சனி, ஜூன் 16, 2012

தமிழ் நாட்டில் லாட்டரியை தடை செய்து 10 ஆண்டாகிவிட்டது!

அதிஷ்டம் இல்லாத லாட்டரி?



         

             இன்றைய டாஸ்மாக் போல் அன்று திரும்பிய பக்கமெல்லாம் லாட்டரி கடைதான். தெருவுக்கு நாலு டீ கடை இருக்கிறதோ இல்லையோ பத்து லாட்டரி சீட்டு கடை இருக்கும்.  லாட்டரியின் பிடியில் தமிழகம் இருந்தது என்றுகூட சொல்லலாம்.   வயது வரம்பு இல்லாமல் எல்லோரும் லாட்டரியை சுரண்ட, லாட்டரி இவர்களை சுரண்டியது.


 லாட்டரியை தமிழ் நாட்டில் தடை செய்து 10 வருடமாகிவிட்டது.  அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு லாட்டரி பல வருடங்களாக தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பறந்திருந்தது.   2002ம் வருடத்தில் அன்றைய ஜெயலலிதா அரசால் தடைவிதிக்கப்பட்ட லாட்டரி,    அன்றிலிருந்து இன்று வரை  தமிழ்நாட்டில் மீண்டும் எழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.



அண்ணா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டுத் திட்டம் என்ற பெயரில் லாட்டரி சீட்டுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தியிருந்தார்.  தமிழ்நாடு, சிக்கிம், பூட்டான், பஞ்சாப், மேகாலயா, கேரளா, அருணாச்சலபிரதேசம் என்று பல மாநிலங்கள்  தங்கள் பெயரிலேயே லாட்டரி சீட்டை நடத்திவந்தன.  அன்றைய காலகட்டத்தில் தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, ரம்ஜான், கிருஸ்துமஸ் என்று அனைத்து பண்டிகைகளுக்கும் மத பாகுபாடு இல்லாமல் லாட்டரி சீட்டு வெளியிடப்படும்.

 

கடைகளில் லாட்டரி சீட்டு விற்பனை போதாதென்று, தனி நபர் மூலமும் விற்பனை சக்கைபோடு போடும்.   பேருந்து நிலையத்தில், மக்கள் கூடும் இடத்தில், பேருந்தில் என்று  அனைத்து இடத்திலும் விற்பனை கன ஜோரா நடக்கும்.   "சார், ஒரு கோடி பம்பர், தமிழ் நாடு லாட்டரியின் ஒரு கோடி. நீங்களும் லட்சாதிபதியாகலாம். வாங்க சார் வாங்க" என்று கூவி கூவி கோடிகளை விற்பார்கள்.

லாட்டரி குலுக்கலில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாலும், ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பதாலும், லாட்டரிக்கு தடை விதிப்பதை இவை எதிர்த்து வருகின்றன. ஆனால், ஏழை மக்களை அடிமையாக்கும் சூதாட்டம் என்பதால், மற்ற மாநில அரசுகள் லாட்டரி திட்டத்தை எதிர்த்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

()()()()()()()()

                      1995ம் வருடம் அப்போதுதான் நான் சென்னை வந்து 'தினபூமி' நாளிதழில் விளம்பரப் பிரிவில் சேர்ந்திருந்தேன்.  கல்லூரி முடிந்து 20 நாட்கள்தான் ஆகியிருந்தது.  சென்னையும் புதிது, பத்திரிகை வேலையும் புதிது.  தினபூமி அலுவலகம் சென்னையில் எல்ஐசி பின்புறம் பார்டர் தோட்டத்தில் இருந்தது.  தினபூமி என்று பெயர் பலகை இருந்தாலும், 'அதிஷ்டம்' லாட்டரி நாளிதழ்தான் இதன் பின்புலம் என்று சேர்ந்த உடனே தெரிந்துக் கொண்டேன். அந்தளவிற்கு 'அதிஷ்டம்' அங்கு கோலோச்சியது!.

'அதிஷ்டம்தான் தமிழ் நாட்டில் லாட்டரிக்காக வெளிவந்த முதல் நாளிதழ்.  அனைத்து  லாட்டரி சீட்டின் முடிவுகளும் அதிஷ்டத்தில் வெளிவரும். இதுமட்டுமல்லாமல் லாட்டரி விளம்பரம், லாட்டரி கடைகளின் விளம்பரம், பரிசு பெற்றவர்களின் விபரம் என்று அனைத்து விபரங்களும் அடங்கி வெளிவரும்.

அதுவும் விளம்பரத்திற்கு கேட்கவே வேண்டாம்.   பக்கம் கொள்ளாமல்  விளம்பரம் வந்து  பிதுங்கித் தள்ளும். , " அதிஷ்டம் பேப்பரை எடுத்து சும்மா.... ஒரு உதறு உதறினால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்" என்று நான்  விளையாட்டாக சொல்வதுண்டு. அந்தளவிற்கு விளம்பர வருவாய் இருக்கும்.

லாட்டரி சீட்டின் தலைநகரம் என்றால் 'சிக்கிம் கேங்டாக்தான்'.   பெரும்பாலான லாட்டரிகள் அங்கிருந்துதான் வெளிவரும்.  `குலுக்கலும் அங்குதான் நடைபெறும்.   காலம் சென்ற நண்பர் சுப்ரமணியன் (தொப்பி) சிக்கிமில் இருந்து செய்திகளையும் குலுக்கல் விபரங்களையும் அனுப்புவார்.  சிக்கிம் மாநில அரசோடு மிக நெருக்கமான பிணைப்பை வைத்திருந்தனர் தமிழகத்தில் இருந்த லாட்டரி உரிமையாளர்கள்.

