர் ராம் வரவேற்புரையாற்றினார். ஜெயகாந்தனின் தீவீர ரசிகர் என்பது அவரது ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிலும் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி பல லட்சங்களை செலவு செய்து இந்த விழாவை நடத்துவாரா?. ஜெயகாந்தனின் தீவிர ரசிகர் என்று இவரைத்தான் சொல்லவேண்டும். இவரால்தான் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இவ் விழா எடுக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். நல்லவேளை டாக்டர் காப்பாற்றினார்.

இவ் விழாவில் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல் ஜெயகாந்தன் 70-80களில் அவர் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த கதைகளில் 20 கதைகளை தேர்ந்தெடுத்து, அதே அச்சு வடிவில், அதே ஓவியங்களை கொண்டு  நல்லதொரு தொகுப்பையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.  இத் தொகுப்பை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி வெளியீட விகடன் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஓவியங்களை ஓவியர் மாயாவும், ஓவியர் கோகுலும். வரைந்துள்ளனர். ஜெயகாந்தனை விட மூத்தவரான மாயா அந்த ஓவியங்களை இப்போதும் அப்படியே வரைந்திருப்பது  இத் தொகுப்பிற்கு பெரும் வரவேற்பை கூட்டி இருக்கிறது!.

நடிகை லட்சுமி எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

"பதினோரு வயதுவரை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவோம் படிப்போம். தமிழ் படிக்கத் தெரிந்த பிறகு எனது ஆதர்ஷ எழுத்தாளராக ஜெயகாந்தனே இருந்தார். மிஸ்டர் ஜேகேயோட 'அக்னி பிரவேசம்' என்ற நாவலைத்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள்.  அதில் முக்கியமா ஒரு சீன்:  கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் நிற்க; அவள் ஏற வேண்டிய பஸ் மட்டும் அன்றுப் பார்த்து வர லேட்டாகிறது. அவளோடு கூட இருந்தவர்கள் எல்லோரும் அவரவர் பஸ் வந்தவுடன் ஏறி போய்விட, இந்தப் பெண் மட்டும் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞன் அவள் நிற்பதை பார்த்துவிட்டு, அவளை அவள் வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று கூறி அவளை தனது காரின் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு அவளை யாரும் அற்ற இடத்தில் வைத்து கற்பழித்து விடுகிறான். பின்னர் அவளை அவளது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு பறந்துவிடுகிறான்".

"இந்தப்படத்தில் இந்த சீன் மிகவும் முக்கியமானது. அந்த பிராமணாத்து  வெகுளிப் பெண் கேரக்ட்டருக்கும், மழையில நனைஞ்சி நிக்கிற கேரக்டருக்கும்  நான் தான் பொருத்தமா இருப்பேன்னு ஜேகே, இயக்குனர் பீம்சிங்கிடம் கூறிவிட்டார். அப்போது நடிக்காம ஒதுங்கி இருந்த ஒரு நடிகை ஜெயகாந்தனின் இந்த கதைக்கு நான்தான் நடிப்பேன்னு ஒத்தக்கால்ல பிடிவாதமா நிற்கிறார். அப்படத்தில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டு இருந்தார்.  இயக்குனர் பீம்சிங்கும் இதை ஜேகேயிடம் அடிக்கடி கூறி இருக்கிறார். அப்போ ஜேகே ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க......அய்யோ.....அதை எப்படி நான் சொல்வேன்" என்று இரண்டு மூன்று சொன்னவர், எல்லொரும் ஆவலுடன் அமைதி காக்க.... அவரே ஜேகே சொன்னதை பின்வருமாறு கூறினார்  "அந்த நடிகையையெல்லாம் தனியா அழைச்சிக்கிட்டு போய் கெடுக்க முடியாதுப்பா!"  என்று கூற.... அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது!. அந்தப் படம் 1977ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது என்றார். பேசிமுடித்தவர் ஜெயகாந்தன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று  கைகளை பற்றிக் கொண்டு நெக்குருகி அவரது கால்களை தொட்டு வணங்கினார்.

