வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

சரத்குமார்- சக்சேனா என்ற மனிதக் குரளிகள்?

                                                                                              தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

         உலகில் எது மிகவும் வேகமானது சக்திவாய்ந்தது என்று உங்களை கேட்டால்,  நீங்கள் எதை சொல்வீர்கள்?                                                                      

நீங்கள் எதை சொல்வீர்களோ....எனக்குத் தெரியாது. 

என்னை கேட்டால் ...நான் 'காலம்'தான் என்று சொல்வேன்.  

 காலம்தான் ஒருவருடைய வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடக்கூடிய அசாத்திய சக்திப் படைத்தது. 
      
அதிகாரத்தின்  உச்சத்தில், புகழ் மயக்கத்தில்  ஆடும் ஆட்டம்....அதன் காரம் குறையும் போது,  சாரம் இழந்து முகம் வெளுத்து 'கை' கொடுப்பார் யாருமின்றி, அன்று போற்றியவர்கள் இன்று அணி திரண்டு  தூற்றும் காட்சியை 'காலம்' எப்போதும் கனக்கச்சிதாமக முடித்துவிடுகிறது. எல்லாவற்றையும் உடனுக்குடனே நம் கண் முன்னால் காட்டியும் விடுகிறது.

அதுவும் ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாக இருந்துவிட்டால் போதும். அவர்கள் தரும் அதிகாரத்தாலும் பண புழக்கத்தாலும்,   மந்திரவாதியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, மனசாட்சியற்ற  மனிதக் குரளியாக மாறிவிடுகிறார்கள். மந்திரவாதியின் கையில் இருக்கும் குரளி வேலை முடிந்ததும் திரும்பிவிடும்,  மாட்டிக் கொண்டால் தப்பித்துவிடும், அல்லது அந்த மந்திரவாதியையே கொன்றுவிடும். ஆனால் இந்த மனித குரளிகள் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். காலம் முடியும் வரை 'பலி ஆடுதான்'.  இவர்களால் இந்த மந்திரவாதியை ஒன்றும் செய்ய முடியாது. 

இங்கு  மனிதக் குறளிகள் இரண்டு பேர்.  ஒருவர்  கலைஞர் டிவி ஷரத்குமார் ரெட்டி.   மற்றொருவர் ஹன்சராஜ் சக்சேனா.  இருவரும் சன் டிவி கலாநிதி மாறனின் தாயரிப்புகள். யாரும் அசைக்க முடியாத  இந்த இரண்டு மனிதக் குறளிகளும்  இருப்பது சிறையில். காலத்தின் கோலத்தை சற்று விரிவாகப் பார்ப்போம். 


கலாநிதியின் நண்பர்கள்.

 
  இந்தியா டுடே நிறுவனம், அப்போது அதாவது 90களில்  வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, 'நியூஸ் ட்ராக்' என்ற வீடியோ பத்திரிகையை தொடங்கியது.

இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட்.
1993ல் சன் டிவி தொடங்கப்பட்டபோது இனைத்துக் கொள்ளப்பட்டவர்கள்தான்  சரத்குமார் ரெட்டியும் , ஹன்ஸ் ராஜ் சக்சேனாவும்.  சன் டிவி தொடங்க  ஷரத்குமார் ரெட்டியின் மூலதனமும் உண்டு. இவர்கள் இருவரும் கலாநிதி மாறனின் நெருங்கிய கல்லூரித் தோழர்கள். 

கலாநிதி மாறன் தனது நிறுவனங்களில் அனைத்து துறைகளிலும் தனது நம்பிக்கையைப் பெற்ற கல்லூரி நண்பர்களையே தளபதிகளாக நியமித்திருந்தார்.  ஷரத்குமார் ரெட்டி, ஹன்ஸ் ராஜ் சக்சேனா மற்றும் தினகரனின் முக்கிய நிர்வாகியான ஆர்.எம்.ஆர். ரமேஷ்.  இவர்கள்தான் சன் குழுமத்தின் முக்கிய தூண்கள். இதில் ஆர்.எம்.ஆர். ரமேஷ் 'சூரியன் எஃப் எம்' மற்றும் 'தினகரனில்' பிஸியாகிவிட....ஷரத் ரெட்டியும், ஹன்ஸ் ராஜ் சக்சேனாவும்  சன் டிவியில் பிசியாக இருந்தார்கள்.


சரத்குமார் ரெட்டி மற்றும் ஹன்ஸ் ராஜ் சக்சேனா இருவரில் முதலில் ஹன்ஸ் ராஜ் சக்சேனாவைப் பார்ப்போம்.

மாறனின் மனம் அறிந்து செயல்படும் ஹன்சராஜ் சக்சேனா!

 2007ல் சன் பிக்சர்ஸ் தொடங்கியபோதுதான் சக்சேனாவின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது.