அதிஷ்டம் நாளிதழில்  பணிபுரிந்தவர்களுக்குகெல்லாம் நல்ல கவனிப்பு நடைபெறும். தினபூமியில் இருக்கும் என்னை போன்ற புது முகங்கள்,   அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியாது.  அப்படி ஒரு கட்டுப்பாடு.


சிக்கிமிலிருந்து வரும் குலுக்கல் முடிவுகளை, அச்சில் ஏற்றுவதற்கு முன்னர் சரிபார்ப்பார்கள். ஒருவர் கடகடவென்று மின்னல் வேகத்தில் எண்களை வாசிக்க, ஒருவர் அதே வேகத்தில் சரிபார்ப்பார்.    பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்!.

()()()()()()()()

          மதுரை கே.ஏ.எஸ். சேகர்,  திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ், மார்ட்டின் லாட்டரி, உஸ்மான் ஃபயாஸ்,  ஆரூண் பாய் போன்றவர்கள் அந்நாளில் லாட்டரி பிசினஸில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.  அவர்கள் பிடியில்தான் தமிழ்நாடு லாட்டரி வர்த்தகம் இருந்தது. 

Add caption
 லாட்டரியை இழுத்து மூடுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர்தான், அப்போதைய தினகரன் நாளிதழ் 'யோகலட்சுமி' என்ற நாளிதழை லாட்டரிக்காகத்  தொடங்கியது.  அதுநாள் வரையில்  மோனாப்புலியாக இருந்த 'அதிஷ்டம்' நாளிதழுக்கு அதிர்ச்சி!.

தொடங்கிய கொஞ்சம் நாளையிலேயே 'யோகலட்சுமி' சூடு பிடிக்கத் தொடங்கியது.  இருந்தாலும் 'அதிஷ்டம்தான் ஒரு நிலையான நம்பிக்கையான லாட்டரி நாளிதழ் என்ற பெயரில் இருந்து வந்தது. தமிழ்  மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று நான்கு மொழிகளில் வெளிவந்தது. 

பின்னர்தான் எல்லாமே மாறிப் போனது, சடாரென்று ஒரு நாள் தமிழக அரசு லாட்டரியைத் 2002ல்  தடை செய்தது. அதற்குப் பிறகு என்னன்னவோ.... பிரம்மபிரயத்தனம் செய்துப் பார்த்தார்கள் லாட்டரி உரிமையாளர்கள். ஒன்றும் வேலைக்காகவில்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்,  லாட்டரிக்கான அதிஷ்டம் நாளிதழின் குழுமத்திலிருந்து வெளிவரும் 'தினபூமி',  ஜெயலலிதா அரசை கண்மூடித்தனமாக ஆதரித்ததுதான்!.  தினபூமி மற்றும் அதிஷ்டம் நாளிதழ்  நிறுவனரான மணிமாறனின் மூத்த சகோதரர்தான் லாட்டரி உலகின் முடிசூடா மன்னன் மதுரை கே.எஸ். சேகர் என்பது இங்கு குறிப்பிடித்தக்கது.

ஜெயா அரசு போய், வேறு அரசு ஆட்சிக்கு வந்தால் காட்சி மாறும் என்று நினைத்தார்கள் லாட்டரி உரிமையாளர்கள்.   ஆனால், நடந்ததோ வேறு!.  பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசும் அதே நிலைப்பாட்டை தொடர்ந்தது ஆச்சரியமான ஒன்று.  லாட்டரியை நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு வேதனையான ஒன்று.

()()()()()()()

          ன்னிலையில் நாடு முழுவதும் லாட்டரிக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட உள்ளது.  1998ம் ஆண்டு இது தொடர்பாக மசோதா உருவாக்கப்பட்டது. அனைத்து மாநில உள்துறை அமைச்சகங்களின் ஒருமித்த கருத்தோடு, இது தொடர்பான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் லாட்டரியை எதிர்த்தாலும், சில மாநிலங்களில் அவை அனுமதிக்கப்பட்டுள்ளன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

 பழைய நடைமுறைப்படி விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகள் மீது மோகம் குறைந்து, ஆன்-லைன் லாட்டரி குலுக்கல் முறை பெரிதும் அதிகரித்துள்ளது வேதனையான ஒன்று.

தற்போது பத்து வயதாகும் இளம் சிறாருக்கு 'லாட்டரி சீட்டு' என்றால் என்னவென்றே தெரியாது.....! அதேபோல் 'டாஸ்மாக்கும்' இருந்தால் எப்படி இருக்கும்.....?!



5 கருத்துகள்:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

good nostalgia post sir. especially the last line of the post is excellent.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, பழைய தகவல்கள் நிறைந்த பதிவு.
நன்றி.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Suresh, Thanks for your valuable Comment.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Rathnavel Natarajan, தங்களது விமர்சனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

gururanjith சொன்னது…

நான் தமிழ் நாட்டில் வசிப்பவன் நான் ஆன்லைன் லாட்டரி சீட்டு ஆ

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...