இவ் விழாவிற்கு கவிஞர் வைரமுத்து வருவதாக இருந்தது.  கடைசி நேரத்தில் வர முடியாமல் போக....அவர் வராத குறையை அவரது வீடியோ பேச்சு தீர்த்துவைத்தது. ஜெயகாந்தனின் தீவிர  ரசிகர் கம் நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா இவ் விழாவிற்கு ஏன் அழைக்கப்படவில்லை  என்ற காரணமும் புரிந்தது. விழாவை ஏற்று   நடத்தியவர்கள் வைரமுத்துவின் உறவினர்கள் என்பதால் இளையராஜாவை இவ் விழவிற்கு அழைக்கவில்லை போலும்?!.

ஏற்புரையாக ஓவியர் மாயாவை பேச அழைத்தனர் "எனது இந்த வெற்றிக்கு விகடன் ஆசிரியரே காரணம், அவர்தான் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்தார். இங்கே கோபுலு வரவில்லை வந்திருந்தால் அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருப்பேன். இங்கே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் இளையவர்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்" என்றார்.

இறுதியாக ஏற்புரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தனர்.  எழுந்து நடக்க முடியாததால் அவரது இருக்கைக்கு மைக் வைக்கப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு பேசிய அவர் " இங்கு வந்து நீங்கள் நன்றி வணக்கம் சொன்னால் போதும் என்றார்கள், இங்கு வர முடியாதவர்கள் மனம் இங்குதான் உலாவிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று குளறலுடன் முடித்துக் கொண்டார். ஜெயகாந்தன் பேசுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.  அதனால் அவரது ஒற்றை வார்த்தைக் கூட நமக்கு கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. தமிழுக்கு கிடைத்த ஒரு யதார்த்தமான எழுத்தாளரின் பிறந்த நாளை அன்று தமிழகமே கொண்டாடியது எனலாம்.

இனி விழா துளிகள்....

விழாவில் தனிப்பட்ட முறையில் பஜாக செயற் குழு உறுப்பினர் இல கணேசன்,  சால்வை போர்த்தினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடியல் சேகர் ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்த மேடைக்குவர.... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

விழாவிற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், எழுத்தாளர் விக்கிரமன், எழுத்தாளர் சுபா, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் பப்பாசி தலைவர்கள் செண்பகா பதிப்பகம் ஷண்முகம் மற்றும் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

இறுதியில் தேசிய கீதம் பாடுவதற்கு, ஒலி பெருக்கி ஏதோ மக்கர் செய்ய....எழுந்து நின்று அனைவரும் ஒரே குரலில் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்தது,   எழுத்தாளர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்  என்பதை சொல்லாமல் சொல்லியது.

()()()()
-தோழன் மபா.
26/07/2014
புகைப்படம் உதவி ஏ.எஸ் கணேஷ்,  தினமணி.


வியாழன், ஜூன் 26, 2014

"முதல்ல லீவு போடு, அப்புறமா கட்டு போடு".



           புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் பாலம் கடந்து அலுவலகம் போக....வேப்பேரிக்கு வலதுபுறம் திரும்பும் போது சொற்பமாக தேங்கி இருந்த தண்ணீரில் பைக் ஸ்கிட்டாக.... அப்படியே வழுக்கி நடு ரோட்டில் நடு நாயகமாக விழுந்தேன். நல்ல வேளை வண்டி எதுவும் வரவில்லை என்று நினைத்த  வேளையில்...தண்ணி லாரி என்னை நோக்கி வந்தது.

மோதி செத்துவிடுவோம் என்று எனக்கு தோன்றவில்லை, அடிபட்டால் அந்த இம்சையை தாங்கவேண்டுமே என்ற எண்ணம்தான் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது. இப்படி நினைக்கும் போதே தண்ணி லாரி என் பைக்கில் மோதி நிற்க.....சரியாக பைக்குக்கும் லாரி பம்பருக்கும் இடையில் எனது இடது கால் மாட்டிக் கொண்டது. (ரொம்ப நாளா எனக்கு பம்பர் அடிக்குமுன்னு நெனைச்சிருந்தேன் அது இதுதான் போல...?!). 