சன் டிவியின் நிகழ்ச்சிகளில் சினிமாவைதான் கூட்டாக, குருமாவாக பொறியலாக, வறுவலாக என்று 80% சினிமாவையே வித விதமாக தந்துக்கொண்டு இருந்தனர். அதனாலயே சன் டிவி நிறுவனம்.  பட வினியோகத் துறையில் கால் பதித்தது. படமெடுத்து வெளியிட முடியாமல் சிரமப்படும் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தை விலை பேசி வாங்கத்தொடங்கியது. அதற்கு சரியான ஆள் யார் என்ற கேள்வி எழுந்தபோது....  ஹன்சராஜ் சக்சேனாவை நியமித்தார் காலநிதி மாறன்.  ஹன்சராஜ் சக்சேனா தனக்குத் துணையாக அய்யப்பனை நியமித்துக் கொண்டார்.

நண்பனின் கட்டளையை சிரமேற்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தை முதலில் வாங்கினார் சக்சேனா.   'காதலில் விழுந்தேன்' படத்தை முதலில் 'அட்லாண்டி‌க் சினிமாஸ்' நிறுவனம்தான் தயாரித்தது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை வாங்கி விளம்பரப்படுத்தியது. ஹன்சராஜின் வியாபார தந்திரம் அந்த படத்தை பட்டித்தொட்டியெல்லம் பிரபலமாக்கியது. இங்கிருந்துதான் தனது ஆட்டதை ஆரம்பித்தார் ஹன்சராஜ் சக்சேனா. ஆட்டத்தின் நெளிவு சுளிவுகளை கண்டுக்கொண்ட ஹன்சராஜ் வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவை தனது கைக்குள் கொண்டுவந்தார்.  சன் பிக்சர்ஸின் காதலில்விழுந்'தேனை' தொடர்ந்து மாசிலாமணி, தெனாவெட்டு என்று பட விநி'யோகம்' புதுப் பாதையில் புறப்பட்டது.

இந்த நேரத்தில்தான் எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கவும்  நாயகியாக ஐஸ்வர்யா ராயும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பெரு நாட்டில் தொடங்கிய படப்பிடிப்பு . கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஐங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இண்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள  இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்  நிறுவனம்.  பெரும் தொகைக்கு படம் கைமாறியது.. இதில் ஹன்சராஜ் சக்சேனாவின் பங்கு அதிகம். அவரது கண்பார்வையில் எந்திரன் பிரமாண்டமாய் வளர்ந்து வெளிவந்து இந்திய சினிமாவின் உச்சமான நிலையை அடைந்தது.  அல்லது அப்படி நமக்கு காட்டப்பட்டது. 

 நடப்பது அவுங்க ( திமுக)  ஆட்சி என்பதால்,   கெஞ்சிவாங்கப்பட்ட நிலை மாறி நல்ல படங்களை மிரட்டி வாங்கத் தொடங்கினார்  சக்சேனா.  இதில் பிரபல சினிமா நிறுவனங்கள் கூட தாங்கள் தயாரிக்கும் படத்தை மறுவார்த்தை பேசாமல் சன் பிக்சர்ஸுக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதைவிட கொடுமையான விஷயம் ஏவிஎம், கவிதாலயா போன்ற நிறுவனங்கள் கூட படத் தயாரிப்பையே தள்ளிபோட்டனர். படம் வாங்குவதிலும் தனது அதிரடியை காட்டினார் ஹன்சராஜ். அதாவது படத்தை தயாரித்த நிறுவனங்கள் விலை நிர்ணயக்கமுடியாது.  விலையை ஹன்சராஜ் சக்சேனாதான்  நிர்ணயப்பார் என்கிறது  விஷயம் அறிந்த சினிமா வட்டாரம். இதனால் சின்னதும் பெரிதுமான சினிமா தாயரிப்பாளர்கள் சக்சேனாவால் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று  பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த 'காவலன்' படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில்தான் ஆடுகளம் படத்தையும் வெளியிட முடிவு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.இந்த நேரத்தில் விஜய் படம் வெளிவந்தால், ஆடுகளத்தின் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால் சில மறைமுக காரியங்களை செய்ய ஆரம்பித்தார் சக்சேனா என்பது சினிமா உலகம் அறிந்த ரகசியம்.  இப்படி நிறைய திரைமறைவு வேளைகளை சன் பிக்சர்ஸுக்காக செய்ய ஆரம்பித்தார் சக்சேனா. இதை வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளேயும் சொல்ல முடியாமல் தவித்தனர் பாதிக்கப்பட்ட சினிமா பிரமுகர்கள்

ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்.
            

