வியாழன், அக்டோபர் 23, 2014

வலி!



                  நாம் நமக்கான வாழ்வை வாழ்ந்துக் கொண்டு இருக்க...சிலர் தமக்கான வாழ்வு எது என்பதே தெரியாமல் மனத் தெளிவின்றி வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர்.

மழையா, வெயிலா, புயலா, தீபாவளியா, பொங்கலா? என்ற எந்தத் தெளிவும் இன்றி தமக்குத்தாமே பேசிக் கொண்டும், கட்டிலில் முடங்கியும் கிடக்கின்றனர். என்றோ விட்டுப் போன சொந்தங்கள் கூட தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் விசாரிப்பதில்லை. தப்பித்தவறி பண்டிகை நாட்களில் பார்க்க வரும் உறவினர்கள் கூட அவர்களை அழைத்துக் கொண்டு போய் பண்டிகையை கொண்டாட விரும்புவதில்லை.

மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தன்னார்வ அமைப்பு FRIENDS FOR THE NEEDY' Home for the mentally ill poor woman' என்ற அமைப்பு சென்னை திருமுல்லைவாயிலில் இயங்கி வருகிறது. கேரளா கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. தீபாவளிக்கான இனிப்புகளை வழங்கிய போது மேற்கண்ட தகவலை கூறினார் சிஸ்டர் லீமா ரோஸ். "நீங்கள்தான் சார், இன்னைக்கு ஸ்வீட் கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்க. இன்னிக்கான உணவுகளையும் நாங்கள்தான் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம்" என்றார்.

இத் தொண்டு நிறுவனத்தில் 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றனர். 18 வயதிலிருந்து 70 வயதுவரை வைத்து பராமரிக்கிறார்கள். எப்போதாவது அவர்களை விசாரித்து சிஸ்டர் லீமா ரோஸூக்கு போன் வருகிறது. நான் சென்றிருந்த சமயம், எம்சியே படித்த மன நலம் பாதிக்கப்பட்ட காயத்திரி என்ற பெண்ணிற்கு போன் வந்திருந்தது. எடுத்து ஏதேதோ பேசினார். அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை. 21வயது பெண் மனம் பேதலித்து இருப்பது அவருக்கு மட்டும் தண்டனை அல்ல?!.

உறவின் பார்வையிலிருந்து என்றோ விலக்கிவைக்கப்பட்டவர்கள், யாரோ ஒரு முகம் தெரியாதவர்களின் அரவணைப்பில்தான் தங்கள் காலத்தை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆதரவற்று, நிராகரிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தின் பார்வையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு இன்னும் எத்தனை எத்தனையோ பேர் இருட்டு அறைகளிலும், நாலு சுவர்களிலும் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தீபாவளி பொங்கல் போன்ற எந்த பண்டிகையும் கிடையாது.

நாம் நமக்கான வாழ்வை வாழ்கிறோம்!. அவர்கள் அவர்களுக்கான வாழ்வை வாழ்வதில்லை!.

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனதில் வலிக்கிறது ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.

இந்த வலியே மனிதம் மேலான நமக்கான வலிமையைத் தருகிறது அய்யா!.

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையாக இருக்கிறது.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...