'யாரு பெத்த புள்ளையோ...?' என்று மற்ற வாகன ஓட்டிகள் உச்சு கொட்டுவதற்கு முன்பே காலை லாரி பம்பரிலிருந்து வெடுக்கென்று வினாடி நேரத்தில் விடுவித்துக் கொண்டு தாவி குதித்துவிட்டேன். அதற்குள் கூட்டம் சேர....ஆளுக்காள் லாரி டிரைவரை வாய்க்கு வந்தபடி பாராட்டினார்கள்.  "நல்ல வேளை பிரேக் போட்டு நிறுத்திட்டப்பா", இல்லெனா இந்த ஆளு இம்மா நேரம் பூட்ட கேஸாயிருப்பான்' என்று.

சென்னையில ஓடுற தண்ணி லாரிக்கு பிடிக்காத வார்த்தை 'பிரேக்'. நல்ல வேளை அன்று அந்த லாரிக்கு அது பிடித்து இருந்தது!.


வெடுக்கென்று இழுத்ததில் கால் புசு புசுவென்று வீங்கிவிட்டது. ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. வலது காலில் கல் குத்தி ரத்தம் பேண்ட் வழியோடி ஷூவை நனைத்துக் கொண்டு இருந்தது. நல்ல வேளையாக சக அலுவலக தோழர்கள் ராஜாவும் அருணும் பின்னடியே வந்து முன்னாடி வந்துவிட்டார்கள். பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, என்னை 'டோ' பண்ணிக்கொண்டு போய் டவுண்டனில் இருந்த கிளினிக்கில் சேர்ந்து முதலுதவினார்கள்.

காலில் கட்டை போட்டுக்கொண்டு, பிற்பாடு ஒரு கால் பண்ணி, கால் டாக்ஸியை பிடித்து, வீடு வந்து சேர்ந்தால் மனைவி கண்ணை கசக்கினாள்.  அடுத்த நாள் அம்பத்தூரில் இருக்கும் செந்தில்குமார் எலும்பு டாக்டரிடம் போனேன். கிரேஸி மோகன் போல நோயாளர்களிடம் நேயமாய் கதை பேசிக்கொண்டு இருந்தார்.

"டாக்டர் ஏற்கனவே உங்களிடம் வந்து இருக்கிறேன்" என்றேன்.

"எலும்பு முறிவுன்னு நினைச்சவுடனே என் ஞாபகம் வருதுன்னா, நான் நல்லா மார்கெட்டிங் பண்ணி இருக்கிறேன்னு" அர்த்தம் என்றார்.

அடுத்த முறை கறி கடையில் நல்லி எலும்பு வாங்குறப்ப இவர் ஞாபகம் வராம இருக்க வேண்டும்!?.


எக்ஸ்ரேயை லைட்டடிச்சி பார்த்தவர் "உங்கள் காலில் 'சிப் கிராக்' ஆகியிருக்கு" என்றார் கண்ணடித்துக் கொண்டே....!.  "காலில் காயம் ஆறிய பிறகு 'கிரிப் பேண்டேஜ்' போடலாம்.  அப்படி இப்படி எப்படியும் காலை அசைக்கக் கூடாது. காலை தொங்கப் போடாம நீட்ட வாக்கில்தான் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் வலி இருக்கும்" என்றார்.

"எவ்வளவு செலவு ஆகும்? டாக்டர்ன்னு கேக்கிறதுக்குப் பதிலா எத்தனை நாளாகும்? டாக்டர்"ன்னு கேட்டேன். "குறைந்தது மூனு வாரம் ஆகும்" என்றார். "அவ்வளவு நாள் லீவு கிடைக்காது டாக்டர்" அப்படின்னேன்.

கிராக்குக்கு கிராக்குத்தனமா பேசாதிங்க என்பது போல் பார்த்தவர், முதல்ல லீவு போடுங்க அப்புறமா காலில் கட்டு போடலாம் என்றார் பலமாக சிரித்துக் கொண்டே!.

இந்த வலியைவிட தினமணி இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொள்ள முடியாததே எனக்கு பெரும் 'வலி'யைத் தந்தது.