இன்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
 
"கந்தன் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் கொடுத்த மோசடி புகாரின் அடிபடையில்....  கடந்த ஜுலை மாதம் 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே  கைது செய்து, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சக்சேனாவை 14 நாட்கள் கோர்ட் காவலில் வைத்து பின்னர் புழல் சிறையிலடைகப்பட்டார். அது நாள் வரையில் சும்ம இருந்த சினிமா வினியோகஸ்தர்கள் கம் தயாரிப்பாளகள் வெடி வெடித்து கொண்டாடினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சக்சேனா கைது செய்யப்பட்டதும், பல தயாரிப்பாளர்கள் துணிந்து அவர் மீது புகார் தெரிவித்தனர்.


    

 "படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காமலும், வாங்கிய படங்களுக்கு சரியாக பணம் தராமலும், பல சிறிய படங்கள் வெளிவர முடியாத நிலையை உருவாக்கியும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களையும், வஞ்சித்த சன், "டிவி தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்ததன் மூலம், தமிழ்த் திரையுலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன். 

இப்படி அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் பூதமென கிளம்பி ஹன்சராஜ் சக்சேனாவை இரும்பு அறைக்குள் வைத்திருக்கிறது சக்சேனாவை ஜாமீனில் எடுக்க பணம் பாதாளம் வரை பாய்ந்துக் கொண்டு இருக்கிறது. இனியும் யாரும் சன் பிக்சர்ஸ் மீது புகார் தரவேண்டாம் என்று அவசர அவசரமாக, யார் யாருக்கெல்லாம் பணம் நிலுவையில் இருந்ததோ  அனைவருக்கும் பணம் சுத்தமாக பட்டுவாட செய்யப்பட்டது.

ஆட்சி, அதிகாரம், அடாவடி, அத்துமீறல் போன்ற  போதை மனிதனை ஒரு நாள் சிறைக்குள் அனுப்பும் என்பதற்கு ஹன்சராஜ் சக்சேனா ஒரு உதாரணம். இந்தக் குறளி என்று தன் குகை திரும்பப் போகிறதோ.....தெரியவில்லை? 


அடுத்து.... ஷரத் குமார் ரெட்டி.
                   

  



ஹன்சராஜ் போன்று அடாவடி பார்ட்டி அல்ல சரத்குமார் ரெட்டி. படு டீசண்ட் பார்ட்டி.  கலாநிதியின் நண்பரான சரத் சன் டிவி தொடங்கும் போது இவரது பங்கும் உண்டு. இவருக்கும் இவரது நண்பர் கலாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இவர் சன் டிவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  கொஞ்சம் காலம் ஒதுங்கி இருந்த அவர், . கனிமொழியின் அழைப்பின் பேரில் கலைஞர் டிவியின் தலைமை  நிருவாகியானார்.  சரத் ரெட்டியின் சீரிய தலைமையால்  கலைஞர் டிவி தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே, சன் டிவிக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  

சன் டிவி சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு  குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப்பட்டு வந்ததுதான்.  கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.

இன்னிலையில் 214 கோடி பணம் கை மாறியதில் கலைஞர் டிவியும் பிரச்சைனையில் சிக்கிக்கொண்டது. கலைஞர் டிவிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து பணம் பெறப்பட்டது தொடர்பாக கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோரிடம் சிபிஐ முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோர் அந்த டிவியில் முறையே 20,60 மற்றும் 20 சதவீதப் பங்குகளை வைத்துள்ளதுள்ளனர்.


 2ஜி அலைக்கற்றை உரிமங்களைப்பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகக் கூறினாலும், அந்த நிதியை டிபி ரியா லிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கித் தந்ததற்கு லஞ்ச மாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டி குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்படியாக சரத் மற்றும் சக்சேனா இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் அசாத்திய திறமைப் படைத்தவர்கள்.  டிவி தொழிலில் நிபுனத்துவம் பெற்றவர்கள். தலைமை சொல்லை தட்டாமல் செய்பவர்கள். இருவருக்கும் தாய் மொழி தெலுங்கு. இப்படி அதிசய ஒற்றுமை கொண்ட இருவரும் இன்று இருப்பது சிறையில். ஒருவர் புழல் மற்றொருவர் திகார். 
அட! இரண்டு சிறைக்கும் ஓர் ஓற்றுமை இருக்கிறது தெரியுமா...?  இரண்டும் மூன்றெழுத்து!


1 கருத்து:

ஜோதிஜி சொன்னது…

இப்போது திமுக நிலை குறித்து தோழர் நல்லக்கண்ணு அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

அரசியல் என்பது ஒருவரை எந்த அளவுக்கு மேலே உயர்த்தி கொண்டு செல்கின்றதோ அந்த அளவுக்கு அதளபாதாளத்திற்கும் தள்ளிவிடக்கூடியது.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...