எனது நண்பன் அஸ்ரி வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிகின்றான். ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை எனக்கு ( ஈமெயில் ) அனுப்பி இருந்தான். படிக்க படிக்க மனசு வலித்தது. யாரோட (?) போதைக்கோ இவர்களை ஊறுகாயாக பயன்படுத்தி விட்டார்கள். சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!
'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது!
விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.
அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.
''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை.
''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல..
வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.
வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.
கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..
''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல.
ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க!
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது.
''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.
பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்..
''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்..
''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள்.
ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.
சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,
''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார்.
இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?