-தோழன் மபா.
19/06/2014

----------------------- 

திங்கள், ஜூன் 23, 2014

கரைபுரண்டோடும் காவிரி'-கவின் மிகு காட்சிகள். வீடியோ இணைப்பு



ஒரு கன்னி முயற்சி. சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எங்களூர் காவிரி ஆற்றை படம் எடுத்திருந்தேன். அதை ஒரு இனிய இசையுடன் கூடிய வீடியோ ஸ்லைடாக மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் விமசர்னம் முக்கியம்.

இனிமையான இசை. மனதை வருடும் ஆற்றாங்கரை. காவிரியின் அழகு நமது மனதை மயக்கும்.
   


வெள்ளி, ஜூன் 20, 2014

தினமணி நடத்தும் இரண்டு நாள் இலக்கியத் திருவிழா!. சென்னையில் நாளை தொடங்குகிறது!.


அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்!.

                தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் தினமணி நாளிதழ்,  தமிழ் மீதான தனது காதலை வெளிப்படுத்த எப்போதும் தவறியதில்லை. தமிழ் மொழிக்கான தனது வழமைகளிலிருந்து என்றுமே அது பின் வாங்கியதில்லை. தலையங்கம், தினம்தோறும் சமூகம்/ இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், துணை கட்டுரைகள்,  ஞாயிறு தோறும் ஒரு பக்கம் தமிழ் மணி, செம்மொழி சிறப்பு மலர், தில்லியில் தமிழ் இலக்கிய மாநாடு என்று முன்னெப்போதையும் விட இப்போது  தமிழ் மீது பித்துப் பிடித்துக் கிடக்கிறது தினமணி நாளிதழ்.

வரும் 21 (சனிக் கிழமை) மற்றும் 22ம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரமாண்டமான தமிழ் இலக்கிய திருவிழாவினை தினமணி நடத்துகிறது. 32 அறிஞர்கள் பங்கேற்கும் 8 அமர்வுகளில் ஆய்வு அரங்கம், இலக்கிய பேருரைகள், எழுத்தாளர்களின் நினைவலைகள், அரசியல் தலைவர்களின் இலக்கிய பேச்சு, என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நல்லதொரு தமிழ் இலக்கிய திருவிழா தொடங்க இருக்கிறது.

முதல் நாள் (21/06/2014)
முதல் அமர்வு

'இன்றைய தேவையும் இலக்கியமும்'          
        தலைமை: அவ்வை நடராஜன்.       
        பேராளர்கள்: வீ,அரசு,எஸ்.ராமகிருஷ்ணன், நா.கண்ணன் (மலேஷியா).


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.நெடுமாறன்.

இரண்டாவது அமர்வு

 'காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்'.
         தலைமை: ஞானராஜசேகரன்,
        பேராளர்கள்: எஸ்.பி.முத்துராமன், கே.பாரதி, ரோகிணி.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருச்சி சிவா.


மூன்றாவது அமர்வு

 'தகவல் ஊடகத்தில் தமிழ்'
              தலைமை: மாலன்.
             பேராளர்கள்; ஆ.இரா,வேங்கடாசலபதி,சுபாஷிணி ட்ரம்மல் (ஜெர்மனி),
             'காலச்சுவடு' கண்ணன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: தமிழருவி மணியன்.

நான்காவது அமர்வு
மொழியும் பெயர்ப்பும்'
             தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்.
             பேராளர்கள்: நா.குறிஞ்சி வேலன், கா. செல்லப்பன், 'வயல்' சி. மோகன்.

கலை விருந்து: ஜாஹிர் உசேனின் 'தசாவதாரம்' நாட்டிய நாடகம்.


இரண்டாம் நாள் (22/06/2014)

ஐந்தாவது அமர்வு
 'சமயமும் தமிழும்'.
                  தலைமை: சுதா சேஷய்யன். 
     பேராளர்கள்: அரங்க. ராமலிங்கம், திருப்பூர் கிருஷ்ணன், சங்கர. சீத்தாராமன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.கருப்பையா.

ஆறாவது அமர்வு
 'வாசிப்பும் பழக்கமும்'
   தலைமை: ம.இராசேந்திரன்.
   பேராளர்கள்: சு.வெங்கடேசன், நா.முத்துக்குமார், பாரதி.கிருஷ்ணகுமார்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருமாவளவன்
.

ஏழாவது அமர்வு

    'வேர்களைத் தேடி-இலக்கியம்'.     
தலைமை: இ.சுந்தரமூர்த்தி. 
பேராளர்கள்: கி.நாச்சிமுத்து, மு.மேத்தா, க.நெடுஞ்செழியன்.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: வைகோ.

எட்டாவது அமர்வு

 'வேர்களைத் தேடி- கலைகள்'.    
 தலைமை: இரா.நாகசாமி.
பேராளர்கள்: ட்ராட்ஸ்கி மருது, சே.இராமானுஜம், பி.எம்.சுந்தரம்.


மாலை 6 -7.30 மணிக்கு

சொர்ணமால்யா கணேஷ் குழுவினரின் 'ராஜராஜன் நாட்டிய நாடகம்'
.


தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தொடங்கி வைத்து சிறப்புறை ஆற்றுகிறார்.  விழா நிறைவுரையை ஆற்றுகிறார் தமிழக ஆளுனர் ரோசைய்யா. இரண்டு நாள் விழா நிகழ்ச்சிகளை தினமணி இணையதளத்தில் நேரலையாகவும்  நாம் காணலாம். தொடக்க விழாவில் இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதோடு பபாபிசியின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் விற்பனையும் விழா அரங்கில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு!.

அனைவரும் வருக! தமிழ் அமுதம் பருக!!.

தொடர்புக்கு:
98405 98008, 98411 43048.
98404 54062, 99416 14411.

வியாழன், மே 01, 2014

மத இரத்தத்தை சென்னையின் மீது பூச வேண்டாம்.



                      இனி எல்லா இழவுகளும்,  சென்னையில் நடைபெறுமோ என்று அச்சமாக இருக்கிறது. வட இந்தியாவில் அவ்வப்போது நிகழும் குண்டு வெடிப்புகள் நமக்கு செய்தியாகத்தான் தரப்பட்டது. அனுபவ ரீதியான பாதிப்புகள் என்பது சென்னையில் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அமைதிப் பூங்காவாக சென்னை இருந்து வருகிறது. இன்று நடந்த குண்டு வெடிப்பு நமக்குள் பெரிதும் அச்சத்தையும்  துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் ரீதியாக சென்னையின் முகம் சற்று மாறத் தொடங்கியதுமே இந்த வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியலாக இருந்தாலும் சரி மதம் சார்பான அனுகுமுறையாக இருந்தாலும் சரி நடு நிலைப்போக்கையே இது நாள் வரையில் நாம் கடைபிடித்து வருகிறோம். நாட்டின் பிற நகரங்களில் நிகழும் மத ரீதியான தீவிரச் செயல்கள் கூட, சென்னையைவிட்டு தூரத்தில்தான் இருக்கும். இங்கு அனைத்து மதத்தினரும் நடு நிலை கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.


சென்னை சென்ரலில் திட்டமிட்டே இந்த குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. இதில் ஆந்திராவை சேர்ந்த அப்பாவி சுவாதி என்ற இளம் பெண் தனது இன்னுயிரை துறந்திருக்கிறாள். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சார்ந்தவர்கள்.  பெங்களூரில் இருந்து  சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலே இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.  சென்னையில் வெடிக்கும் வகையில் இந்த வெடி குண்டு அமைக்கப்பட்டுள்ளது.   சென்னை மீது அப்படி என்ன வன்மம் என்று தெரியவில்லை?.

சென்னை எப்போதுமே, எல்லோரையுமே  சுய சுதந்திரத்துடன் வாழ வைக்கும் ஒரு நகரம். இங்கு நமக்கான உழைப்பின் பலனை, எவரது குறிக்கீடும் இல்லாமல் நாம் அனுபவிக்கலாம். இந்த நகரத்தின்  மீதான அன்பு என்பது, இங்கு குடிபெயர்ந்த மனிதர்களிடம் வாஞ்சையில்லாமல் விரவிக் கிடக்கிறது.  பிற மாநிலத்தவர்கள் கூட தனக்கான தனியோரு Gated Community குடியிருப்புகளை சர்வ சுதந்திரமாய் அமைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் ஒரு மாபெரும் பரந்த இதயம் கொண்ட நகரம்.  வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் மார்வாரி மற்றும் ஜெயின் சமூகத்தினர் தங்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர்.   வந்தாரை வாழ வைப்பதில் சென்னைக்கு என்றுமே முதல் இடம்.


பெண்களிடம் பேசுவதில் சென்னை இளைஞர்களுக்கு இன்றும் தயக்கம் இருக்கிறது என்கிறார் நேகா குப்தா என்ற கல்லூரி மாணவி.  இவர் வட இந்தியாவிலிருந்து சென்னையில் தங்கி கல்வி பயிலுகிறார். அந்தளவிற்கு தனி மனித ஒழுக்கம் இன்னும் சென்னையில் கடைபிடிக்கப்படுகிறது.  மும்பை பெங்களூரு போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு எல்லைக்குள்ளேதான் நாம் வைத்திருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் சில பாலியல் சீண்டல்களைவைத்து நாம் மொத்தமாய் எடை போட்டுவிடக் கூடாது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில்  விபச்சார விடுதிகள் அரசின் துணைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் 80களில் சென்னையிலும் அப்படி ஒரு 'ரெட்லைட் ஏரியாவை'  ஏற்படுத்த சர்வதேச தாதாக்கள் முயன்றபோது....  அதை முளையிலேயே கிள்ளி எறிந்தது தமிழக காவல் துறை.  இரவு எந்த நேரமானாலும் சென்னையின் பிரதான பகுதிகளில் எந்தவித அச்சமுமின்றி நாம் பயணிக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் அன்று!. அனுபவத்தில் கண்ட ஒன்று. சென்னை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் நகரம் எப்போதும் பாதுகாப்பாய் இருக்கிறது.  காவல் துறையினருக்கு அரசியல் குறிக்கீடு இல்லையென்றால், இவர்களது பணி இன்னும் சிறப்பாகவே இருக்கும். 

முன்பெல்லாம் சென்னை சாலையில் ஒரு மனிதன் அடிப்பட்டு விழுந்தால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது.  சாலையில் ஒரு விபத்து என்றால் ஆயிரம் கைகள் உதவிக்கு வருகிறது.  பைக்கில் சறுக்கி விழுந்தால் கூட, உடனே நாலு பேர் பைக்கை நிறுத்தி உதவிக்கு ஓடி வருகிறார்கள். அந்தளவிற்கு இங்கு மனித நேயம் காப்பாற்றப்படுகிறது.  மனிதனுக்கு மனிதன் உதவி செய்யக் கூடிய மன நிலையில் சென்னை மக்கள் வாழ்கிறார்கள்.

சென்னையை பாதுகாப்பதில் காவல் துறைக்கு மட்டும்தான் கவலையா, நமக்கு இல்லையா.....?. என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.  சென்னையில் கிட்டதட்ட 9 கோடி மக்கள்   வசிக்கின்றனர். ஆனால் காவல் துறையினரின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் இல்லை.  413 பேருக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் இங்கு பணியாற்றுகின்றனர்.  இன்னிலையில் முழுமையான பாதுகாப்பு என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

பெற்ற அன்னைக்குப் பிறகு நம்மை காப்பாற்றும் சென்னையை நாமும் காப்பாற்றுவோம்.  எல்லோரும் அச்சமின்றி வாழ நமக்கான பாதுகாப்பை நாம் முன்னிறுத்துவோம்.   சென்னையில் மத தீவிரவாதத்தை வேரறுப்போம். மதங்களை கடந்து, சாதி இனம் கடந்து நமக்கான சென்னையை பாதுகாப்பதில் நாம் நமது பங்களிப்பைத் தருவோம்.  மத சாயத்தை சென்னையின் மீது பூசுவதை நாம் அனுமதிக்க வேண்டாம்.  மத ரீதியிலான தாக்குதல்களை நாம் முறியடிப்போம். இனி ஒரு குண்டு வெடிப்பு சென்னைக்கு வேண்டாம்.  மத தீவிரவாதத்தை ஒழித்து மனிதநேயம் காப்போம். கெட்ட போரிடும் உலகை  வேரோடு சாய்ப்போம்.

"ஒன்றிணைவோம் உறுதிபடுவோம்!"

-தோழன் மபா.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...